போட்டியாளர்களின் வயிற்றில் புளியை கரைக்கும் மாருதியின் புது கார்! புக்கிங் நம்பரை பாத்து கதிகலங்கி போய்ட்டாங்க
மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய கார் போட்டியாளர்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara). இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் ஏற்கனவே நிறைய கார்கள் மிகவும் பிரபலமாக உள்ளன.

இதில், கியா செல்டோஸ் (Kia Seltos), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) மற்றும் ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) ஆகிய கார்கள் குறிப்பிடத்தக்கவை. இந்த கார்களுடன்தான் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் விற்பனையில் போட்டியிடவுள்ளது.

இதுதவிர விரைவில் விற்பனைக்கு வரவுள்ள டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) காருடனும், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் போட்டியிடும். டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதாக இருந்தது. ஆனால் அதன் அறிமுகம் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அதற்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரை வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் மாருதி சுஸுகி நிறுவனமும் க்ராண்ட் விட்டாரா காரை வரும் செப்டம்பர் மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம் அரேனா மற்றும் நெக்ஸா டீலர்ஷிப்கள் வாயிலாக தங்களது கார்களை விற்பனை செய்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இதில், நெக்ஸா டீலர்ஷிப்கள் மூலம்தான் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் விற்பனை செய்யப்படவுள்ளது. நெக்ஸா டீலர்ஷிப்களில் விற்பனை செய்யப்படுவதை பிரீமியம் கார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாள் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா டீலர்ஷிப்களுக்கு தற்போது க்ராண்ட் விட்டாரா கார்கள் வர தொடங்கியுள்ளன. மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரை விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் டெஸ்ட் டிரைவ் செய்யும் பணிகள் வெகு விரைவில் தொடங்கப்படவுள்ளது.

தற்போது இந்த காருக்கு முன்பதிவுகள் ஏற்கப்பட்டு வருகின்றன. விலை எவ்வளவு? என்பது இன்னும் உறுதியாக தெரியாத நிலையிலேயே மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காருக்கு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இது போட்டி நிறுவனங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும். இதில், 1.5 லிட்டர் K15C பெட்ரோல் மைல்டு ஹைப்ரிட் இன்ஜின் ஒன்றாகும். மற்றொன்று 1.5 லிட்டர் TNGA பெட்ரோல் ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் ஆகும். சிறப்பான இன்ஜின் ஆப்ஷன்களுடன், ஏராளமான வசதிகளையும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் பெற்றுள்ளது.

இதில், பனரோமிக் சன்ரூஃப், முன் பகுதியில் வென்டிலேட்டட் இருக்கைகள், 360 டிகிரி கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரின் விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான் விலை அறிவிக்கப்படும்.

ஆனால் இந்த காரின் ஆரம்ப விலை 9.50 லட்ச ரூபாயாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டால், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் விற்பனையில் சாதிக்கும் என்றே கருதப்படுகிறது. மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே, டெலிவரி பணிகளும் தொடங்கப்பட்டு விடும் என கூறப்படுகிறது.

அதாவது வரும் செப்டம்பர் மாதத்திலேயே மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரின் டெலிவரி பணிகளும் தொடங்கப்படலாம். ஆனால் தற்போது குவிந்துள்ள முன்பதிவு எண்ணிக்கையை வைத்து பார்க்கும்போது, மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காருக்கான காத்திருப்பு காலம் மிகவும் அதிகமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








