இனிமே ஆட்டோ கியர் கார்களுக்கு தான் மவுசு! மாருதி எடுக்கப்போகும் தடாலடி முடிவு!
மாருதி சுஸூகி நிறுவனம் இந்தியாவில் தனது ஆட்டோ கியர் தொழிற்நுட்பத்தில் உள்ள கார்கள் இனி அதிகமாக விற்பனையாகும் எனக் கணித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
மாருதி நிறுவனம் இந்தியாவில் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்று, இந்தியாவில் அதிகமான கார்களை விற்பனை செய்யும் நிறுவனமும் இது தான். சமீப காலமாக ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. உதாரணமாக மக்கள் இன்று ஆட்டோமெட்டிக் கியர் கார்களை அதிகம் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர். இருந்தாலும் மேனுவல் கியர் கார்களின் விற்பனைதான் அதிகமாக இருக்கிறது.

இந்நிலையில் தான் மாருதி நிறுவனம் தனது நிறுவன கார்களில் இனி ஆட்டோமெட்டிக் கியர் வசதி கொண்ட கார்களின் விற்பனை அதிகமாகும் எனக் கணித்துள்ளது. மாருதி நிறுவனம் கடந்த 2013-14ம் ஆண்டு காலகட்டத்திலேயே தனது புதிய ஹேட்ச் பேக் காரான செலிரியோ காரில் ஏஜிஎஸ் எனப்படும் ஆட்டோ கியர் ஸிஃப்ட் காரை அறிமுகப்படுத்தினர். அந்த காரில் டிரைவர் கிளட்சை பிடித்து கியரை மாற்ற வேண்டிய தேவையில்லை தானாகவே கியர் மாறிக்கொள்ளும் என அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த ஆட்டோகியர் முயற்சி வெற்றி பெற்ற நிலையில் மாருதி நிறுவனம் தற்போது தனது நிறுவனத்தின் 9 கார்களான செலிரியோ, ஆல்டோ கே10. வேகன் ஆர், டிசையர், இக்னீஸ், ஸ்விஃப்ட், பிரெஸ்ஸா, எஸ்-பிரஸ்ஸோ, பலேனோ ஆகிய கார்களில் அந்நிறுவனம் ஏஜிஎஸ் கியர் பாக்ஸ் கொண்ட கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் வரும் காலத்தில் ஏஜிஎஸ் கியர் பாக்ஸ் கொண்ட கார்களின் விற்பனை மிக வேகமாக அதிகரிக்கும் என அந்நிறுவனம் கணித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் மார்கெட்டிங் மற்றும் விற்பனை துறையின் மூத்த அதிகாரி சஷாங் ஸ்ரீவத்சவா கூறும் போது : "தற்போது இந்தியாவில் பெருகி வரும் போக்குவரத்து நெருக்கடியால் அதுவும் முக்கியமான நகர் பகுதியில் உள்ள நெருக்கடியால் ஏஜிஎஸ் தொழிற்நுட்பம் கொண்ட கார்கள் எளிமையாக ஓட்டிச்செல்ல உதவி செய்யும். இதனால் வரும் காலங்களில் ஏஜிஎஸ் தொழிற்நுட்பம் கொண்ட கார்கள் அதிகமாக விற்பனையாகும் எனக் கணிக்கிறோம்" எனக் கூறினார்.
தற்போது விற்பனையான மொத்த கார்களில் ஒவ்வொரு மாடலிலும், 12-23 சதவீதம் வரை ஏஜிஎஸ் கியர் பாக்ஸ் கொண்ட கார்களே விற்பனையாகியுள்ளது. ஒவ்வொரு மாடலிலும் சதவீதம் மாறுபடுகிறது. இதற்கான காரணம் ஒவ்வொரு காரிலும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஏஜிஎஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. தான். இது வரும் காலங்களில் 50 சதவீதத்தைத் தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தற்போது வரை செலிரியோவில் 2 லட்சம் கார்களும், வேகன் ஆரில் 1.39 லட்சம் கார்களும், ஸ்விஃப்டில் 1.24 லட்சம் கார்களும், டிசையரில் 1.01 லட்சம் கார்களும், ஆல்டோ கே10 காரில் 68 ஆயிரம் கார்களும், இக்னீஷ் காரில் 49 ஆயிரம் கார்களும், பிரெஸ்ஸா காரில் 39 ஆயிரம் கார்களும், எஸ்-பிரஸ்ஸோ காரில் 37 ஆயிரம் கார்களும், பலேனோ காரில் 20 ஆயிரம் கார்களும் ஏஜிஎஸ் கியர் பாக்ஸ் உடன் விற்பனையாகியுள்ளது.
ஆட்டோ கியர் பாக்ஸில் ஏகப்பட்ட தொழிற்நுட்பம் இருந்தாலும் மாருதி நிறுவனம் பயன்படுத்தும் ஏஜிஎஸ் தொழிற்நுட்பம் தான் மிகவும் குறைவான விலையில் இருக்கிறது. ஒரு என்ட்ரி லெவல் காரை ஏஜிஎஸ் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்ட காராக மாற்ற ரூ50 ஆயிரம் தான் செலவாகிறது. அதுவே டூயல் -கிளட்ச் டிரான்ஸ்மிஷன் (டிசிடி) கியர் பாக்ஸ், கன்டினியஸ்லி வேரியபிள் டிரான்ஸ்மிஷன் (சிவிடி) கியர் பாக்ஸ் என்றால் ரூ1.2 லட்சம் வரை அதிகம் செலவாகும், குறைந்த பட்ஜெட்டில் உள்ள ஏஜிஎஸ் கியர் பாக்ஸ் வரும் காலத்தில் மிகப் பிரபலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








