“எங்களது டிசைர் கார்களில் இந்த பிரச்சனை இருக்கு” - பகீரங்கமாக ஒப்புக்கொண்ட மாருதி சுஸுகி!!
இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி விற்பனை செய்யப்பட்ட அதன் டிசைர் செடான் கார்களை, கண்டறியப்பட்ட பழுது ஒன்றின் காரணமாக திரும்ப அழைப்பதாக அறிவித்துள்ளது.
Recommended Video
எந்த மாதிரியான பழுது அது? இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கையில் எந்தெந்த டிசைர் கார் உரிமையாளர்கள் உட்படுகின்றனர் என்பதை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவில் அதிகளவில் பயணிகள் கார்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகியில் இருந்து பல்வேறு விதமான உடலமைப்புகளில் பயணிகள் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் மாருதி சுஸுகியின் டிசைர் செடான் மாடல் சற்று ஸ்பெஷலானதே.

ஏனெனில், இந்தியா மட்டுமின்றி உலகளவில் புதிய புதிய எஸ்யூவி கார்களின் வருகையால் செடான் ரக கார்களின் விற்பனை பெரிய அளவில் சரிவடைந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகக்கூடிய ஒரே செடான் காராக மாருதி சுஸுகி டிசைர் விளங்குகிறது. இதில் என்ன ஸ்பெஷல் என்று கேட்கிறீர்களா...

செடான் கார்களின் ட்ரெண்ட் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டாலும், ஒவ்வொரு மாதத்திலும் சராசரியாக 10 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் டிசைர் செடான் கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்கிறது. அதுவே இதற்கடுத்து விற்பனையில் 2வது இடத்தை பிடிக்கும் செடான் காரின் விற்பனை எண்ணிக்கை பெரும்பாலும் பல ஆயிர யூனிட்கள் குறைவாகவே இருக்கும்.

இத்தகைய செடான் மாடலையே பழுது ஒன்று சரிபார்ப்பிற்காக தயாரிப்பு நிறுவனம் திரும்ப அழைக்கிறது. ஆனால் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக விற்கப்பட்ட டிசைர் கார்கள் திரும்ப அழைக்கப்படவில்லை. மாறாக, டாக்சி உள்ளிட்ட கமர்ஷியல் பயன்பாட்டிற்காக விற்கப்பட்ட டிசைர் டூர் எஸ் கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன.

விபத்தின்போது பயணிகளின் பாதுகாப்பிற்காக வழங்கப்படும் காற்றுப்பைகள் (Airbags) தவறானதாக பொருத்தப்பட்டுள்ளதாக மொத்தம் 166 டிசைர் டூர் எஸ் கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் திரும்ப அழைக்கிறது. மேலும், நிறுவனத்தின் காற்றுப்பை கட்டுப்பாட்டு பிரிவு, மொத்தம் 166 டிசைர் டூர் எஸ் கார்களில் காற்றுப்பைகளை மாற்றி பொருத்த விரும்புவதாக மாருதி சுஸுகி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஆகும் செலவு மொத்தத்தையும் மாருதி சுஸுகி நிறுவனமே கவனித்து கொள்ளவுள்ளது. இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கையில் கடந்த 2022 ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரையில், அந்த 10 நாட்களில் தயாரிக்கப்பட்ட டிசைர் டூர் எஸ் கார்கள் உட்படுகின்றன. ஆதலால் மிக சமீபத்தில் டிசைர் டூர் எஸ் கார்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் 166 பேர் மட்டுமே திரும்ப அழைக்கப்படுகிறார்கள்.

இதுகுறித்து மாருதி சுஸுகி நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘குறிப்பிட்ட டிசைர் டூர் எஸ் கார்களின் காற்றுப்பைகளில் பழுது ஏற்பட சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஏர்பேக் கண்ட்ரோல் யூனிட் கண்டறிந்துள்ளதால், இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கை ஆனது அவசியமாகிறது. இந்த பழுதினை சரிப்பார்க்கவில்லையெனில், எதிர்காலத்தில் காற்றுப்பைகள் முற்றிலுமாக செயல்படாமல் போவதற்கு வாய்ப்புள்ளது.

ஆதலால், அந்த குறிப்பிட்ட டிசைர் டூர் எஸ் கார்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் ஏர்பேக் கண்ட்ரோல் யூனிட் பழுதை சரிப்பார்க்கும் வரையில் காரை பயன்படுத்த வேண்டாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் சம்மந்தப்பட்ட கார் உரிமையாளர்களை மாருதி சுஸுகி நிறுவனம் விரைவில் தொடர்பு கொள்ளும்.

அதன்பின்னர், காற்றுப்பைகளை மாற்றியமைப்பதற்கு மாருதி சுஸுகி நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட மெக்கானிக் ஷாப்களில் இருந்து குறுஞ்செய்திகள் வரும். இதுகுறித்து மாருதி சுஸுகி சார்பில் தெரிவிக்கையில், "வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் ‘இம்ப் கஸ்டமர்ஸ் இன்ஃபோ' பிரிவில் காரின் சேசிஸ் எண்ணை உள்ளீடு செய்து தாங்கள் இந்த திரும்ப அழைத்தலில் உட்படுகிறோமா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளலாம்" என கூறப்பட்டுள்ளது.

கமர்ஷியல் பயன்பாட்டிற்கான மாருதி சுஸுகி டிசைர் டூர் எஸ் செடான் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.6.05 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சம் வரையில் உள்ளன. மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் இந்த மாருதியின் ஃப்ளீட் செடான் காரை சிஎன்ஜி தேர்விலும் வாங்க முடியும். இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








