மாருதி போட்ட பிளான் நல்லா வேலை செய்யுது! இந்த காருக்கு அதுக்குள்ள இவ்ளோ புக்கிங்கா! அடுத்த செக் டாடாவுக்குதான்
மாருதி சுஸுகி நிறுவனம் போட்ட திட்டம் நன்றாக வேலை செய்கிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) கார், கடந்த செப்டம்பர் 26ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. சிக்மா, டெல்டா, ஜெட்டா, ஆல்பா, ஜெட்டா ப்ளஸ் மற்றும் ஆல்பா ப்ளஸ் என 6 வேரியண்ட்களில் இந்த கார் கிடைக்கும்.

அதே நேரத்தில் நெக்ஸா ப்ளூ, ஆர்க்டிக் ஒயிட், ஸ்ப்ளெண்டிட் சில்வர், க்ராண்டுர் க்ரே, ஜெஸ்ட்நட் ப்ரவுன், கருப்பு நிற மேற்கூரை உடன் ஆர்க்டிக் ஒயிட், கருப்பு நிற மேற்கூரை உடன் ஸ்ப்ளெண்டிட் சில்வர் மற்றும் கருப்பு நிற மேற்கூரை உடன் ஒபுலெண்ட் ரெட் என மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் மொத்தம் 9 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.
மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரின் மைல்டு ஹைப்ரிட் வெர்ஷன்களில், 1.5 லிட்டர் கே15சி பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. மறுபக்கம் இந்த காரின் ஸ்ட்ராங் ஹைப்ரிட் வெர்ஷன்களில், 1.5 லிட்டர் TNGA பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த இன்ஜினுடன் இ-சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் க்ராண்ட் விட்டாரா காரில், வாடிக்கையாளர்களுக்கு தேவையான பல்வேறு வசதிகளையும் மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கியுள்ளது. எனவே இந்த புதிய காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளது.
மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காருக்கு குவிந்துள்ள முன்பதிவுகளின் எண்ணிக்கையே இதை நமக்கு மிகவும் தெளிவாக உணர்த்துகிறது. மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரை கடந்த அக்டோபர் மாத நிலவரப்படியே இந்தியாவில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். 75 ஆயிரம் முன்பதிவுகள் என்பது சாதாரணமான விஷயம் அல்ல.
மாருதி சுஸுகி நிறுவனம் க்ராண்ட் விட்டாரா காரை விற்பனைக்கு அறிமுகம் செய்த உடனேயே டெலிவரி பணிகளையும் தொடங்கி விட்டது. தற்போது இந்த காரின் டெலிவரி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளதால், வரும் மாதங்களில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷாக் போன்ற கார்களுடன் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் போட்டியிட்டு வருகிறது. மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரின் வருகைக்கு முன்பு, ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் ஆகிய கார்கள்தான் இந்த செக்மெண்ட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்தன.
ஆனால் தற்போது மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரும் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது. இந்த போட்டியை சமாளிக்கும் விதமாக, ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் ஆகிய கார்களின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்கள் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. எனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களில் தீவிர கவனம் செலுத்துகிறது. ஆனால் மாருதி சுஸுகி நிறுவனம் அதற்கு பதிலாக ஹைப்ரிட் மற்றும் சிஎன்ஜி கார்களில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி அறிமுகம் செய்யப்பட்ட ஹைப்ரிட் கார்தான் க்ராண்ட் விட்டாரா.
மாருதி சுஸுகி நிறுவனம் எதிர்பார்த்ததை போலவே, க்ராண்ட் விட்டாரா காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் தற்போது அமோக வரவேற்பை வாரி வழங்கி வருகின்றனர். மாருதி சுஸுகி நிறுவனம் அடுத்ததாக பிரெஸ்ஸா காரின் புதிய சிஎன்ஜி வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இது டாடா நெக்ஸான் காருக்கு போட்டியை ஏற்படுத்தும். எனவே டாடா நிறுவனமும் நெக்ஸான் காரின் புதிய சிஎன்ஜி வெர்ஷனை களமிறக்க திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








