561 சதவீத விற்பனை வளர்ச்சி... இவ்ளோ சூப்பரான விஷயங்கள் இந்த காருல இருந்தா யாருதான் வாங்க மாட்டாங்க!
மஹிந்திரா தார் (Mahindra Thar) எஸ்யூவி கார் 2020ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 2021ம் ஆண்டில் 561 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் சுவாரஷ்ய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவின் மிக பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக மஹிந்திரா மற்றும் மஹிந்திரா (Mahindra & Mahindra) நிறுவனம் இருக்கின்றது. இந்நிறுவனம் அதன் இரண்டாம் தலைமுறை தார் (Thar) எஸ்யூவி காரை கடந்த 2020ம் ஆண்டில் உள் நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கு நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.

இக்காரை டெலிவரி பெற வேண்டுமானால் ஒரு வருடம் வரை காத்திருக்க வேண்டும் என்கின்ற அளவிற்கு மிக அமோகமான வரவேற்பு நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் நிலவுகின்றது. இதன் விளைவாக நிறுவனத்தின் மிக மிக முக்கியமான தயாரிப்பாக தார் எஸ்யூவி மாறியுள்ளது.

இதனை உறுதிப்படுத்தக் கூடிய ஓர் புதிய தகவலே தற்போது வெளியாகியிருக்கின்றது. அதாவது, தார் எஸ்யூவி கார் கடந்த 2021ம் ஆண்டில் எத்தனை யூனிட் விற்பனையாகியிருக்கின்றது என்பது பற்றிய தகவலே தற்போது வெளியாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக 32 ஆயிரத்திற்கும் அதிகமான தார் எஸ்யூவி கார்கள் விற்பனையாகியுள்ளன.

இது முந்தைய 2020 ஆண்டைக் காட்டிலும் பல மடங்கு அதிகம் ஆகும். மிக தெளிவாகக் கூற வேண்டும் என்றால் 561 சதவீத விற்பனை வளர்ச்சியாகும். உண்மையில் இது மிக பிரமாண்டமான விற்பனை வளர்ச்சியாகும். இத்தகைய சிறப்பான வளர்ச்சியின் காரணத்தினால் மஹிந்திரா நிறுவனம் அளப்பறியா மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றது.

இத்தகைய அமோகமான வரவேற்பிற்கு இரண்டாம் தலைமுறை தார் எஸ்யூவி நிகழ்கால வாழ்க்கை நடைமுறைக்கு ஏற்ப விற்பனைக்கு வந்திருப்பதே முக்கிய காரணமாக இருக்கின்றது. முந்தைய கால கட்டத்தில் வெறும் ஆஃப்-ரோடு பயன்பாட்டை மட்டுமே கருத்தில் கொண்டு தார் உருவாக்கப்பட்டது.

ஆனால், இந்த முறை விற்பனைக்கு வந்திருக்கும் தார் குடும்ப பயன்பாட்டையும், குறிப்பாக, இளைஞர்களைக் கவரும் வகையில் அதிக கவர்ச்சிகரமான அம்சங்களுடன் உருவாக்கி இருக்கின்றது. இதன் விளைவாகவே தார் எஸ்யூவி காருக்கு யாரும் எதிர்பார்த்திராத அளவு தரமான வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இதுமட்டுமின்றி இந்த கார் ஓர் ஐந்து நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற வாகனமாகும். இதன் காரணத்தினாலும் இக்காருக்கு நல்ல விற்பனைக் கிடைத்து வருகின்றது.

புதிய தார் எஸ்யூவி கார் இந்தியாவில் ரூ. 13.17 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் உயர்நிலை வேரியண்ட் ரூ. 15.53 லட்சத்திற்கு விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இந்த விலைகள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகளாகும். இந்த விலைகள் சற்றே காஸ்ட்லியான வாகனமாக தார் எஸ்யூவி காண்பிக்கின்றன.

இருப்பினும், சற்றும் குறையாத வரவேற்புடன் இக்கார் நாட்டில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. ஏற்கனவே இந்த கார் 70 ஆயிரம் புக்கிங் என்கிற வரலாற்றை அடைந்துவிட்டது. இதைப் போலவே மிக சிறப்பான வரவேற்பை மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் தற்போது நாட்டு மக்களிடையே பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

தார் எஸ்யூவி காரில் ஆஃப்-ரோடு மற்றும் வழக்கமான சாலையை சமாளிக்கக் கூடிய 2.0 லிட்டர், 4 சிலிண்டர், எம்ஸ்டாலியன் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர், 4 சிலிண்டர் எம்ஹாவ்க் டீசல் ஆகிய இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதில், பெட்ரோல் எஞ்ஜின் உச்சபட்சமாக 150 பிஎஸ் மற்றும் 320 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது. இதற்கு அடுத்தபடியாக இருக்கும் டீசல் எஞ்ஜின் உச்சபட்சமாக 130 பிஎஸ் பவரையும், 300 என்எம் டார்க்கையும் வெளியேற்றக் கூடிய திறனைக் கொண்டிருக்கின்றது.

இரு எஞ்ஜின்களிலும் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இத்துடன், இந்த தானியங்கி கியர்பாக்ஸ் உடன் வழக்கமான அம்சமாக 4வீல் டிரைவ் சிஸ்டமும் வழங்கப்படுகின்றது. இரண்டாம் தலைமுறை தார் எஸ்யூவி கார் முற்றிலும் கவர்ச்சிகரமான காராக காட்சியளிக்கின்றது.

இதுமட்டுமின்றி அதிக சிறப்பம்சங்களைக் கொண்டதாகவும் காட்சியளிக்கின்றது. எல்இடி டிஆர்எல்கள், எல்இடி டெயில் லேம்ப்கள், ஐபி54 வாட்டர் மற்றும் டஸ்ட் ரேடட் கேபின், தொடுதிரை இன்ஃபோடெயின்மெனட் சிஸ்டம், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய டிரைவர் இருக்கை, பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங், வட்ட வடிவ ஏசி வெண்டுகள், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், வட்ட வடிவ வாட்டர் ரெசிஸ்டண்ட் ஸ்பீக்கர்கள், பவர் விண்டோக்கள், க்ரூஸ் கன்ட்ரோல், சாவியில்லா நுழைவு, டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications








