அடேங்கப்பா... செம்ம ஸ்டைலாக மஹிந்திராவின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்!! அறிமுக தேதி எப்போ தெரியுமா?
மஹிந்திரா நிறுவனம் தனது புதிய எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் கார் தொடர்பான புதிய டீசர் வீடியோவினை தனது யுடியூப் சேனலில் வெளியிட்டுள்ளது. அந்த டீசர் வீடியோவினை படங்களாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

எலக்ட்ரிக் கார்களுக்கு அதிகரித்துவரும் தேவையை அடுத்து, மஹிந்திரா & மஹிந்திரா தனது எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களை அடுத்த சில வருடங்களில் ஒன்றன்பின் ஒன்றாக வெளியிடவுள்ளதாக அறிவித்திருந்தது. அதன்படி, இந்த எலக்ட்ரிக் எஸ்யூவிகளில் முதல் மாடலாக எக்ஸ்யூவி400 காரை விரைவில் மஹிந்திரா வெளியீடு செய்ய உள்ளது.

தற்சமயம் விற்பனையில் இருக்கும் எக்ஸ்யூவி300-இன் எலக்ட்ரிக் வெர்சனாக கொண்டுவரப்படும் இது டாடா மோட்டார்ஸின் நெக்ஸான் இவி காருக்கு நேரடி போட்டி மாடலாக விளங்கும். 2020இன் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டாடாவின் நெக்ஸான் இவி தான் தற்சமயம் இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் எலக்ட்ரிக் காராக உள்ளது.

இதனை மனதில் வைத்துதான் நெக்ஸான் இவி-ஐ போல் காம்பெக்ட் எஸ்யூவி உடலமைப்பில் புதிய எலக்ட்ரிக் காரை கொண்டுவரும் திட்டத்தில் மஹிந்திரா இறங்கியது. இது 2022, நெக்ஸான் இவி அறிமுகப்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட 2.5 வருடங்கள் ஆகிவிட்டன. மஹிந்திரா இந்த எலக்ட்ரிக் கார்கள் ரேஸில் சற்று தாமதமாகவே நுழைகிறது. எக்ஸ்யூவி400 காரை வருகிற செப்டம்பர் 8ஆம் தேதி மஹிந்திரா அறிமுகப்படுத்த உள்ளது.

அதனை தெரிவிக்கும் விதமாகவே தற்போது இந்த டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோவில் புதிய எக்ஸ்யூவி400 காரின் தோற்றத்தையும் ஓரளவிற்கு தெளிவாகவே காண முடிகிறது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக, காரின் முன்பக்கத்தையும், அங்கு பொருத்தப்பட்டுள்ள மஹிந்திரா பிராண்டின் புதிய லோகோவையும் இந்த டீசரில் தெளிவாக காண முடிகிறது.

காரின் பின்பக்கத்தில் 'எக்ஸ்யூவி400' முத்திரையையும் இந்த வீடியோவில் காட்டியுள்ளனர். ஆனால் இவை எல்லாவற்றையும் விட காருக்கு கொடுக்கப்பட்டுள்ள எலக்ட்ரிக் நீல நிறம் பார்ப்போரை வெகுவாக கவர்ந்துள்ளது. ஆகையால் புதிய எக்ஸ்யூவி400-இன் விற்பனையில் இந்த நீல நிறம் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கத்தில் ஹெட்லேம்ப்களும், எல்இடி டிஆர்எல்-களும் எக்ஸ்யூவி300 காரில் இருப்பதை போல் உள்ளன.

காரின் உடல் தோற்றத்தை முழுவதுமாக காண முடியாவிடினும், காரின் பக்கவாட்டில் வழங்கப்பட்டுள்ள கூர்மையான லைன்களை கொண்ட பேனல்கள், முதன்முதலாக மஹிந்திரா வெளியிட்ட தனது எதிர்கால எஸ்யூவிகளுக்கான கான்செப்ட் மாதிரிகளில் பயன்படுத்தப்பட்டு இருந்தன. மூடப்பட்டதாக இருக்கும் முன்பக்க க்ரில் பகுதியில் 'X' வடிவில் குழிகள் அதிக எண்ணிக்கையில் டிசைன்களாக கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் மஹிந்திரா லோகோவிற்கு அருகில் உள்ள சில குழிகளில் மட்டும் க்ரோம்கள் அம்புக்குறிகள் போன்று வழங்கப்பட்டுள்ளன. இவற்றை பார்க்கும்போது, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்ஸான் இவி காரின் முன்பக்க க்ரில் பகுதியில் வழங்கி வரும் 3-அம்பு டிசைன் தான் ஞாபகத்திற்கு வருகிறது. இதுமட்டுமின்றி, நெக்ஸான் இவி-ஐ போல் சார்ஜிங் நிரப்பும் பகுதியையும் மஹிந்திரா எக்ஸ்யூவி400 மாடல் பக்கவாட்டில் கொண்டுள்ளதை தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் வீடியோவில் காண முடிகிறது.

ஆனால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மற்ற எலக்ட்ரிக் கார்களான எம்ஜி இசட்.எஸ் இவி மற்றும் ஹூண்டாய் கோனோ உள்ளிட்டவை முன்பக்கத்தில் சார்ஜ் செய்யும் பகுதியையும் கொண்டுள்ளன. ஏற்கனவே கூறியதுபோல், எக்ஸ்யூவி300 காரை உருவாக்க பயன்படுத்திவரும் பிளாட்ஃபாரத்தை சற்று திருத்தியமைத்துதான் புதிய எக்ஸ்யூவி400-ஐ உருவாக்க பிளாட்ஃபாரத்தை மஹிந்திரா வடிவமைத்துள்ளது.

இதனாலேயே எக்ஸ்யூவி300 காரில் தற்சமயம் பொருத்தப்படும் பாகங்களில் சிலவற்றை புதிய எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் காரும் கொண்டிருக்கும் என்பது உறுதி. மேலும், எக்ஸ்யூவி300 மாடலை போல் பல்வேறு வசதிகளை காம்பெக்ட் எஸ்யூவி எலக்ட்ரிக் கார் பிரிவிலேயே முதல்முறையாக எக்ஸ்யூவி400 பெற்றுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய எக்ஸ்யூவி400 கார் 4.2 மீட்டர்களில் நன்கு நீளமானதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனாலேயே உட்புற டேஸ்போர்டில் நன்கு பெரியதாக 8-இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் காரில் வழங்கப்படும் என அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனுடன், இந்திய எலக்ட்ரிக் கார்களிலேயே முதல்முறையாக ADAS தொகுப்பையும் எக்ஸ்யூவி400 பெற்றுவரலாம்.


Click it and Unblock the Notifications








