அடேங்கப்பா! மாருதி கொண்டு வரப்போற புது கார்ல இவ்வளவு அம்சங்கள் இருக்குதா?
மாருதி நிறுவனம் வெளியிடவுள்ள பலேனோ கிராஸ் ஓவர் காம்பேக்ட் எஸ்யூவி காரில் உள்ள அம்சங்கள் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
2023ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆட்டோ எக்ஸ்போவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆட்டோ எக்ஸ்போவில் பெரிய எதிர்பார்ப்பைக் கிளப்பியிருப்பது மாருதி நிறுவனம் தான். இந்நிறுவனம் இதுவரை 3 புதிய கார்களை அறிமுகப்படுத்துவது உறுதியாகியுள்ளது. அதன்படி 5-டோர் ஜிம்னி ஆஃப்ரோடு எஸ்யூவி கார், ஒரு 3 வரிசை சீட்டர் கொண்ட எம்பிவி கார். இறுதியாக மாருதி பலேனோ கிராஸ் ஓவர் கார் என 3 கார்களை அறிமுகப்படுத்தவுள்ளது.

இதில் ஜிம்னி கார் மாருதி நிறுவனம் ஏற்கனவே வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் ஒரு கார் தான். ஆனால் ஏற்றுமதியாவது 3 டோர் ஜிம்னி கார், ஆனால் புதிதாக அறிமுகமாகப்போவது அதன் அப்டேட்டட் வெர்ஷனான 5 டோர் ஜிம்னி கார். இந்த கார் இந்தியா மட்டுமல்ல சர்வதேச அளவிலும் அறிமுகமாகப் போகிறது. 5 டோர் ஜிம்னி கார் வெளிநாட்டிற்கும் ஏற்றுமதியாகப்போகிறது.
இது எல்லாம் ஒரு புறம் இருக்க அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது மாருதியின் ஒய்டிபி என்ற கார் தான். இந்த கார் பலேனோ கிராஸ் ஓவர் காராக அறிமுகமாகவுள்ளது. இந்த கார் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பலேனோ காரை அப்படியே எஸ்யூவி டிசைனில் வடிவமைத்துள்ளனர். இந்த காருக்கு மாருதி நிறுவனம் வைத்த கோட் பெயர் தான் ஒய்டிபி, இந்த கார் எந்த பெயரில் வெளியாகப்போகிறது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
இந்த கார் மார்கெட்டிற்கு வந்தால் டாடா பஞ்ச், நிஸான் மேக்னைட், ரெனால்ட் கைகர், ஹூண்டாய் வென்யூ, ஆகிய கார்களுக்கு போட்டியாகக் களம் இறங்கும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் ஒரு சப் 4 மீட்டர் கார், இந்த கார் கூபே கார் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் இந்தியாவில் பல முறை டெஸ்டிங்கில் இருந்த போது பலரது கேமராக்களில் சிக்கியுள்ளது. இந்த கார் குறித்த சில தகவல்கள் தற்போது கசிந்துள்ளன. அதைப் பற்றித் தான் இங்கு விரிவாகக் காணப்போகிறோம்.
இந்த காரின் புரோட்டோடைப்பை பார்க்கும் போது இந்த காரின் முன்பக்கம் முழுவதும் கிராண்ட் விட்டாரா காரின் முகப்பு பகுதியைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. முகப்பு பகுதியில் புராமினென்டான கிரில் செக்ஷன், ஸ்லீக்கான ஹெட்லைட், ஆகியன இருக்கிறது. இந்த காரின் பிளாட்ஃபார்மை பொருத்தவரை பலேனோ கார் உருவாகும் அதே ஹார்ட்டிக்ட் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. பின்புறம் நீளமான எல்இடி லைட் பொருத்தப்பட்டுள்ளது. இது போக பூட்லிட் சற்று வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பூஸ்டர் ஜெட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதே இன்ஜின் தான் பலேனோ காரிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 100 பிஎஸ் பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். கியரை பொருத்தவரை மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் ஆகிய 2 கியர் ஆப்ஷன்களும் இடம் பெறம். காரின் உட்புறமும் பலேனோ காரைபோலவே வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த காரில் 9 இன்ச் டச் ஸ்கிரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே ஆகிய 2 அம்சங்களையும் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த காரில் வயர்லெஸ் சார்ஜர், கனெக்டிவிட்டி, ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், பெரிய எம்ஐடி, 360 டிகிரி கேமரா, ஹெட்ஸ்அப் டிஸ்பிளே, மல்டிபிள் ஏர்பேக் என ஏகப்பட்ட அம்சங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த தகவலை எல்லாம் மாருதி நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை. வெளியில் கசிந்துள்ள தகவலே இது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








