நேருக்கு நேரா மோதி பாத்தரலாம்... மாருதி - டாடா போட்டி சூடுபிடிக்குது... இதை யாருமே எதிர்பாத்திருக்க மாட்டீங்க!
மாருதி சுஸுகி மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய 2 நிறுவனங்களும் நேருக்கு நேராக மோத தயாராகி வருகின்றன.

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமாக மாருதி சுஸுகி திகழ்கிறது. எனினும் பாதுகாப்பு உள்ளிட்ட ஒரு சில அம்சங்களில் மாருதி சுஸுகி கார்கள் கடுமையான விமர்சனத்தை சந்தித்து வருகின்றன. ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் பாதுகாப்பில் தலைசிறந்து விளங்குகின்றன. இதன் காரணமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ளது.

இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில், மாருதி சுஸுகி மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் நேரடி போட்டி நிலவி வருகிறது. இந்த செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி நிறுவனம் பிரெஸ்ஸா காரையும், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் காரையும் விற்பனை செய்து கொண்டுள்ளன.

சமீப காலமாக டாடா நெக்ஸான் காரின் விற்பனை எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வந்த காரணத்தால், அதை எதிர்கொள்ளும் விதமாக பல்வேறு புதிய வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்ட 2022 பிரெஸ்ஸா காரை மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்தது.

இதனால் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய இரண்டு கார்களுக்கும் இடையேயான போட்டி சூடுபிடித்துள்ளது. இப்படிப்பட்ட ஒரு சூழலில், இந்த போட்டி கூடிய விரைவில் அடுத்த கட்டத்திற்கு செல்லவுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளதால், சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் போன்ற மாற்று எரிபொருள் கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது.

இதில், எலெக்ட்ரிக் கார்கள் மெதுவாக பிரபலமடைந்து வரும் நிலையில், சிஎன்ஜி கார்களுக்கான டிமாண்ட் வேகமாக அதிகரித்து கொண்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளும் வகையில், இந்திய சந்தைக்காக ஏராளமான சிஎன்ஜி கார்களை உருவாக்கும் பணிகளில் மாருதி சுஸுகி மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

மாருதி சுஸுகி மற்றும் டாடா ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் இடையேயான சிஎன்ஜி போட்டி சப்-4 மீட்டர் காம்பேக்ட் செக்மெண்ட்டிலும் எதிரொலிக்கவுள்ளது. ஆம், மாருதி சுஸுகி நிறுவனம் பிரெஸ்ஸா காரின் சிஎன்ஜி வெர்ஷனையும், டாடா நிறுவனம் நெக்ஸான் காரின் சிஎன்ஜி வெர்ஷனையும் உருவாக்கும் பணிகளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இதில், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி கார்தான் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி வெர்ஷன் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாக தொடங்கியுள்ளன. LXi, VXi, ZXi மற்றும் ZXi+ என மொத்தம் 4 வேரியண்ட்களில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.

மாருதி சுஸுகி எர்டிகா சிஎன்ஜி காரில் இடம்பெற்றுள்ள அதே 1.5 லிட்டர் இன்ஜின்தான் பிரெஸ்ஸா சிஎன்ஜி காரிலும் இடம்பெற்றிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எர்டிகா சிஎன்ஜி காரில் இந்த இன்ஜின் 92 பிஎஸ் பவரையும், 122 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியதாக உள்ளது. இதே அளவிலான பவர் அவுட்புட்டைதான் பிரெஸ்ஸா சிஎன்ஜி காரிலும் இந்த இன்ஜின் உருவாக்கும் என கூறப்படுகிறது.

அதே நேரத்தில் மாருதி சுஸுகி எர்டிகா சிஎன்ஜி காரில் இந்த இன்ஜின் ஒரு கிலோவிற்கு 26.08 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி காரின் மைலேஜ் இதை விட அதிகமாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி காரை பற்றிய மற்றொரு தகவலும் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது.

அதாவது மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி கார் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டு வகையான கியர் பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் சிஎன்ஜி ஆப்ஷனுடன் கிடைக்கும் இந்தியாவின் முதல் எஸ்யூவி ரக கார் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனுடன் கிடைக்கும் இந்தியாவின் முதல் சிஎன்ஜி கார் ஆகிய 2 பெருமைகளை பிரெஸ்ஸா சிஎன்ஜி கார் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இப்படி பல்வேறு சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு வரவுள்ள மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி காருக்கு போட்டியாக டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் வெகு விரைவில் நெக்ஸான் சிஎன்ஜி காரை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது நெக்ஸான் சிஎன்ஜி காரை இந்திய சாலைகளில் சோதனை செய்து வருகிறது.

சிஎன்ஜி மாடலின் வருகைக்கு பின்பு, பெட்ரோல், டீசல், எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி ஆகிய 4 ஆப்ஷன்களில் கிடைக்க கூடிய ஒரே எஸ்யூவி கார் என்ற பெருமையை டாடா நெக்ஸான் தன்வசப்படுத்தும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். தற்போதைய நிலையில் டாடா நெக்ஸான் காரில், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

அத்துடன் டாடா நெக்ஸான் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் விற்பனைக்கு கிடைக்கிறது. இதுதான் தற்போது இந்தியாவில் அதிகம் விற்பனையாகி கொண்டுள்ள எலெக்ட்ரிக் கார் ஆகும். இதேபோல் நெக்ஸான் சிஎன்ஜி மாடலுக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எதிர்பார்க்கிறது.


Click it and Unblock the Notifications








