ரூ. 21000 போதும்... மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை நீங்களும் புக் செய்யலாம்! முன்பதிவு நாளை முதல் தொடக்கம்!
மஹிந்திரா (Mahindra) நிறுவனம் அதன் ஸ்கார்பியோ-என் (Scorpio-N) காருக்கான புக்கிங் பணிகளை நாளை முதல் தொடங்க இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்கார்பியோ-என் (Scorpio-N) காரை இந்திய சந்தையில் அண்மையில் அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கான புக்கிங் பணிகளே நாளை (ஜூலை 30) முதல் நிறுவனம் தொடங்க இருக்கின்றன. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலை தளம் அல்லது மஹிந்திரா கார் விற்பனையாளர்கள் வாயிலாக வாடிக்கையாளர்கள் தங்களுக்கான ஸ்கார்பியோ என் காரை புக் செய்து கொள்ளலாம் என மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.

முன் தொகைக்கான கட்டணம் ரூ. 21 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 'ஃபர்ஸ்ட் கம் ஃபர்ஸ் சர்வ்' எனும் திட்டத்தின்கீழ் புக்கிங்குகளை ஏற்க இருப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது. 'முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' என்பதே இந்த திட்டத்தின் பொருளாகும். மேலும், வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் வேரியண்டை டெலிவரி டைம் மாறுபடும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.

மஹிந்திரா நிறுவனம் ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான தேர்வுகளில் புதிய ஸ்கார்பியோ என் காரை விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இசட்2, இசட்4, இசட்6, இசட்8 மற்றும் இசட்8எல் ஆகிய வேரியண்டுகளிலேயே புதிய ஸ்கார்பியோ என் கார் விற்பனைக்குக் கிடைக்க உள்ளது. இதில், ஆரம்ப நிலை வேரியண்டாக இசட்2 இருக்கின்றது.

இதன் விலை ரூ. 11.99 லட்சம் ஆகும். அதேவேலையில், இதன் உயர் நிலை வேரியண்டான இசட்8எல் டீசல் தானியங்கி தேர்வு ரூ. 21.45 லட்சம் என்ற உச்சபட்ச விலையில் விற்பனைக்குக் கிடைக்கும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இதுமட்டுமில்லைங்க, இது அறிமுக ஆஃப்ர் விலை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதாவது, முதலில் ஸ்கார்பியோ என் காரை புக் செய்யும் 25 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே மேலே குறிப்பிட்ட விலையில் அக்காரை நிறுவனம் வழங்க இருக்கின்றது. ஆகையால், 26 ஆயிரமாவதாக ஸ்கார்பியோ என் காரை புக் செய்யும் வாடிக்கையாளர்கள் சற்று அதிக விலையில் அக்காரை வாங்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை புக் செய்த வாடிக்கையாளர்கள் தங்களுக்கான ஸ்கார்பியோ என் காரின் கலர் மற்றும் வேரியண்டை பிடித்த வண்ணம் மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்திருக்கின்றது. ஆனால், ஆகஸ்டு 15ம் தேதி நள்ளிரவு வரையில் மட்டுமே இந்த மாற்றத்தைச் செய்து கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதவிர, அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் ஆகிய செயலிகளில் இருப்பதைப் போல வாடிக்கையாளர்கள் தங்களுக்கான ஸ்கார்பியோ என் காரை 'ஆட்-டூ-கார்ட்' (Add to Cart) செய்து கொள்ளும் வசதியையும் மஹிந்திரா அறிமுகம் செய்திருக்கின்றது. இதன் வாயிலாக வாடிக்கையாளர்கள் தங்களுக்கான ஸ்கார்பியோ என் காரை தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ள முடியும்.

புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வரும் 26 செப்டம்பர் முதல் கார்களை டெலிவரி வழங்க திட்டமிட்டிருக்கின்றது மஹிந்திரா நிறுவனம். வரும் பண்டிகைக் காலத்தை புதிய காருடன் செலபிரேட் செய்யும் விதமாக டெலிவரி பணிகள் செப்டம்பரில் தொடங்கப்பட இருக்கின்றது. இதன்படி 2022 டிசம்பருக்குள் மொத்தமாக 20 ஆயிரம் ஸ்கார்பியோ என் கார்களை டெலிவரி வழங்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

மஹிந்திரா நிறுவனம் இந்த காரை சிறப்பு நிதி திட்டத்தின் வாயிலாக கவர திட்டமிட்டிருக்கின்றது. 100 சதவீதம் நிதி, பத்தாண்டுகள் இஎம்ஐ திட்டம் மற்றும் 6.99 சதவீதம் என்கிற மிகக் குறைவான வட்டி ஆகிய சிறப்பு திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு மஹிந்திரா வழங்க இருக்கின்றது. 10 ஆண்டுகள் மட்டுமின்றி 7 மற்றும் 8 இஎம்ஐ திட்டமும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றது.

இந்த திட்டங்களின் வாயிலாக மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் விற்பனை பல மடங்கு சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கார் பெட்ரோல், டீசல் ஆகிய இரு மோட்டார் தேர்விலும், 6 மற்றும் 7 சீட்டர் தேர்வுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கும். இதுமட்டுமின்றி, நவீன கால தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட வாகனமாகும் இக்கார் உருவாக்கப்பட்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








