ஒன்னு 25.40 கிமீட்டரும், இன்னொன்னு 34.73 கிமீ மைலேஜையும் தரும்! வேகன்ஆர் மாடலில் இரு புதிய தேர்வுகள் அறிமுகம்!
2022 மாருதி சுஸுகி வேகன்ஆர் டூர் எச்3 (2022 Maruti WagonR Tour H3) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கும். இக்கார் குறித்த கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவை பற்றி பார்க்கலாம்.

இந்தியாவின் மிக பெரிய கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுஸுகி (Maruti Suzuki), அதன் வேகன்ஆர் (Wagon R) கார் மாடலில் வேகன்ஆர் டூர் எச்3 (WagonR Tour H3) எனும் புதிய பதிப்பை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இது இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

பிரத்யேகமாக டாக்சி மற்றும் பொது போக்குவரத்து சேவையை வழங்கும் நிறுவனங்களின் பயன்பாட்டிற்காக இப்புதிய வேகன்ஆர் டூர் எச்3 மாடல் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், தனி நபர் பயன்பாட்டிற்கு இந்த வாகனத்தை வாங்க முடியாது.

வேகன்ஆர் டூர் எச்3 பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரு விதமான தேர்வுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கும். பெட்ரோல் வெர்ஷனுக்கு ரூ. 5.39 லட்சம் விலையும், சிஎன்ஜி வசதிக் கொண்ட வெர்ஷனுக்கு ரூ. 6.34 லட்சம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரு விலைகளும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் மதிப்பு ஆகும்.

மாருதி சுஸுகி நிறுவனம் வேகன்ஆர் டூர் எச்3 மாடலில் 1.0 லிட்டர், 3 சிலிண்டர், கே10 சி பெட்ரோல் எஞ்ஜினை பயன்படுத்தியிருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 64 பிஎச்பி பவரை 5,500 ஆர்பிஎம்மிலும், 89 என்எம் டார்க்கை 3,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது.

சிஎன்ஜி வெர்ஷனிலும் இதே எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், சிஎன்ஜியால் இயங்குவதற்கான செய்யப்பட்ட மாற்றங்களால் மோட்டாரின் திறன் வெளிப்பாடு சற்றே மாற்றமடைந்திருக்கின்றது. சிஎன்ஜி வெர்ஷன் வேகன்ஆர் டூர் எச்3 அதிகபட்சமாக 56 பிஎச்பி பவரை 5,300 ஆர்பிஎம்மிலும், 82 என்எம் டார்க்கை 3,400 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும்.

5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே இந்த மாடலில் வழங்கப்படுகின்றது. மேலும், முன் வீல் இயக்கம் வசதி ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகின்றது. பெட்ரோல், சிஎன்ஜி இரண்டும் சிறந்த மைலேஜை வழங்கக் கூடியதாகக் காட்சியளிக்கின்றன.

நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, பெட்ரோல் வெர்ஷன் அதிகபட்சமாக ஒரு லிட்டருக்கு 25.40 கிமீ மைலேஜையும், சிஎன்ஜி வெர்ஷன் ஒரு கிலோவிற்கு 34.73 கிமீ மைலேஜையும் வழங்கும். மாருதி சுஸுகி இந்த காரை இரு விதமான நிற தேர்வுகளில் வழங்க இருக்கின்றது.

சுப்பீரியர் ஒயிட் (Superior White) மற்றும் சில்கி சில்வர் (Silky Silver) ஆகிய நிறத் தேர்வுகளிலேயே மாருதி சுஸுகி வேகன்ஆர் டூர் எச்3 கார் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இதுதவிர, இந்த ஹேட்ச்பேக்கை சில சிறப்பு அம்சங்களைக் கொண்டும் அது அலங்கரிக்க இருக்கின்றது.

அந்தவகையில், பாடி நிறத்திலான பம்பர், வீல் சென்டர் கேப், கருப்பு நிற ஓஆர்விஎம் மற்றும் கிரில் உள்ளிட்டவை இக்காரில் இடம் பெற இருக்கின்றன. இதுதவிர, உட்பக்கத்தில் ட்யூவல் டோன் நிறம், முன் பக்க கேபினுக்கான லைட்டுகள், டிரைவர் இருக்கைக்கான சன் விசர், டிக்கட் ஹோல்டர் உள்ளிட்டவையும் வழங்கப்படும்.

கூடுதலாக, ஹெட்ரெஸ்ட், பவர் விண்டோக்கள், மேனுவல் ஏசி, ரியர் பகுதியில் பார்சல் டிரே, முன் பக்கத்தில் ஸ்லைட் செய்யும் இருக்கைகள், ட்யூவல் ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ஸ்பீடு லிமிட் ஃபங்க்சன், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் சென்ட்ரல் டூர் லாக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களும் மாருதி சுஸுகி வேகன்ஆர் டூர் எச்3 காரில் இடம் பெறும்.


Click it and Unblock the Notifications








