இலவசமா குடுத்தாலும் மாருதியின் இந்த கார்களை வாங்காதீங்க... அப்பளம் மாதிரி சுக்குநூறா நொறுங்கி போயிரும்!
குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பு சமீபத்தில் பல்வேறு கார்களை மோதல் சோதனைக்கு (Crash Test) உட்படுத்தியது. இந்த கார்களின் பாதுகாப்பு ரேட்டிங்குகள் (Safety Ratings) தற்போது வெளியாகி வருகின்றன. இதன்படி மாருதி எஸ்-ப்ரெஸ்ஸோ (Maruti S-Presso) காரின் பாதுகாப்பு ரேட்டிங்கும் வெளியாகியுள்ளது.
மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார் குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் வெறும் ஒரே ஒரு ஸ்டாரை மட்டும் பெற்று, வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இது பெரியவர்களுக்கான பாதுகாப்பு ரேட்டிங் ஆகும். குழந்தைகளுக்கான பாதுகாப்பு ரேட்டிங்கில் மாருதி எஸ்-பிரெஸ்ஸோ கார் இன்னும் மோசம். குழந்தைகளுக்கான பாதுகாப்பில் இந்த கார் ஒரு ஸ்டார் ரேட்டிங்கை கூட பெறவில்லை. அதாவது ஜீரோ ஸ்டார் ரேட்டிங்கைதான் மாருதி எஸ்-பிரெஸ்ஸா கார் பெற்றுள்ளது.

பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 34க்கு 20.03 புள்ளிகளை மாருதி எஸ்-பிரெஸ்ஸா கார் ஸ்கோர் செய்துள்ளது. இதன் மூலம் 1 ஸ்டார் ரேட்டிங் கிடைத்துள்ளது. ஆனால் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் இந்த கார் 49க்கு வெறும் 3.53 புள்ளிகளை மட்டும்தான் ஸ்கோர் செய்துள்ளது. எனவே ஒரு ஸ்டார் ரேட்டிங் கூட கிடைக்கவில்லை. மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகதான் இருந்து வருகிறது.
ஆனால் பாதுகாப்பு விஷயத்தில் அந்த கார் மிகவும் மோசமானது என்பது குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் தெரியவந்துள்ளது. குளோபல் என்சிஏபி அமைப்பின் புதிய மற்றும் கடுமையான மோதல் சோதனை விதிமுறைகளின் கீழ் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார் சோதனை செய்யப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். சோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாருதி எஸ்-பிரெஸ்ஸோ காரில், 2 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர் ஆகிய வசதிகள் வழங்கப்பட்டிருந்தன.
எனினும் மோதல் சோதனைகளில் இந்த கார் சோபிக்க தவறி விட்டது. இந்த காரின் உடற்கூடு நிலையற்றது என குளோபல் என்சிஏபி அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே மாருதி இக்னிஸ் காரின் (Maruti Ignis) காரின் குளோபல் என்சிஏபி மோதல் சோதனை முடிவுகளும் தற்போது வெளியாகியுள்ளன. மாருதி சுஸுகி இக்னிஸ் காரும் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 1 ஸ்டார் ரேட்டிங்கையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் ஜீரோ ஸ்டார் ரேட்டிங்கையும்தான் பெற்றுள்ளது.
இதுதவிர மாருதி ஸ்விஃப்ட் (Maruti Swift) காரின் மோதல் சோதனை முடிவுகளையும் குளோபல் என்சிஏபி அமைப்பு தற்போது வெளியிட்டுள்ளது. பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் என 2 பிரிவுகளிலும், மாருதி ஸ்விஃப்ட் கார் வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை மட்டும்தான் பெற்றுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் பாதுகாப்பு தரம் இல்லாதவை என்பது இந்த முடிவுகளின் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இது இந்த கார்களின் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சாலை பாதுகாப்பை வலியுறுத்தி வரும் எஃப்ஐஏ ஃபவுண்டேஷனின் நிர்வாக இயக்குனரான சால் பில்லிங்ஸ்லி கூறுகையில், ''சோதனை செய்யப்பட்ட மாருதி சுஸுகி நிறுவனத்தின் 3 கார்களுமே தோல்வியடைந்திருப்பது என்பது, இந்திய டிரைவர்கள், பயணிகள் மற்றும் சாலையை பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பை அலட்சியப்படுத்துவதை காட்டுகிறது. மஹிந்திரா (Mahindra) போன்ற உள்ளூர் நிறுவனங்களிடம் இருந்து மாருதி சுஸுகி நிறுவனம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது'' என்றார்.
மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ-என் (Mahindra Scorpio N) காரும் தற்போது குளோபல் என்சிஏபி அமைப்பால் சோதனை செய்யப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த கார் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ள நிலையில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் 3 கார்களும் மண்ணை கவ்வியுள்ளன. மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காருக்கு ஏற்கனவே மிகவும் பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தற்போது 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கும் பெற்றுள்ளதால், இந்த காரை வாங்குவதற்கு இன்னும் நிறைய பேர் போட்டி போடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications