30 நிமிஷத்துல 1 லட்சம் புக்கிங்! மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை முழு வீச்சில் டெலிவரி பண்ண போறாங்க! புது தகவல்!
மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் டெலிவரி தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் முதன்மையான எஸ்யூவி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக மஹிந்திரா (Mahindra) திகழ்கிறது. மஹிந்திரா நிறுவனம் சமீப காலமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யும் அனைத்து எஸ்யூவி (SUV) கார்களுக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் உற்சாகமான வரவேற்பு கிடைத்து வருகிறது. நிறைய பேர் முன்பதிவு செய்வதால், மஹிந்திரா நிறுவனத்தால் கார்களை சரியாக டெலிவரி செய்ய முடிவதில்லை.

போதாக்குறைக்கு மிகவும் முக்கியமான செமி கண்டக்டர் சிப்களுக்கு தற்போது பற்றாக்குறை வேறு நிலவி வருகிறது. இதனால் கார் உற்பத்தியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இவை எல்லாம் ஒன்று சேர்ந்து, மஹிந்திரா கார்களுக்கான காத்திருப்பு காலத்தை வெகுவாக உயர்த்தி விட்டுள்ளன. ஒரு சில மாடல்கள் மற்றும் வேரியண்ட்களுக்கு, 2 வருடங்கள் வரை காத்திருப்பு காலம் நிலவி வருகிறது.

மஹிந்திரா நிறுவனத்தின் தார் (Mahindra Thar), எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) மற்றும் பொலிரோ (Mahindra Bolero) ஆகிய கார்களுக்கு ஏற்கனவே ஒட்டுமொத்தமாக 1.40 லட்சம் முன்பதிவுகள் குவிந்துள்ளன. இந்த சூழலில் புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N) காரும் முன்பதிவுகளை குவிப்பதில் சாதனைகளை படைக்க தொடங்கியுள்ளது.

முன்பதிவு தொடங்கப்பட்ட 1 நிமிடத்திற்கு உள்ளாகவே மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்து விட்டனர். இதை தொடர்ந்து வெறும் 30 நிமிடங்களுக்கு உள்ளாக, அதாவது அரை மணி நேரத்தில், மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை ஒட்டுமொத்தமாக 1 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்து விட்டனர்.

இதன் காரணமாக மஹிந்திரா நிறுவனம் தற்போது 2.40 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகளை கையில் வைத்துள்ளது. அதாவது 2.40 லட்சத்திற்கும் மேற்பட்ட கார்களை மஹிந்திரா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய வேண்டியுள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் கார்களுக்கு முன்பதிவுகள் குவிந்து வரும் நிலையில், முன்பதிவுகளை கேன்சல் செய்வது மிகவும் குறைவாகவே நடந்து வருகிறது.

தற்போதைய நிலையில் வெறும் 10 சதவீதம் என்ற அளவில்தான் முன்பதிவுகள் கேன்சல் செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி இருக்கும்போது, செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறை பிரச்னையும் நிலவி வரும் நிலையில், மஹிந்திரா நிறுவனம் எப்படி இத்தனை கார்களையும் டெலிவரி செய்ய போகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த சூழலில், புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் டெலிவரி தொடர்பாக தற்போது முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் டெலிவரி பணிகள் வரும் செப்டம்பர் 26ம் தேதி (September 26) தொடங்கப்படவுள்ளது. இந்த காரின் முதல் 25 ஆயிரம் முன்பதிவுகளுக்கான சராசரி காத்திருப்பு காலம் வெறும் 4 மாதங்களாக மட்டுமே இருக்கும்.

வரும் செப்டம்பர் 26ம் தேதி, நவராத்திரி திருவிழாவின் முதல் நாள் ஆகும். எனவேதான் அன்றைய தினம் மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ என் காரின் டெலிவரி பணிகளை தொடங்குகிறது. டெலிவரி தொடங்கப்பட்ட முதல் 10 நாட்களுக்குள் 7 ஆயிரம் ஸ்கார்பியோ என் கார்களை டெலிவரி செய்வதற்கு மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் டிவிஷன் தலைவர் வீஜே நாக்ரா கூறுகையில், ''நவராத்திரி பண்டிகையின்போது மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரின் டெலிவரி பணிகளை தொடங்குவது மகிழ்ச்சியளிக்கிறது. முழு வீச்சில் கார்களை உற்பத்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம். நாங்கள் கார்களை வேகமாக டெலிவரி செய்வதற்கு எங்களது அதிநவீன உற்பத்தி பிரிவு உதவி செய்யும்'' என்றார்.

மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் டெலிவரி பணிகள் தொடங்கப்படவிருப்பது, அந்த காரை முன்பதிவு செய்து விட்டு காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சந்தையில் டாடா சஃபாரி (Tata Safari), எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் (MG Hector Plus) மற்றும் ஹூண்டாய் அல்கஸார் (Hyundai Alcazar) ஆகிய கார்களுடன் மஹிந்திரா ஸ்கார்பியோ என் போட்டியிடுகிறது. அத்துடன் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கும் இது போட்டியாக அமையும்.


Click it and Unblock the Notifications








