மாருதி ஜிம்னி காரின் பெயரை மாற்ற முடிவு? என்ன பெயர் வைக்க போறாங்க தெரியுமா?
மாருதி நிறுவனம் அடுத்த மாதம் வெளியிடப்போகும் ஜிம்னி காரின் பெயரை ஜிப்ஸி என மாற்றலாம் என ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜிப்ஸி இந்தியாவில் பிரபலமான பெயர் என்பதால் இதைப் பயன்படுத்த ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்
மாருதி சுஸூகி நிறுவனம் இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்யும் நம்பர் 1 நிறுவனம். இந்நிறுவனம் தற்போது தனது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் இருக்கிறது. அதன்படி வரும் ஜனவரி மாதம் மிக முக்கியமாக மாருதி நிறுவனம் தனது பலேனோ கிராஸ் ஓவர் எஸ்யூவி காரையும், 5 டோர் ஜிம்னிகாரையும் அறிமுகப்படுத்தவுள்ளது. குறிப்பாக ஜனவரி மாதம் நடக்கவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார்கள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது உள்ள தகவலின் படி இந்த இரண்டு கார்களும் வரும் ஜனவரி மாதம் பொது பார்வைக்காக அறிமுகமானாலும் இது விற்பனைக்கு வரச் சற்று தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி மாருதி பலேனோ கிராஸ் ஓவர் கார் 2023ம் ஆண்டின் முதல் காலாண்டிலேயே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே ஜிம்னி கார் அடுத்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டான ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிம்னி கார் தற்போது இந்தியாவில் தயாரானாலும் வெளிநாடுகளுக்கு மட்டுமே ஏற்றுமதியாகிறது. இந்தியாவில் விற்பனையாகவில்லை. இந்த கார் வெளிநாட்டில் 3 டோர் கொண்ட காராக விற்பனையாகிறது. இந்த கார் ஆஃப்ரோடு அம்சங்கள் நிறைந்த கார். இதன் காரணமாகவே இந்த கார் மிகவும் பிரபலமான காராக இருக்கிறது. இந்த காரை தான் தற்போது மாருதி நிறுவனம் 5 டோர் கொண்ட காராக மாற்றம் செய்து இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
ஜிம்னி காரை மாருதி நிறுவனம் தனது வெற்றிகரமான ஜிப்ஸி காருக்கு அடுத்தபடியாகவும் மாற்றாகவும் வெளிநாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இந்த காரை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தப்போவதாக முடிவு செய்துள்ள நிலையில் தற்போது ஜிம்னி காரை ஏன் ஜிப்ஸி என்ற பெயரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தக்கூடாது என அந்நிறுவனம் யோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து மாருதி நிறுவனம் இதுவரை எந்த முடிவுகளையும் எடுக்கவில்லை. இது குறித்த ஆலோசனை மட்டுமே நடந்து வருகிறது.
ஜிம்னி கார் இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் மாருதி நிறுவனத்திற்குச் சொந்தமான ஆலையில் தயாராகிறது. இங்குத் தயாராகிப் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது 3 டோர் கார் தான். இதில் 5 டோர் கார் அறிமுகமான பின்பு இந்த கார் இந்தியா மற்றும் வெளிநாடு ஆகிய 2 இடத்திலும் விற்பனை செய்யப்படும். இந்த கார் லைஃப்ஸ்டைல் ஆஃப்ரோடு எஸ்யூவி காராகும். இந்த கார் இந்திய மார்கெட்டில் விரைவில் வரவுள்ள மஹிந்திரா தார் 5 டோர் கார் மற்றும் 5 டோர் ஃபோர்ஸ் கூர்கா ஆகிய காருடன் போட்டியிடும்.
இந்த 5 டோர் ஜிம்னி காரின் இன்ஜினை பொருத்தவரை கே15பி மைல்டு ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படும் எனக் கூறப்படுகிறது. முன்னதாக மாருதி சியாஸ் காரில் பொருத்தப்பட்டுள்ள கே15சி இன்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த திட்டத்தை மாருதி மாற்றிக்கொண்டது. இந்த கே15பி இன்ஜின் 103 பிஎஸ் பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் மேம்படுத்தும். இந்த கார் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆகிய கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் வடிவமைப்பைப் பொருத்தவரை பெரும்பாலான அம்சங்கள் அதே 3 டோர் காரின் வடிவமைப்பு தான் ஆனால் அதிகமான பயணிகளை ஏற்றும் விதமாக 2 டோர் அதிகமாக்கி 5 டோர் காராக மாற்றியுள்ளனர். இதற்காக வீல் பேஸ் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கேபின் மற்றும் பூட் களில் அதிகமான இடத்தை எதிர்பார்க்கலாம். இந்த காரில் முக்கிய அம்சமாக ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆகியவற்றை சப்போர்ட் செய்யக்கூடிய 9 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications







