மாருதியின் புதிய கார்களுக்கு அதுக்குள்ள இவ்ளோ ஆர்டர்கள் குவிஞ்சிருச்சா! புக் பண்ண எல்லாரும் வரிசைல நிக்கறாங்க!
மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய கார்களுக்கு கூரையை பிய்த்து கொண்டு முன்பதிவுகள் குவிந்து வருகின்றன.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த கார்களில் ஒன்று 2022 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா. கடந்த ஜூன் மாதம்தான் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. பழைய மாடலுடன் ஒப்பிடுகையில், புதிய மாடலில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் க்ராண்ட் விட்டாரா காரை மாருதி சுஸுகி விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த காருக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளது. இவை இரண்டுமே எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்கள்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஆனால் சிறிய வித்தியாசம் இருக்கிறது.

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரானது, சப்-4 காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். மறுபக்கம் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரானது, மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது. இந்த 2 கார்களின் வருகையின் மூலம் இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் எஸ்யூவி லைன்-அப் வலிமையடைந்துள்ளது.

இந்த 2 கார்களுக்கும் ஒட்டுமொத்தமாக சேர்த்து 2 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன. இது மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் கார்களை விரைவாக டெலிவரி செய்வதற்கான முயற்சிகளை தற்போது மாருதி சுஸுகி நிறுவனம் தீவிரமாக எடுத்து வருகிறது.

இந்திய சந்தையில் டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஹூண்டாய் வெனியூ, கியா சொனெட் ஆகிய கார்களுடன் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா போட்டியிட்டு வருகிறது. மறுபக்கம் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக் ஆகிய கார்களுடன், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா போட்டியிட்டு கொண்டுள்ளது.

2022 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரில், 1.5 லிட்டர், K15C, நான்கு-சிலிண்டர், மைல்டு-ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே இன்ஜின்தான், க்ராண்ட் விட்டாரா காரிலும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் க்ராண்ட் விட்டாரா காரில் கூடுதலாக மற்றொரு இன்ஜின் ஆப்ஷனும் இடம்பெற்றுள்ளது. அது ஸ்ட்ராங்-ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆகும்.

அது 1.5 லிட்டர், மூன்று சிலிண்டர், ஸ்ட்ராங்-ஹைப்ரிட், பெட்ரோல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் சுமாராக ஒரு லிட்டருக்கு 28 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் இதற்கு அடுத்தபடியாக பிரெஸ்ஸா காரின் சிஎன்ஜி வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் சிஎன்ஜி வெர்ஷனில் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனும் இருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் சிஎன்ஜி வெர்ஷன் இந்தியர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி வெர்ஷன் வெகு விரைவிலேயே விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தெரிகிறது.

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரை போலவே, அதன் மிக முக்கியமான போட்டி மாடல்களில் ஒன்றான டாடா நெக்ஸான் காரின் புதிய சிஎன்ஜி வெர்ஷனும் வெகு விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. நல்ல டிமாண்ட் இருப்பதால், மாருதி சுஸுகி மற்றும் டாடா ஆகிய 2 நிறுவனங்களும் சிஎன்ஜி கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக இருப்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது சிஎன்ஜி கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதேபோன்று எலெக்ட்ரிக் கார்களின் பக்கமும் இந்திய வாடிக்கையாளர்களின் கவனம் கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வருகிறது. எனவே வரும் காலங்களில் ஏராளமான சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.

இந்தியாவின் சிஎன்ஜி கார் சந்தையில் மாருதி சுஸுகி ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடாவின் கை ஓங்கியுள்ளது. டாடா நெக்ஸான், டாடா டிகோர் மற்றும் டாடா டியாகோ ஆகிய கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்கள், இந்திய வாடிக்கையாளர்கள் பலரின் நம்பிக்கையான எலெக்ட்ரிக் கார்களாக மாறியுள்ளன.


Click it and Unblock the Notifications