பலர் தேடி செல்லும் பிராண்ட் ஆச்சே... மாருதி கார்களில் இப்படியொரு பிரச்சனையா!! இப்போவே சரிசெய்ய பாருங்க
இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஏறக்குறைய 10 ஆயிரம் மாருதி கார்கள் பழுது ஒன்றின் காரணமாக திரும்ப அழைக்கப்படுகின்றன. எந்த மாருதி கார்கள் அவை? எதற்காக திரும்ப அழைக்கப்படுகின்றன? என்பது குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் முன்னணி கார் பிராண்ட் என்றால் அது மாருதி சுஸுகி தான் என சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு ஒவ்வொரு மாதத்திலும் ஏறக்குறைய 1 லட்ச பயணிகள் கார்களை விற்பனை செய்யும் இந்த இந்திய-ஜப்பானிய கூட்டு நிறுவனம் தற்போது குறிப்பிட்ட அதன் 3 கார் மாடல்களை பழுது ஒன்றை காரணம் காட்டி திரும்ப அழைக்கிறது. வேகன்ஆர், செலிரியோ மற்றும் இக்னிஸ் என்பவையே அந்த 3 மாடல்களாகும்.

கடந்த 2022 ஆகஸ்ட் 3ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 1 ஆம் தேதி வரையில் உற்பத்தி செய்யப்பட்ட இவற்றின் 9,925 யூனிட்கள் இந்த திரும்ப அழைப்பு நடவடிக்கை உட்படுகின்றன. மேற்கூறப்பட்ட காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்ட 9,925 வேகன்ஆர், செலிரியோ மற்றும் இக்னிஸ் கார்களில் பின்பக்க பிரேக் அசெம்பிளி பின்-இல் பழுது ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதை கண்டறிந்ததை அடுத்து மாருதி சுஸுகி அவற்றை திரும்ப அழைக்கிறது.

இந்த பழுதை கவனிக்காமல் விட்டுவிட்டால் சிறிது காலத்தில் பின்பக்க பிரேக்கில் இருந்து இரைச்சல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும், இதனால் பின் பிரேக் அமைப்பு விரைவிலேயே செயலிழந்து போகுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் மாருதி சுஸுகி இதுதொடர்பான தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக பயணிகள் விபத்தில் சிக்குவதற்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்தே இந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட கார்களை திரும்ப அழைத்து, அவற்றை பரிசோதிக்கும் முடிவிற்கு மாருதி சுஸுகி வந்துள்ளது. மேற்கூறப்பட்ட காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட வேகன்ஆர் அல்லது செலிரியோ அல்லது இக்னிஸ் காரை வாங்கியுள்ள வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள மாருதி சுஸுகியால் அங்கீகரிக்கப்பட்ட வொர்க்ஷாப்பிற்கு தனது காரை கொண்டு செல்லலாம்.

அங்கு, ஒருவேளை காரில் பழுது இருப்பது கண்டறியப்பட்டால், இலவசமாக பழுதான பாகம் மாற்றி கொடுக்கப்படும் எனவும், பணியாளர் கட்டணமும் இலவசம் எனவும் மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது. சம்மந்தப்பட்ட வாடிக்கையாளர்களை மாருதி சுஸுகி விரைவில் தொடர்பு கொள்ளும். இதுகுறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் காரை வாங்கிய டீலர்ஷிப் மையத்தினை அணுகவும்.

வேகன்ஆர், செலிரியோ & இக்னிஸ் 3 கார்கள் மாருதி சுஸுகியின் அரேனா டீலர்ஷிப் மையத்தின் வாயிலாக விற்பனை செய்யப்படுகின்றன. இவை மூன்றும் பெரும்பான்மையான மக்கள் வாங்குவதற்கு ஏற்ற பட்ஜெட் விலையிலான கார்களாக விளங்குகின்றன. இதில் மாருதியின் உயரமான ஹேட்ச்பேக் காராக விளங்கும் வேகன்ஆர்-இன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.5.47 லட்சத்தில் இருந்து ரூ.7.19 லட்சம் வரையில் உள்ளன.

வேகன்ஆரில் 1.0 லிட்டர் மற்றும் 1.2 லிட்டர் என இரு விதமான என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. செலிரியோவை பொறுத்தவரையில், இந்த ஹேட்ச்பேக் கார் சமீபத்தில் தான் புதிய தலைமுறைக்கு அப்டேட் செய்யப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.5.23 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சம் வரையில் உள்ளன.

செலிரியோவிலும் வேகன்ஆரில் வழங்கப்படும் அதே 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தான் பொருத்தப்படுகிறது. இதே என்ஜின் தான் மாருதி சுஸுகியின் பெரும்பாலான ஹேட்ச்பேக் கார்களில் வழங்கப்படுகிறது என்றாலும், இக்னிஸில் இந்த 1.0 லிட்டர் என்ஜின் தேர்வு வழங்கப்படுவது இல்லை. இக்னிஸில் 1.2 லிட்டர் விவிடி நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் தேர்வு மட்டுமே கொடுக்கப்படுகிறது.

இந்தியாவில் வரவேற்பை பெறாத மிகவும் சில மாருதி சுஸுகி கார்களுள் ஒன்றாக விளங்கும் இக்னிஸின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.5.17 லட்சம்- ரூ.7.70 லட்சம் வரையில் உள்ளன. ஆனால் உண்மையில் மாருதி சுஸுகியின் கவனம் முழுவதுமே அளவில் பெரிய எஸ்யூவி கார்களின் மீதே உள்ளது. இதன் வெளிபாடாகவே கடந்த சில மாதங்களில் பிரெஸ்ஸா மற்றும் விட்டாரா என்ற இரு புதிய எஸ்யூவி கார்கள் மாருதி பிராண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் பிரெஸ்ஸா சப்-காம்பெக்ட் எஸ்யூவி மாடலாகும். அதுவே, விட்டாரா அளவில் பெரிய மிட்-சைஸ் எஸ்யூவி மாடலாகும். இந்த இரு எஸ்யூவி கார்களையும் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குவிந்து வருகிறது. எந்த அளவிற்கு என்றால், தற்போது வரையில் மட்டுமே இவை இரண்டையும் 2 இலட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதாக மாருதி சுஸுகி சமீபத்தில் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








