என்னப்பா சொல்றீங்க.. மாருதியில எலெக்ட்ரிக் கார் வருதா? எப்ப வரப்போது தெரியுமா?
மாருதி நிறுவனம் எலெக்ட்ரிக் காரை 2025ம் ஆண்டு வெளியிடத் திட்டமிட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு தகவல்களைக் காணலாம்.

இன்று இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் வருகை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்கத் துவங்கிவிட்டனர். டாடா தற்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. மஹிந்திரா நிறுவனமும் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஹூண்டாய், எம்ஜி ஆகிய நிறுவனங்கள் தலா ஒரு எலெக்ட்ரிக் வாகனத்தைக் களம் இறக்கியுள்ளனர்.

ஆனால் இந்தியாவிலேயே கார் தயாரிப்பில் சிறப்பான இடத்தில் இருக்கும் மாருதி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் குறித்து சத்தமே இல்லையே எனப் பலருக்குக் கேள்விகள் இருக்கலாம். இதற்குப் பல நாட்கள் மவுனமாக இருந்த இந்நிறுவனம் தற்போது தகுந்த விளக்கத்தை அளித்துள்ளது.

ஏற்கனவே மாருதி நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனத்தைத் தயாரிப்பதாக சில செய்திகள் வெளியாகியிருந்தது. இருந்தாலும் இது குறித்து பெரிய அளவில் எந்த தகவல்களும் வெளியாகவில்லை. இதனால் பலர் மாருதி நிறுவனம் அந்த திட்டத்தை எல்லாம் கைவிட்டுவிட்டதாகக் கருதினர்.

இந்நிலையில் சமீபத்தில் இது குறித்து அந்நிறுவனத்தின் சேர்மன் பார்கவா பேசினார். அப்பொழுது அவர் : "கார்கள் விற்பனையில் எத்தனை கார்கள் விற்பனையாகிறது என்பது மிகவும் முக்கியமான ஒன்று மாதம் 10 ஆயிரம் கார்கள் விற்பனையாகவில்லை என்றால் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்வதில் பலனில்லை. அதற்காக எலெக்ட்ரிக் கார்களை மாருதி நிறுவனம் புறந்தள்ளி விடவில்லை. தற்போது எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கும் பணியின் ஆய்வில் இறங்கியுள்ளோம்.

ஆனால் அதை இந்தியாவிலேயே அதற்கான பேட்டரி மற்றும் மற்ற உதிரிப்பாகங்கள் தயாரிப்பு குறித்த சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்துவருகிறோம். இது மட்டுமல்ல எங்கள் நிறுவனத்தின் கார்களை நம்பி வாங்கும் மக்கள் அதன்பின் அதில் பிரச்சனைகளை சந்திக்கக்கூடாது என்பதில் தீர்மானமாக இருக்கிறோம். 2025ம் ஆண்டு மாருதி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரும் என்பதை எதிர்பார்க்கலாம்.

இது கால தாமதமான அறிமுகமாகத் தெரியலாம். இதற்கும் பல நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் நல்ல
அனுபவத்தைப் பெறலாம். ஆனால் அதை பற்றியெல்லாம் மாருதி நிறுவனம் கவலைப்பட வேண்டியதில்லை. எங்களுக்கான திட்டம் திடமாகவும், எதிர்காலத்தை நோக்கியும் இருக்கிறது." எனக் கூறினார்.

இந்தியா மட்டுமல்ல உலகமே தற்போது ஆட்டோமொபைல் துறையில் தற்போது பெரும் மாற்றத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. அந்த மாற்றம் எலெக்ட்ரிக் காராக இருக்கும் எனப் பலர் கூறுகின்றனர். ஆனால் ஃபிளக்ஸி ஃப்யூயல், ஹைபிரிட் என மற்ற தொழிற்நுட்பங்களும் வளர்ந்து வருகிறது. மக்கள் எந்த தொழிற்நுட்பத்தை நோக்கி நகர இருக்கின்றனர். எது மக்களின் தேவையை நிறைவேற்றும், என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதற்காகவே கார் தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் தன் தடத்தைப் பதிக்க வேண்டும் எனக் குறைந்தது ஒரு காரையாவது தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வந்துவிட்டனர். டாடா, மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் எல்லாம் எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்கள் தான் என்ற நம்பிக்கையில் அதில் அதிகமான முதலீடுகளைச் செய்துள்ளது. அந்த கார்களை வெற்றி பெற வைக்கத் தேவையான வசதிகளை தற்போது செய்து வருகிறது.

ஆனால் கார் விஷயத்தில் மக்கள் எளிதில் எலெக்ட்ரிக் வாகனத்திற்கு மாறிவிடுவார்களா என்றால் சந்தேகம் தான். ஆனால் இரு சக்கர வாகனம் மற்றும் ஸ்கூட்டர்களில் இந்த மாற்றம் நிகழ்ந்து வருகிறது. அதிகமான மக்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். அதே போல 3சக்கர வாகன சந்தையிலும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மவுசு கூடுகிறது. ஆனால் கார்களில் எலெக்ட்ரிக் செக்ண்மெண்டில் விற்பனை பெரிய அளவில் இல்லை.

இதற்கு முக்கியமான காரணம் விலை தான் கூறப்படுகிறது ஸ்கூட்டர்களில் கிட்டத்தட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களின் விலையிலேயே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் வந்துவிட்டது. ஆனால் கார்களில் பெட்ரோல் காரை விட எலெக்ட்ரிக் கார்களின் விலை இரு மடங்களாக இருந்து வருகிறது. இதனால் காரணமாகவும் மக்கள் எலெக்ட்ரிக் கார்களை அதிகம் விரும்புவதில்லை.

தற்போது மாருதி நிறுவனம் ஹைபிரிட் கார்களை அதிகம் விற்பனை செய்ய விரும்புகிறது. டீசல் இன்ஜினை பிஎஸ்6 தர கட்டுப்பாட்டிற்கு இணையாகத் தயாரிப்பதில் உள்ள சிக்கல் மற்றும் அதன் விலையேற்றம் காரணமாக கார் தேர்வு செய்வதில் அதிக மைலேஜை முக்கிய ஆப்ஷனாக கொண்ட மக்களின் கவனத்தை ஈர்க்க இந்த ஹைபிரிட் தொழிற்நுட்பம் உதவுகிறது. தற்போது மாருதி நிறுவனத்திடம் கிராண்ட் விட்டாரா கார் ஹைபிரிட் தொழிற்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








