மாஸ் காட்டும் மஹிந்திரா கார்... செக் வைக்க புதிய ஆயுதத்தை கையில் எடுக்கும் மாருதி சுஸுகி... கெத்தா வரப்போகுது!
மஹிந்திரா தார் எஸ்யூவி விற்பனையில் மாஸ் காட்டி வரும் நிலையில், அதற்கு செக் வைக்க மாருதி சுஸுகி நிறுவனம் தயாராகி வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இரண்டாவது தலைமுறை தார் எஸ்யூவியை மஹிந்திரா நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த எஸ்யூவி இந்திய சந்தையில் உடனடியாக 'ஹிட்' அடித்தது. புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவியை சொந்தமாக்க வாடிக்கையாளர்கள் தற்போது போட்டி போட்டு கொண்டுள்ளனர்.

வாடிக்கையாளர்கள் மத்தியில் கிடைத்து வரும் அமோக வரவேற்பு காரணமாக, மஹிந்திரா தார் எஸ்யூவி காருக்கான காத்திருப்பு காலம் 1 வருடம் வரை நீண்டுள்ளது. எனவே வாடிக்கையாளர்களுக்காக விரைவாக டெலிவரி செய்வதற்காக மஹிந்திரா நிறுவனம், புதிய தலைமுறை தார் எஸ்யூவியின் உற்பத்தியை அதிகரித்துள்ளது.

மஹிந்திரா நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெறும் 2,842 தார் எஸ்யூவிக்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பு 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்த தார் எஸ்யூவிக்களின் எண்ணிக்கை 5,072 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் மஹிந்திரா தார் எஸ்யூவியின் விற்பனை 78.47 சதவீதம் உயர்ந்துள்ளது.

வருடாந்திர விற்பனை எண்ணிக்கையில் மட்டுமல்லாது, மாதாந்திர விற்பனை எண்ணிக்கையிலும் மஹிந்திரா தார் எஸ்யூவி வளர்ச்சியைதான் பதிவு செய்துள்ளது. மஹிந்திரா நிறுவனம் நடப்பு 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 4,646 தார் எஸ்யூவிக்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. அதன்பின் வந்த பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 5,072 ஆக உயர்ந்துள்ளது. இது 9.17 சதவீத வளர்ச்சியாகும்.

இந்திய சந்தையில் மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு ஒரே ஒரு நேரடி போட்டியாளர் மட்டுமே இருக்கிறது. அது ஃபோர்ஸ் கூர்கா ஆகும். இதில், ஃபோர்ஸ் கூர்காவின் விற்பனை எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் பொது வெளியில் கிடைக்கவில்லை. எனவே மஹிந்திரா தார் மற்றும் ஃபோர்ஸ் கூர்கா ஆகியவற்றின் விற்பனை எண்ணிக்கையை நம்மால் ஒப்பிட இயலாது.

இதற்கிடையே மாருதி சுஸுகி நிறுவனம் இந்திய சந்தையில் ஜிம்னியை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள மாருதி சுஸுகி ஜிம்னி இந்திய சந்தையில் விரைவில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நடக்கும்பட்சத்தில், மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு மற்றொரு போட்டியாளராக மாருதி சுஸுகி ஜிம்னி திகழும்.

மஹிந்திரா தார் எஸ்யூவியில் மொத்தம் 2 இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 150 பிஎஸ் பவரையும், 320 என்எம் டார்க் (மேனுவல் வேரியண்ட்களில் 300 என்எம்) திறனையும் உருவாக்க கூடியது. இதுதவிர 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் தேர்வும் மஹிந்திரா தார் எஸ்யூவியில் வழங்கப்படுகின்றன.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 130 பிஎஸ் பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. ட்ரான்ஸ்மிஷன் பணிகளை பொறுத்தவரை, மஹிந்திரா தார் எஸ்யூவியில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதுதவிர மஹிந்திரா தார் எஸ்யூவியில் பல்வேறு வசதிகளும் வழங்கப்படுகின்றன.

புதிய தலைமுறை தார் எஸ்யூவியை தொடர்ந்து, மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த எக்ஸ்யூவி700 எஸ்யூவிக்கும் இந்திய சந்தையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ' இந்தியன் கார் ஆஃப் தி இயர் 2022' விருதை வென்றுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு, 1 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன.

மஹிந்திரா தார் எஸ்யூவியை போல், எக்ஸ்யூவி700 எஸ்யூவிக்கும் மிக நீண்ட காத்திருப்பு காலம் நிலவுகிறது. இந்த எஸ்யூவிக்கு ஒன்றரை ஆண்டுகள் வரை காத்திருப்பு காலம் நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, வாடிக்கையாளர்களுக்கு விரைவாக டெலிவரி செய்யும் பொருட்டு, எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் உற்பத்தி பணிகளையும் மஹிந்திரா நிறுவனம் அதிகரித்துள்ளது.

ஆனால் ஒரே நேரத்தில் 2 எஸ்யூவிகளுக்கு மிக பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளதால், மஹிந்திரா நிறுவனம் உற்பத்தி பணிகளில் சற்று தடுமாறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போதாக்குறைக்கு செமி கண்டக்டர் சிப்களுக்கான பற்றாக்குறை பிரச்னையும் கூட சேர்ந்து கொண்டுள்ளது. இந்த பிரச்னையால், மஹிந்திரா மட்டுமின்றி, உலகின் பெரும்பாலான முன்னணி கார் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








