டாடாவுக்கு செக் வைக்க ரெடியாகும் மஹிந்திரா... நேருக்கு நேரா மோத போறாங்க... அப்ப போட்டி அனல் பறக்க போகுது!
மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி அடுத்த மாதம் தொடங்கப்படவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி400 (Mahindra XUV400). இது எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த கார் சமீபத்தில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த சூழலில், எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்படவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே சமயம் வாடிக்கையாளர்களிடம் இருந்து இந்த எலெக்ட்ரிக் காருக்கு அதிகாரப்பூர்வமாக முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் வரும் ஜனவரி மாதம் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் தற்போதைய நிலையில் பொது பார்வைக்கு மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ளது. இன்னும் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை. வரும் ஜனவரி மாதம்தான் மஹிந்திரா நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் காரின் விலைகளை அறிவித்து, அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
அதன்பின் உடனடியாக வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகள் தொடங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எலெக்ட்ரிக் காரில் மஹிந்திரா நிறுவனம் 39.4kWh பேட்டரி தொகுப்பை வழங்கியுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 456 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காருக்கு 50kW, 7.2kW AC மற்றும் 3.3kW AC ஆகிய சார்ஜர் ஆப்ஷன்களை வழங்கியுள்ளது. அதே நேரத்தில் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், எலெக்ட்ரிக் சன்ரூஃப், லெதர் சுற்றப்பட்ட ஸ்டியரிங் வீல் போன்ற பல்வேறு வசதிகள், இந்த எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் (Tata Nexon EV Max) மற்றும் எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) ஆகிய கார்களுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் போட்டியிடும். மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்த கார்கள் அனைத்தும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
மஹிந்திரா எக்ஸ்யூவி700 மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ என் ஆகிய கார்களை இதற்கு உதாரணமாக சொல்ல முடியும். இந்த வரிசையில் மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காருக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் உற்சாகமான வரவேற்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா நிறுவனம் விலையை மட்டும் சரியாக நிர்ணயம் செய்து விட்டால், டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் காருக்கு இது விற்பனையில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும்.
இதற்கிடையே தற்போது மஹிந்திரா நிறுவனத்தின் நிறைய கார்களுக்கான காத்திருப்பு காலம் மிகவும் அதிகமாக உள்ளது. இந்த காத்திருப்பு காலத்தை குறைப்பதற்காக மஹிந்திரா நிறுவனம் தனது கார்களின் உற்பத்தியை அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் கார்களின் டெலிவரிக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








