கயிறு போட்டு கட்டி வச்சா எல்லாம் வேலைக்கே ஆகாது! மாண்டஸ் இடம் இருந்து உங்க வாகனத்த காப்பாத்த இத உடனே செய்யுங்க

வங்கக் கடலில் உருவாகி இருக்கும் மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது கரையை கடக்கும்போது மணிக்கு 65 கிமீ முதல் 85 கிமீ வரையிலான வேகத்தில் காற்று வீசக் கூடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆகையால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த மாண்டஸ் புயல் சென்னையில் இருந்து 520 கிமீ தொலைவில் தென்கிழக்கு திசையில் நிலைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த ஆறு மணி நேரத்திற்குள் தீவிர புயலாக மாறி வெள்ளிகிழமை காலை 9 மணி வரை அது அதி தீவிர புயலாகவே நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல்

இப்போதைய நிலவரப்படி மணிக்கு 12 கிமீ வேகத்தில் இது சென்னை மாமல்லபுரத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கின்றது. ஆகையால், நம்மை மட்டுமின்றி நம்முடைய வாகனங்களையும் இந்த புயலிடத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பது அவசியமாக மாறியுள்ளது. இந்த நேரத்தில் என்னனென்ன எல்லாம் செய்தால் நம்முடைய வாகனத்தைக் காப்பாற்ற முடியும் என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

பாதுகாப்பான பார்க்கிங் பகுதியை தேர்வு செய்ய வேண்டும்:

சென்னையை நெறுங்கிக் கொண்டிருக்கும் புயல் மணிக்கு 65 கிமீ முதல் 85 கிமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் வேகத்தில் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரியான சூழலில் திறந்த வெளிப்புறத்தில் வாகனங்களை நிறுத்துவது நல்ல ஐடியா கிடையாது. அதிக வேகமாக காற்று வீசும் நேரங்களில் வாகனங்கள் அடித்து செல்வதை நாம் வீடியோக்களில் பார்த்திருக்கக் கூடும். மிக பெரிய உருவம் கொண்ட வாகனங்கள்கூட புயலின் தீவிர வேகத்தைத் தாங்க முடியாமல் சாய்வதைக் கூட நாம் பார்த்திருப்போம்.

எனவேதான் திறந்த வெளியில் வாகனங்களை நிறுத்துவது சிறந்த யோசனையாக இருக்காது என்கின்றோம். காற்றால் வாகனங்கள் அடித்து செல்வது மட்டுமில்லைங்க. மரங்களினாலும் வாகங்கள் பாதிக்கப்படலாம். மழை மற்றும் புயலின்போது அதிகளவில் பாதிப்படையக் கூடியவையாக மரங்களும், பழைய சுவர்களும் இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலில் வாகனங்களை மரங்கள் மற்றும் வலுவிழந்த சுவர்களுக்கு அருகில் நிறுத்துவது மிகுந்த ஆபத்தானது. மரங்கள், சுவர்கள் வாகனத்தின்மீது விழுந்த பெருத்த சேதத்தைத் ஏற்படுத்தலாம்.

ஆகையால், பாதுகாப்பான இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு வாகனத்தை நிறுத்துவது நல்ல பலனை அளிக்கும். இதற்கான வாய்ப்பே இல்லை என நினைப்பவர்கள் மரங்கள், பழைய சுவர்களுக்கு அருகே வாகனத்தை நிறுத்தாமல் காலியான இடத்தைத் தேர்ந்தெடுத்து தங்களின் வாகனத்தை நிறுத்திக் கொள்ளலாம். அத்தோடு, தங்களது வாகனத்தின் இன்சூரன்ஸையும் புதுப்பித்து வைத்துக் கொள்வது சிறந்தது. புயலின் சீற்றத்தால் வாகனம் சேதத்தைச் சந்தித்தால் காப்பீட்டு திட்டத்தின் வாயிலாக இழப்புகளை சரிகட்டிக் கொள்ள முடியும்.

மாண்டஸ் புயல்

தாழ்வான பகுதியா நிச்சயம் அந்த இடத்திலேயே இருக்காதீங்க:

மழை வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய முதல் பகுதியாக தாழ்வான பகுதிகள் இருக்கின்றன. ஆகையால், நீங்கள் வசிக்கும் பகுதி தாழ்வானதாக இருக்கும் என்றால் உடனடியாக அங்கிருந்து வெளியேறுவதுதான் நல்லது. மேடான அல்லது பாதுகாப்பு பகுதிக்கு தற்காலிகமாக இடம் பெயரலாம். குறிப்பாக, உங்களது வாகனத்தை அதிக பள்ளமான பகுதியில் நிறுத்துவதை தவிர்த்துவிடுங்கள். சாலையில் தேங்கும் தண்ணீர் உங்களது வாகனத்தை வெகு விரைவில் பதம் பார்த்துவிடும். எஞ்ஜினுக்கு மிக பெரிய வில்லனே இந்த மழை நீர் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். வாகனங்கள் விரைவில் துரு பிடிப்பதற்கும் தண்ணீரே காரணமாக அமைகின்றது. ஆகையால், மழை நீரிடம் இருந்து பாதுகாப்பாக வாகனத்தை அப்புறப்படுத்துவதே மிக சிறந்தது.

ஆவணங்களை பத்திரமாக வச்சுக்கோங்க:

வாகனத்தின் பதிவு சான்று, இன்சூரன்ஸ் காப்பி, ஓட்டுநர் உரிமம் போன்ற முக்கிய ஆவணங்களைப் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை நீங்கள் உங்களுடைய அனைத்து ஆவணத்தையும் காரில் வைத்திருப்பவர்களாக இருந்தால், உடனடியாக அதை வீட்டில் பாதுகாப்பான இடத்தில் எடுத்து வைத்து விடுங்கள். நீர் புகாத ஜிப் பவுச்களில் சேகரித்து வைப்பதனால் அதைக் கூடுதலாக பாதுகாக்க முடியும். மழை வெள்ளத்தால் நீங்கள் வசிக்கும் பகுதி பாதிக்கப்பட்டாலும் அந்த பவுச் உங்களுடைய ஆவணத்தைப் பாதுகாக்கும். இதுமட்டுமில்லைங்க, ஒரு காப்பி ஆன்லைனிலும் எடுத்து சேகரித்து வைத்துக் கொள்வதும் நல்லது. மழையினால் வாகனம் பாதிக்கப்படும் எனில் காப்பீடு போன்ற அணுகல்களை மேற்கொள்ள இந்த ஆவணங்கள் உதவியாக இருக்கும்.

வெளி மற்றும் உட்புற சேதத்தைச் சரிபார்க்கவும்:

புயல் கடந்த பின்னர் உங்கள் வாகனத்தை கவனமாக சரிபார்த்துக் கொள்வது அவசியமானது. காரின் உட்பக்கத்தில் மட்டுமின்றி வெளிப்புறத்திலும் செக் செய்ய வேண்டும். குறிப்பாக, உங்கள் வாகனமாக இருக்கும் எனில் அதன் அடிப்பகுதியை முழுமையாக ஆராய்வது நல்லது. நமக்கே தெரியாமல் நம்முடைய வாகனத்திற்குள் நீர் புகந்திருக்கலாம். அந்த மாதிரியான வாகனத்தை உடனடியாக ஆன்-செய்வது மிகுந்த சிக்கலுக்கு வழி வகுக்கும். ஆகையால், நீங்கள் உங்களுடைய வாகனத்திற்குள் நீர் புகுந்திருப்பதை உணர்கிறீர்கள் என்றால் கட்டாயம் அதனை உடனடியாக ஆன் செய்ய வேண்டாம். முழுமையாக நீர் வற்றிய பின்னர் மெக்கானிக்கின் வழிகாட்டுதலுக்கு பின்னர் அதனை ஆன் செய்யலாம். மேலும், காருக்குள் இருக்கும் மேட்களை (விரிப்புகளை) உலர வைப்பது அவசியம். இதை அப்படியே விட்டுவிட்டால் விரைவில் காருக்குள் துர்நாற்றம் வீசத் தொடங்கும்.

கசிவு இருக்கானு செக் செய்ய வேண்டும்:

புயல் மற்றும் மழைக்கு பின்னர் உங்கள் வாகனத்தை பயன்படுத்தத் தொடங்குகின்றீர்கள் என்றால், அந்த வாகனத்தில் கசிவு ஏதேனும் ஏற்படுகின்றதா என்பதை பார்த்துவிடுங்கள். பிரேக் ஆயில், ஃப்யூவல் அல்லது குளிரூட்டி ஆகியவற்றில் கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனை உடனடியாக ஆய்வு செய்து சிக்கலை சரி செய்வதன் வாயிலாக மிக பெரிய பின் விளைவுகளைக் குறைக்க முடியும். மேலும் இதுகுறித்து முன்கூட்டியே இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கும் தெரிவித்துவிட வேண்டும். இதன் வாயிலாக பாதிப்பு பெரியதாக இருக்கும் எனில் அதற்கு இன்சூரன்ஸை நம்மால் கிளைம் செய்து கொள்ள முடியும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mandous cyclone car safety tips
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X