உங்களுக்கான ப்ரெஸ்ஸா காரை உங்க விருப்பம் போல மாத்திக்கலாம்... சூப்பரான வசதியை அறிமுகம் செய்த மாருதி சுசுகி!
மாருதி சுசுகி (Maruti Suzuki) நிறுவனம் விட்டாரா ப்ரெஸ்ஸா (Vitara Brezza) காரை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாடிஃபை செய்து வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் காராக மாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா (Maruti Suzuki Vitara Brezza) இருக்கின்றது. இது ஓர் காம்பேக்ட் எஸ்யூவி ரக காராகும். இந்த பிரிவில் மிக அதிகம் விற்பனையாகும் காரும் இதுவே ஆகும். இக்காருக்கென இந்தியாவில் தனி ரசிக பட்டாளமே இருக்கின்றது.

எனவேதான் விற்பனையில் இக்கார் எப்போதுமே ஓர் தலைவனை போல் தன்னைக் காட்டி வருகின்றது. இத்தகைய காருக்கே சிறப்பு வசதி ஒன்றை மாருதி சுசுகி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கான விட்டாரா ப்ரெஸ்ஸா காரை தங்களுக்கு பிடித்தவாறு மாற்றியமைத்துக் கொள்ளும் வசதியையே நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

பிரத்யேகமாக விட்டாரா ப்ரெஸ்ஸாவிற்கு மட்டுமே இந்த வசதியை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மாருதி சுசுகி நிறுவனம் விட்டாரா ப்ரெஸ்ஸா எஸ்யூவி காரை அரெனா ஷோரூம்கள் வாயிலாக விற்பனைச் செய்து வருகின்றது. இந்த விற்பனையகங்கள் வாயிலாகவோ அல்லது ஆன்லைன் வாயிலாகவோ தங்களுக்கு தேவையான மாடிஃபிகேஷன்களை வாடிக்கையாளர்கள் செய்து கொள்ளலாம். இதற்கான வசதிகளை நிறுவனம் ஏற்கனவே ஏற்படுத்தி விட்டது குறிப்பிடத்தகுந்தது.

இந்த சிறப்பு வசதியை அறிமுகப்படுத்திய கையோடு அதனை விளம்பரப்படுத்தும் வீடியோ ஒன்றையும் மாருதி சுசுகி வெளியிட்டிருக்கின்றது. வீடியோ அரெனாவின் அதிகாரப்பூர்வ யுட்யூப் சேனலில் வெளியிடப்பட்டிருக்கின்றது. இதுகுறித்த வீடியோவை கீழே காணலாம்.
இச்சிறப்பு வசதியை ஐகிரியேட் (iCreate) எனும் பெயரில் மாருதி சுசுகி அறிமுகம் செய்திருக்கின்றது. இதன் வாயிலாக வாடிக்கையாளர்கள் அவர்களுக்கான விட்டாரா ப்ரெஸ்ஸா காரை தனித்துவமானதாக மாற்றிக் கொள்ள முடியும். ஐகிரியேட் வாயிலாக காரின் மேற்கூரை, ஓஆர்விஎம், அலாய் வீல், ஹெட்லேம்ப் ஆகியவற்றை தங்களின் டேஸ்டிற்கு ஏற்ப மாற்றிக் கொள்ள முடியும். இதேபோல், ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட் கார்னிஷ் குரோம் டூர் ஹேண்டில்கள், ஸ்பாய்லர் கார்னிஷ் கொண்ட கார்பன் ஃபைபர் உள்ளிட்டவற்றையும் பொருத்திக் கொள்ள முடியும்.

இந்த மாற்றியமைக்கும் வசதியை வெறும் வெளிப்புறத்திற்கு மட்டும் வழங்கவில்லை. தேவைப்பட்டால் காரின் உட்பக்கத்தையும் வாடிக்கையாளர்கள் மாற்றிக் கொள்ளலாம். இதன்படி, டேஷ்போர்டு, இருக்கைகளுக்கான கவர்கள் போன்றவற்றை மாற்றிக் கொள்ள முடியும். இதுமட்டுமின்றி, ஒயர்லெஸ் சார்ஜர் போன்ற பிரீமியம் கருவிகளையும் கூடுதலாக பொருத்திக் கொள்ள முடியும்.

இதுமாதிரியான சிறப்பு வசதிகளையே மாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா காருக்கு ஐகிரியேட் வாயிலாக அறிமுகம் செய்துள்ளது. இக்கார் இந்தியாவில் ரூ. 7.69 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஒட்டுமொத்தமாக ஏழு விதமான வேரியண்ட் தேர்வுகளையும் இக்கார் வழங்குகின்றது. இந்த நிலையிலேயே கூடுதல் சிறப்பு கஸ்டமைசேஷன் ஆப்ஷனாக ஐகிரியேட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா எஸ்யூவி காரில் புதிய 1.5 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 105 பிஎஸ் மற்றும் 138 என்எம் டார்க் வரை வெளியேற்றும். மேலும், அதிகபட்சமாக 18.76 கிமீ வரை இது மைலேஜ் வழங்கும். 4 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும் ப்ரெஸ்ஸாவின் மைலேஜ் திறனே இதுவாகும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும் விட்டாரா ப்ரெஸ்ஸா அதிகபட்சமாக 17.03 கிமீ வரை மைலேஜ் தரும்.

விட்டாரா ப்ரெஸ்ஸா எஸ்யூவி காரில் 7 இன்ச் அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்டது), சாவியில்லா நுழைவு, புஷ் பட்டன் ஸ்டார்ட் / ஸ்டாப் வசதி, தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல், ரியர் பார்க்கிங் கேமிரா மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற பிரீமியம் அம்சங்களும் வழங்கப்படுகின்றன.

இதுமட்டுமின்றி, எல்இடி புரஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி பகல்நேர மின் விளக்கு, எல்இடி டெயில் லேம்ப், தானியங்கி ஹெட்லேம்ப், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், கூல்டு குளோவ் பாக்ஸ், எல்இடி ஃபாக் லைட், முன் பக்கத்தில் ஆர்ம் ரெஸ்ட், மின்சாரத்தால் கட்டுப்படுத்தக் கூடிய குரோம் பூச்சுக் கொண்ட ரியர் வியூ கண்ணாடிகள் உள்ளிட்ட அம்சங்களும் மாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா எஸ்யூவி காரில் வழங்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








