முதல் இவி காரை அறிமுகப்படுத்தபோகும் மாருதி! விலை, ரேஞ்ச் எல்லாம் வச்சு பாத்தா டாடா தலையில துண்டைதான் போடனும்!
மாருதி நிறுவனம் வரும் 2023 ஜனவரி மாதம் நடக்கவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் தனது முதல் எலெக்ட்ரிக் கான்செப்ட் காரை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் எலெக்ட்ரிக் கார் மார்கெட்டில் கிங்காக இருக்கும் டாடா நிறுவனத்தின் தலையில் இடியே விழுந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
இன்று இந்தியாவில் எலெக்ட்ரிக் காரின் விற்பனை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. ஏராளமான மக்கள் எலெக்ட்ரிக் கார்களை பயன்படுத்தத் துவங்கிவிட்டனர். குறிப்பாகப் பெரு நகரங்களில் அதிகமாக எலெக்ட்ரிக் காரை காணமுடிகிறது. இந்தியா முழுவதும் எலெக்ட்ரிக் கார் செக்மெண்டில் டாா நிறுவனம் தான் முதலிடத்தில் இருக்கிறது. இந்தியா அளவில் விற்பனையாகும் 100 எலெக்ட்ரிக் கார்களில் 84 எலெக்ட்ரிக் கார் டாடா நிறுவனத்திற்குரியது தான்.

ஆனால் இந்தியாவில் அதிக கார்களை தயாரித்து விற்பனை செய்யும் மாருதி சுஸூகி நிறுவனம் இதுவரை ஒரு எலெக்ட்ரிக் காரை கூட தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வரவில்லை மாருதி நிறுவனம் பிளக்ஸி ஃப்யூயல் மற்றும் ஹைபிரிட் தொழிற்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்தி வருவதாகச் செய்திகள் வெளியாகி வந்த நிலையில் யாரும் எதிர்பாராத ஒரு சம்பவத்தை மாருதி நிறுவனம் செய்யக் காத்திருக்கிறது. இந்த செய்தி டாடா, மஹிந்திரா நிறுவனங்களில் தலையில் குண்டை தூக்கிப் போடும் படியாக உள்ளது.
மாருதி நிறுவனம் வரும் ஜனவரி மாதம் நடக்கவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் தனது முதல் எலெக்ட்ரிக் கான்செப்ட் காரை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மாருதி நிறுவனம் இந்த காரை ஒரு மிட்-சைஸ் எஸ்யூவி காராக உருவாக்கியுள்ளது. தற்போது மாருதி நிறுவனம் இந்த காருக்கு ஒய்ஒய்8 என்ற கோட் பெயரை வைத்துள்ளது. இந்த காருக்கான அதிகாரப்பூர்வமான பெயர் இதுவரை வெளியாகவில்லை.
இந்த கார் முழுவதும் எலெக்ட்ரிக் பவரில் இயங்கும் காராக தயாராகிறது. இந்த காரை மாருதி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் சேர்ந்து உருவாக்கவுள்ளன. இந்த இரு நிறுவனங்களுக்கிடையே இருக்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த காரை உருவாக்க முடிவு செய்துள்ளனர். இந்த காரை குஜராத் மாநிலத்தில் சுஸூகி நிறுவனத்திற்குச் சொந்தமான ஆலையில் வைத்துத் தயாரிக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த கார் இந்தியாவிற்கு மட்டுமல்ல வெளிநாட்டிற்குள் ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்த கார் குறித்த சில தொழிற்நுட்ப தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கார் அந்நிறுவனம் பெட்ரோல் கார்களின் வடிவமைப்பை விட முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். பிரத்தியேகமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கென தயாரிக்கப்பட்ட காராகும். இந்த காரில் பேட்டரி பேக் பெரியதாக வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதற்குத் தகுந்தார் போல் அதிக இட வசதியை அதன் டிசைனிலேயே ஏற்படுத்த முடிவு செய்துள்ளனர். இந்த கார் பார்க்கக் கிட்டத்தட்ட ஹூண்டாய் கிரெட்டா காரை போல உருவாக்க முடிவு செய்துள்ளனர். இந்த கார் 4.2 மீட்டர் நீளம் கொண்டது. அதே போல இது 2.7 மீட்டர் வீல் பேஸை கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த வீல் பேஸ் எம்ஜி ஸிஎஸ் இவி காரை விட அதிகமான வீல் பேஸ் கொண்ட காராகும்.
இந்த மாருதி ஒய்ஒய்8 எஸ்யூவி காரை பொருத்தவரை மொத்தம் 2 விதமான பேட்டரி பேக்கில் வரவுள்ளது. 48 கிலோ வாட் ஹவர் மற்றும் 59 கிலோ வாட் ஹவர் ஆகிய பேட்டரி பேக்கில் வரவுள்ளது. இந்த 48 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட கார் முழு சார்ஜில் 400 கி.மீ ரேஞ்சும், 59 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட கார் 500 கி.மீ ரேஞ்சும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி நிறுவனம் இந்த ஒய்ஒய்8 காருக்கான பேட்டரி பேக்கை சீன கார் தயாரிப்பு நிறுவனமான பிஒய்டி நிறுவனத்திடமிருந்து வாங்குகிறது. இந்த காரின் மோட்டாரை பொருத்தவரை 2 வித ஆப்ஷன்களில் வரவுள்ளது. 2 வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் என இரண்டு ஆப்ஷனும் இருக்கும். இதன் பவரை பொருத்தவரை 138 எச்பி முதல் 170 எச்பி பவரை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
மாருதி நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை வரும் 2025ம் ஆண்டு இந்தியச் சந்தைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் விற்பனைக்கு வரும் போது ரூ13-15 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது எம்ஜி ஸிஎஸ் இவி காரை போன்ற ஒரு கார் டாடா நெக்ஸான் இவி காரின் விலைக்கு வருகிறது. இது தான் மாருதி நிறுவனத்திடம் மக்கள் விரும்புவதே, குறைந்த விலைக்கு மக்கள் விரும்பும் காரை வழங்கவுள்ளது.
இந்த காரின் கான்செப்ட் காரை வரும் ஜனவரி மாதம் நடக்கவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. எலெக்ட்ரிக் கார் மார்கெட்டில் மாருதிக்கு இடமேயில்லை என்ற எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும் நிலையில் மிக கெத்தாக தன் முதல் காரை அறிமுகப்படுத்தவுள்ளதாக தற்போது வந்துள்ள செய்தி அதன் போட்டியாளர்களான டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்களின் தலையில் இடியாக இறங்கியுள்ளது.
ஆனால் இந்த ஆட்டோ எக்ஸ்போவில் மாருதியின் ஆட்டம் இத்தோடு நிற்கப்போவதில்லை. இந்த ஆட்டோ எக்ஸ்போவிலேயே ஜிம்னி 5 டோர் கார் மற்றும் வேகன் ஆர் காரின் பிளக்ஸி ஃப்யூயல் வெர்ஷன்களையும் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த கார்கள் எல்லாம் மார்கெட்டிற்கு வந்தால் மற்ற கார்களின் மார்கெட் காலியாகிவிடும்தானே? மாருதியின் புதிய எலெக்டரிக் கார் குறித்த உங்கள் கருத்து என்ன கமெண்டில் சொல்லுங்கள்!


Click it and Unblock the Notifications








