அடேங்கப்பா... விலை ரூ.10 லட்சம் தான் இருந்தாலும் புதிய மாருதி காரில் சன்ரூஃப்!! அசத்தலான அம்சங்களுடன் விட்டாரா
புதிய கிராண்ட் விட்டாரா எஸ்யூவி காரில் வழங்கப்பட உள்ள முக்கிய அம்சம் குறித்த டீசர் வீடியோவினை மாருதி சுஸுகி நிறுவனம் அதன் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளது. அதனை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவின் நம்பர்.01 பயணிகள் கார்கள் விற்பனை நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி விரைவில் அதன் புதிய காம்பெக்ட் எஸ்யூவி காராக கிராண்ட் விட்டாராவை அறிமுகப்படுத்த அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது. இதற்கிடையில் புதிய கிராண்ட் விட்டாரா காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டும் வகையில் கடந்த சில நாட்களாக டீசர்களை இந்த நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
இந்த வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் வீடியோவில், புதிய விட்டாரா காரில் முக்கிய சிறப்பம்சமாக பனோராமிக் சன்ரூஃப் வழங்கப்பட உள்ளதை மாருதி சுஸுகி சுட்டிக்காட்டி உள்ளது. இதை ஏன் நான் இவ்வளவு அழுத்தமாக கூறுகிறேன் என்றால், இதுவரையில் தனது எந்தவொரு மாடலிலும் பனோராமிக் சன்ரூஃப்-ஐ மாருதி சுஸுகி நிறுவனம் வழங்குவதில்லை. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பிரெஸ்ஸா சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரில் சன்ரூஃப் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் அதில் ஒற்றை-பேன் சன்ரூஃப் தான் வழங்கப்பட்டுள்ளது. பனோராமிக் சன்ரூஃப்-ஐ பெறும் முதல் மாருதி கார் புதிய கிராண்ட் விட்டாரா ஆகும். சில வருடங்களுக்கு முன்பெல்லாம், பனோராமிக் சன்ரூஃப் ஆனது சொகுசு கார்களில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.10 லட்சத்திற்குள் ஆரம்ப விலையை பெற்றுவரும் மாருதி காரில் கூட வழங்கப்பட உள்ளது உண்மையில் ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.

ஆனால் எங்களுக்கு தெரிந்தவரையில், பனோராமிக் சன்ரூஃப் ஆனது புதிய விட்டாரா மாடலின் டாப் வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்பட வாய்ப்புள்ளது. புதிய விட்டாரா காம்பெக்ட் எஸ்யூவி காரின் விலையினை இன்னும் மாருதி சுஸுகி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. சமீபத்தில் நமக்கு கிடைக்க பெற்றிருந்த செய்தியை வைத்துதான் இந்த புதிய மாருதி சுஸுகி கார் ரூ.10 லட்சத்திற்குள்ளான ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்படலாம் என கூறுகிறோம்.

சமீபத்திய செய்தியில், புதிய விட்டாரா மாடல் ரூ.9.95 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. என்ஜின் தேர்வுகளை பொறுத்தவரையில், புதிய மாருதி கிராண்ட் விட்டாரா கார் சமீபத்திய டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மாடலில் இருந்து பெற்றுவரவுள்ளது. இதன்படி, கிராண்ட் விட்டாரா (மைல்ட்-ஹைப்ரிட்) மற்றும் கிராண்ட் விட்டாரா இண்டெலிஜண்ட் எலக்ட்ரிக் ஹைப்ரிட் என்கிற இரு விதமான வேரியண்ட்களில் மாருதி சுஸுகியின் இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவி கார் விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் மைல்ட்-ஹைப்ரிட் வேரியண்ட்டில் 1.5 லிட்டர் கே15சி இரட்டை ஜெட் விவிடி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட உள்ளது. மாருதியின் எக்ஸ்.எல்6, எர்டிகா மற்றும் புதிய பிரெஸ்ஸா மாடல்களிலும் வழங்கப்பட்டு வருகின்ற இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 102 பிஎச்பி மற்றும் 136.8 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதனுடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

வலிமையான ஹைப்ரிட் வேரியண்ட்டாக கொண்டுவரப்பட உள்ள கிராண்ட் விட்டாரா இண்டெலிஜண்ட் எலக்ட்ரிக் ஹைப்ரிட் வேரியண்ட்டில் 1.5 லிட்டர் டிஎன்ஜிஏ பெட்ரோல் என்ஜின், எலக்ட்ரிக் மோட்டார் உடன் கொடுக்கப்பட உள்ளது. இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 92.4 எச்பி மற்றும் 122 என்எம் டார்க் திறனையும், எலக்ட்ரிக் மோட்டார் ஆனது 80.2 எச்பி மற்றும் 141 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியவை.

மொத்தமாக 115 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். இந்த வலிமைமிக்க ஹைப்ரிட் வேரியண்ட்டில் டிரான்ஸ்மிஷனுக்கு இ-சிவிடி கியர்பாக்ஸ் வழங்கப்பட உள்ளது. இவற்றின் மூலமாக இந்திய காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் பிரிவிலேயே சிறந்த மைலேஜை வழங்கக்கூடிய காராக கிராண்ட் விட்டாரா ஹைப்ரிட் விளங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இத்துடன் குறிப்பிடத்தக்க விஷயமாக, அல்க்ரிப் என்கிற பெயரில் அனைத்து-சக்கர-ட்ரைவ் அமைப்பையும் இந்த புதிய மாருதி கார் பெற்று வருகிறது.

ஆனால் அனைத்து-சக்கர-ட்ரைவ் தேர்வு ஆனது மைல்ட்-ஹைப்ரிட் வேரியண்ட்டின் மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் மட்டுமே வழங்கப்பட உள்ளதாம். இதன் ஆட்டோமேட்டிக் ட்ரிம் நிலைகளிலும், வலிமையான ஹைப்ரிட் வேரியண்ட்டிலும் அனைத்து-சக்கர-ட்ரைவ் கிடைக்காதாம். விற்பனையில் கிராண்ட் விட்டாராவுக்கு போட்டியளிக்க ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் உள்ளிட்ட பிரபலமான காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் தயாராக உள்ளன.


Click it and Unblock the Notifications








