மூட்டை மூட்டையா பணத்தை கொட்டினாலும் உடனே தர மாட்டாங்க! இந்த கார்கள் வேணும்னா முனிவர்கள் மாதிரி தவம் இருக்கணும்
நீங்கள் எவ்வளவுதான் பணத்தை கொட்டி கொடுத்தாலும் ஒரு சில கார்களை உடனடியாக டெலிவரி செய்ய மாட்டார்கள். அந்த கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
பொதுவாக ஒரு காரை நீங்கள் முன்பதிவு செய்தால், உடனடியாக டெலிவரி செய்ய மாட்டார்கள். ஒவ்வொரு காருக்கும் குறிப்பிட்ட அளவு காத்திருப்பு காலம் இருக்கும். இதனை ஆங்கிலத்தில் 'வெயிட்டிங் பீரியட்' (Waiting Period) என சொல்வார்கள்.

அந்த காத்திருப்பு காலத்திற்கு பிறகுதான் உங்களுக்கு கார் டெலிவரி செய்யப்படும். ஒரு சில கார்களுக்கு ஒரு சில மாதங்கள் காத்திருப்பு காலமாக இருக்கும். வேறு சில கார்களுக்கு வருடக்கணக்கில் கூட காத்திருப்பு காலம் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. வாடிக்கையாளர்கள் மத்தியில் உள்ள வரவேற்பு மற்றும் உற்பத்தி திறன் ஆகியவற்றை பொறுத்து, ஒவ்வொரு காருக்கும் காத்திருப்பு காலம் மாறுபடும்.
நடப்பு நவம்பர் மாதத்தில் மிகவும் அதிக காத்திருப்பு காலம் கொண்ட முக்கியமான 5 கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம். தற்போதைய நிலையில் மிகவும் அதிக காத்திருப்பு காலம் கொண்ட காராக இருப்பது மஹிந்திரா ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N) ஆகும். தேர்வு செய்யும் வேரியண்ட்டை பொறுத்து இந்த காருக்கு சுமார் 24 மாதங்கள் வரை காத்திருப்பு காலமாக உள்ளது.
நீங்கள் மனதிற்குள் நினைத்தது சரிதான். ஆம், மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை முன்பதிவு செய்தால், வேரியண்ட்டை பொறுத்து, கிட்டத்தட்ட நீங்கள் 2 வருடங்கள் வரை காத்திருக்க வேண்டும். அதற்கு பிறகுதான் உங்களுக்கு கார் டெலிவரி செய்யப்படும். ஆனால் மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ என் காரின் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
உற்பத்தி அதிகரிக்கப்படும்பட்சத்தில், காத்திருப்பு காலம் குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மஹிந்திரா ஸ்கார்பியோ என் காருக்கு இந்திய சந்தையில் எவ்வளவு பெரிய டிமாண்ட் இருக்கிறது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார் சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
முன்பதிவு தொடங்கப்பட்ட வெறும் அரை மணி நேரத்திலேயே 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை முன்பதிவு செய்து விட்டனர். புத்தம் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரில், 2.0 லிட்டர் mStallion டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் mHawk டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை போலவே, கியா கேரன்ஸ் (Kia Carens) காருக்கான காத்திருப்பு காலமும் மிகவும் அதிகமாக உள்ளது. கியா கேரன்ஸ் காரை நீங்கள் முன்பதிவு செய்தால், டெலிவரி பெறுவதற்கு வேரியண்ட்களை பொறுத்து 19 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். கியா கேரன்ஸ் காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
அவை 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.4 லிட்டர் GDI பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் ஆகும். இந்த பட்டியலில் நாம் அடுத்து பார்க்க இருப்பது மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700). இந்த காருக்கான காத்திருப்பு காலம் தற்போதைய நிலையில் வேரியண்ட்களை பொறுத்து, 17 மாதங்களாக உள்ளது.
மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரில் வழங்கப்பட்டுள்ள அதே இன்ஜின் ஆப்ஷன்கள்தான் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரிலும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் அடுத்து வருவது கியா செல்டோஸ் (Kia Seltos) கார் ஆகும். இந்த காருக்கு தற்போதைய நிலையில் வேரியண்ட்களை பொறுத்து, 10 மாதங்கள் வரை காத்திருப்பு காலமாக இருக்கிறது.
இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். கியா செல்டோஸ் காரின் மிக முக்கியமான போட்டியாளரான ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) காருக்கு வேரியண்ட்களை பொறுத்து 8 மாதங்கள் வரை காத்திருப்பு காலமாக உள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் கார்களின் புதிய ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல்கள் வரும் ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








