மைலேஜை வாரி வழங்கும்... சூப்பரான 2 சிஎன்ஜி கார்களை களமிறக்கியது மாருதி... விலை எவ்ளோனு தெரியுமா?
மாருதி சுஸுகி நிறுவனம் சூப்பரான 2 சிஎன்ஜி கார்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது சிஎன்ஜி கார்கள் மிக வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. எனவே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு சிஎன்ஜி கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன. ஆனால் மாருதி சுஸுகி நிறுவனம்தான், இந்தியாவின் சிஎன்ஜி கார் சந்தையில் முன்னிலை வகிக்கிறது.

ஸ்விஃப்ட் மற்றும் எஸ்-பிரெஸ்ஸோ கார்களின் சிஎன்ஜி வெர்ஷன்களை மாருதி சுஸுகி நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அந்த சூடு அடங்குவதற்குள் தற்போது மேலும் 2 பிரபலமான கார்களின் சிஎன்ஜி வெர்ஷன்களை மாருதி சுஸுகி நிறுவனம் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

அவை பலேனோ மற்றும் எக்ஸ்எல்6 கார்களின் சிஎன்ஜி வெர்ஷன் ஆகும். மாருதி சுஸுகி பலேனோ, இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களில் ஒன்று. மறுபக்கம் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6, இந்திய வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான பிரீமியம் எம்பிவி கார்களில் ஒன்றாக திகழ்ந்து கொண்டுள்ளது.

மாருதி சுஸுகி பலேனோ சிஎன்ஜி காரில், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் சிஎன்ஜியில் இயங்கும்போது அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்மில் 76 பிஹெச்பி பவரையும், 4,300 ஆர்பிஎம்மில் 98.5 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. மாருதி சுஸுகி பலேனோ சிஎன்ஜி காரில், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்த இன்ஜின் ஒரு கிலோவிற்கு 30.61 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. சிறப்பான மைலேஜை வழங்கும் அதே சமயம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகளுடன் 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல் உள்பட பல்வேறு வசதிகளையும் இந்த கார் பெற்றுள்ளது.

மறுபக்கம் எக்ஸ்எல்6 சிஎன்ஜி காரில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் சிஎன்ஜியில் இயங்கும்போது அதிகபட்சமாக 5,500 ஆர்பிஎம்மில் 87 பிஹெச்பி பவரையும், 4,200 ஆர்பிஎம்மில் 121.5 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடனும் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன்தான் வழங்கப்பட்டுள்ளது.

அதே சமயம் இந்த இன்ஜின் ஒரு கிலோவிற்கு 26.32 கிலோ மீட்டர் மைலேஜை வழங்க கூடியது. இதில், மாருதி சுஸுகி பலேனோ சிஎன்ஜி கார் டெல்டா மற்றும் ஜெட்டா வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா வேரியண்ட்டின் விலை 8.28 லட்ச ரூபாய் ஆகவும், ஜெட்டா 9.21 லட்ச ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மறுபக்கம் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 சிஎன்ஜி கார் ஜெட்டா வேரியண்ட்டில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். இதன் விலை 12.24 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். மாருதி சுஸுகி நிறுவனம் இதற்கு அடுத்தபடியாக பிரெஸ்ஸா காரின் சிஎன்ஜி வெர்ஷனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








