மாருதி எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் காரில் புதியதாக அப்டேட்கள் இவ்வளவுதானா!! பொது சாலையில் சோதனை!
விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படும் மாருதி சுஸுகி எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் காரின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவினை பற்றியும், புதிய எர்டிகா ஃபேஸ்லிஃப்ட்டில் எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பற்றியும் இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கொரோனா ஊரடங்கு காலங்களில் இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகியில் இருந்து பெரியதாக எந்தவொரு கார்களும் அறிமுகப்படுத்தப்படவில்லை. இதனாலேயே அப்போது தள்ளிப்போடப்பட்ட புதிய மாருதி கார்கள் ஒவ்வொன்றாக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த வகையில் சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட தோற்றத்திலான புதிய தலைமுறை மாருதி சுஸுகி செலிரியோ கார் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இதனை தொடர்ந்து மிக விரைவில் பலேனோவின் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இவற்றிற்கு அடுத்ததாக மேலும் சில மாடல்களின் ஃபேஸ்லிஃப்ட் கார்களும் மாருதி சுஸுகி பிராண்டில் இருந்து வெளிவரவுள்ளன.

இதில் எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் காரும் ஒன்றாகும். எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் கார் தொடர்பான செய்திகள் இதற்குமுன் சில முறை வெளிவந்திருந்தாலும், இந்த காரின் தோற்றம் இதுவரையில் வெளிவரவில்லை. இந்த நிலையில் தற்போது எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் காரின் சோதனை ஓட்டம் தொடர்பான வீடியோ ஒன்று யுடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை கீழே காணலாம்.
இந்த வீடியோவில், வழக்கமான எர்டிகா எம்பிவி கார் தான் சற்று முன்பக்கம் மறைக்கப்பட்டு சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதை காண முடிகிறது. முன்பக்கத்தில் காரின் க்ரில் அமைப்பு மட்டுமே மறைப்பால் மறைக்கப்பட்டுள்ளது. மற்ற ஹெட்லேம்ப்கள், ஃபாக் விளக்குகள் மற்றும் பம்பர் உள்ளிட்டவை எந்தவொரு மறைப்பாலும் மறைக்கப்படவில்லை.

இதன் மூலமாக எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் காரில் முக்கியமான மாற்றங்கள் அனைத்தும் முன்பக்க க்ரில் பகுதியில் தான் வழங்கப்பட உள்ளதை அறிய முடிகிறது. இத்துடன் எர்டிகாவின் முன்பக்கத்தில் ஹெட்லேம்ப்கள் மற்றும் பம்பரின் வடிவங்களிலும் சில திருத்தங்களை எதிர்பார்க்கிறோம். ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் என்பதால் எர்டிகாவில் முக்கியமான மாற்றங்கள் அனைத்தும் முன்பக்கத்திலும், பின்பக்கத்திலுமே வழங்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

இதனால் காரின் பின்பக்கத்திலும் எல்இடி டெயில்லேம்ப்கள் மற்றும் பம்பரின் வடிவங்கள் திருத்தியமைக்கப்படலாம். இதை தவிர்த்து எர்டிகாவின் பக்கவாட்டில் பெரியதாக எந்த மாற்றமும் கொண்டுவரப்படாமலும் போகலாம். எர்டிகா ஃபேஸ்லிஃப்ட்டின் உட்புற கேபின் புதிய டிசைனிலான உள்ளமைவு மற்றும் சில புதிய பாகங்கள் உடனான டேஸ்போர்டு உள்ளிட்டவற்றை பெற்று வரலாம்.

எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் காரின் உட்புற தோற்றம் எவ்வாறு இருக்கும் என்பது இன்னமும் நமக்கு உறுதியாக தெரியாததால், அதனை பற்றி தற்போதைக்கு விவாதிக்க இயலாது. இருப்பினும், எர்டிகாவின் என்ஜின் தேர்வுகளில் எந்தவொரு மாற்றத்தையும் மாருதி சுஸுகி நிறுவனம் கொண்டுவராது என்றே நினைக்கிறோம். தற்சமயம் எர்டிகாவில் 1.5 லிட்டர், கே-சீரிஸ், 4-சிலிண்டர், நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

அதிகப்பட்சமாக 105 பிஎஸ் மற்றும் 138 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இதனுடன் 4-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் தற்போது வழங்கப்படுகிறது. ஆனால் புதிய எர்டிகாவில் இதற்கு பதிலாக புதியதாக 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் யூனிட்டை எதிர்பார்க்கிறோம்.

ஏனெனில் 4-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் மிகவும் பழையது ஆகிவிட்டது. 2003இல் கிராண்ட் விட்டாரா எக்ஸ்.எல்7 காரில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வின் பெரிய குறை என்னவென்றால், இதில் அதிகளவில் கியர்கள் கிடைப்பதில்லை என்பதாகும். இப்போதைய மாடர்ன் கார்களில் 6-ஸ்பீடு & 7-ஸ்பீடு என அதிக கியர்கள் வழங்கப்படுவது வாடிக்கையாக மாறிவிட்டது.

அத்துடன் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் அமைப்பாக டார்க் கன்வெர்டர் வழங்கப்படுவதும் மெல்ல மெல்ல ஓரங்கட்டப்பட்டு வருகிறது. இதற்கு மாற்றாக இரட்டை-க்ளட்ச் மற்றும் சிவிடி-கள் தற்போதைய கார்களில் வழங்கப்படுகின்றன. ஆனால் புதிய ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு எர்டிகாவில் அறிமுகப்படுத்துவது குறித்து இதுவரையில் எந்தவொரு அறிவிப்பையும் மாருதி சுஸுகி வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications







