இன்னொரு வாகனத்தையும் களமிறக்க தயாராகிய மஹிந்திரா... ஆனா இது பெட்ரோல், டீசல் எஞ்ஜின் தேர்வுல கிடைக்காது!
மஹிந்திரா (Mahindra) நிறுவனம் சமீபத்தில் ஸ்கார்பியோ என் காரையும், இதைத்தொடர்ந்து, மிக மிக சமீபத்தில் ஸ்கார்பியோ கிளாசிக் கார் மாடலையும் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இவற்றைத் தொடர்ந்து மற்றுமொரு புதுமுக வாகனத்தையும் நம் நாட்டில் அறிமுகப்படுத்தும் பணியில் நிறுவனம் மிக தீவிரமாகக் களமிறங்கியிருக்கின்றது. வரும் செப்டம்பர் மாதம் அப்புதுமுக காரின் வருகை அரங்கேற இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காராக எக்ஸ்யூவி 400 வெகு விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகமாக இருக்கின்றது. முன்னதாக நிறுவனம் இ2ஓ பிளஸ் (e2o ) எனும் எலெக்ட்ரிக் வாகனத்தை விற்பனைக்கு வழங்கி வந்தது. ஆனால், அது தற்போது விற்பனையில் இல்லை. பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவில் இருந்து அவ்வாகனம் வெளியேற்றப்பட்டிருக்கின்றது.

ஆகையால், தற்போது நிறுவனத்தின்கீழ் ஒரு எலெக்ட்ரிக் வாகன தயாரிப்புகூட விற்பனைக்குக் கிடைக்காத நிலையே தென்படுகின்றது. இந்த நிலையை மாற்றும் விதமாகவே நிறுவனம் வெகு விரைவில் எக்ஸ்யூவி300 (Mahindra XUV 300) கார் மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் எலெக்ட்ரிக் கார் மாடல் எக்ஸ்யூவி 400 (Mahindra XUV 400)-ஐ அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதன் அறிமுக நாள் விபரம் பற்றிய தகவலே தற்போது வெளியாகியுள்ளது.

தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் மஹிந்திரா எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் கார் வருகின்ற செப்டம்பர் 6 ஆம் தேதி அறிமுகமாக இருப்பதே உறுதிப்படுத்தியுள்ளன. நிறுவனத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் கார் மாடல்களில் எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் காரும் ஒன்று. எக்ஸ்யூவி300 மாடலை தழுவி உருவாக்கப்பட்டிருந்தாலும், தோற்றத்திலும், சிறப்பு வசதிகளிலும் பல மடங்கு மாறுபட்டதாக அது எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் கார் உள்ளது.

சாலையில் சோதனையோட்டத்தில் ஈடுபடும்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்களின் வாயிலாக நம்மால் இதை உறுதியாக கூற முடிகின்றது. இதுபோல் இன்னும் சில தகவல்கள் வாகனம்குறித்து தெரிய வந்திருக்கின்றது. அந்தவகையில், எக்ஸ்யூவி300 காரைக் காட்டிலும் எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் சற்று பெரிய உருவத்தில் உருவாக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

இதனை நிறுவனமும் அதன் சார்பில் உறுதிப்படுத்தியுள்ளது. 4.2 மீட்டர் நீளத்தில் வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் இட வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக இவ்வாறு அதிக நீளத்தில் எக்ஸ்யூவி 400 வடிவமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல பெரிய பூட் ஸ்பேஸ் ஏற்படுத்திக் கொடுக்கவும் இந்த கூடுதல் நீளம் உதவியாக இருக்கும்.

சிறப்பு தொழில்நுட்ப வசதிகளைப் பொருத்த வரை எலெக்ட்ரிக் காரில், கார் இணைப்பு அம்சம், அடாஸ் தொழில்நுட்பம் உள்ளிட்டவை எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த அம்சத்தின் வாயிலாக எப்போது மற்றவர்களுடன் தொடர்பில் இருக்கவும், பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ளவும் முடியும். குறிப்பாக அடாஸ் அம்சத்தின் வாயிலாக பல்வேறு தானியங்கி வசதிகளை பயணிகளால் பெற்றுக் கொள்ள முடியும்.

அதாவது, தானாக பிரேக் பிடித்தல், லேன் கீப் அசிஸ்ட், வாகனங்கள் குறித்து எச்சரிக்கை வழங்குதல் உள்ளிட்டவற்றை பெற்றுக் கொள்ள முடியும். இதுமட்டுமின்றி ஹெட்லைட்டுடன் கூடிய டிஆர்எல்கள், முழுமையாக மூடப்பட்ட தோற்றத்திலான கிரில், புதிய ஸ்டைலிலான டெயில் லேம்ப் மற்றும் டெயில் கேட் உள்ளிட்டவையும் எக்ஸ்யூவி 400 காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, ஸ்பை படங்கள் வாயிலாக எக்ஸ்யூவி 400 காரில் பெரிய தொடுதிரை சிஸ்டம் இடம் பெற இருப்பதும் உறுதியாகியுள்ளது. இது அட்ரினோ எக்ஸ் பிராண்ட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாக இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. நிறுவனத்தின் லேட்டஸ்ட் வருகையான எக்ஸ்யூவி 700 மற்றும் ஸ்கார்பியோ என் கார்களிலே இந்த கருவியே பயன்படுத்தப்பட்டுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் காரின் வருகை டாடா நெக்ஸான் இவி-க்கு போட்டியாக அமைய உள்ளது. ரூ. 15 லட்சத்திற்கும் குறைவான விலையில் இம்மின்சார வாகனம் இந்திய சந்தையில் எதிர்பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமின்றி, ஒரு முழு சார்ஜில் 400 கிமீ ரேஞ்ஜ் மற்றும் 150 பிஎச்பி திறனை வெளியேற்ற மின்சார மோட்டார் ஆகியவையும் எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் காரில் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், மஹிந்திரா நிறுவனம் இதுவரை இந்த மின்சார வாகனம் பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடப்படவில்லை. அதாவது, என்ன தொழில்நுட்ப வசதிகள், பேட்டரி பேக் மற்றும் மின் மோட்டார் உடன் விற்பனைக்கு வர இருக்கின்றது போன்ற முக்கிய விபரங்களை அது வெளியிடவில்லை. இதுகுறித்த தகவல்கள் காரின் அறிமுக நாளான வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








