இந்தியாவின் மானத்தை வாங்கிய மாருதி ஸ்விஃப்ட்! பாதுகாப்பில் இவ்ளோ மோசமான காரா இது! மஹிந்திரா தயாரிப்பு அசத்தல்!
குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பு கார்களை மோதல் சோதனைக்கு (Crash Test) உட்படுத்தி, பாதுகாப்பு ரேட்டிங்குகளை (Safety Rating) வழங்கி வருகிறது. இதில், இந்தியாவை சேர்ந்த டாடா (Tata) மற்றும் மஹிந்திரா (Mahindra) நிறுவனங்களின் பல்வேறு கார்கள் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை வாங்கி அசத்தி வருகின்றன.
ஆனால் இந்த மோதல் சோதனைகளில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் கார்கள் தொடர்ச்சியாக சொதப்பி வருகின்றன. எனவே மாருதி சுஸுகி நிறுவன கார்களின் பாதுகாப்பு குறித்து வாடிக்கையாளர்கள் மத்தியில் மிக கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) கார், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் மீண்டும் ஒரு முறை சொதப்பியுள்ளது.

குளோபல் என்சிஏபி அமைப்பு முன்பு தனது பழைய விதிமுறைகளின்படி (Protocol) கார்களை சோதனை செய்து வந்தது. இதன்படி கடந்த 2018ம் ஆண்டு மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் சோதனை செய்யப்பட்டது. அப்போது மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் 2 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை மட்டுமே பெற்றது. பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் என இரண்டு பிரிவினருக்குமானது பாதுகாப்பிலும், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரால் 2 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை மட்டுமே பெற முடிந்தது.
இந்த சூழலில், குளோபல் என்சிஏபி அமைப்பின் புதிய மோதல் சோதனை விதிமுறைகள் நடப்பாண்டு ஜூலை மாதம் அமலுக்கு கொண்டு வரப்பட்டன. பழைய விதிமுறைகளை காட்டிலும், புதிய விதிமுறைகள் மிகவும் கடுமையாக உள்ளன. இந்த புதிய விதிமுறைகளின்படி, 2022 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை குளோபல் என்சிஏபி அமைப்பு சமீபத்தில் சோதனை செய்தது. இதன் முடிவுகள் தற்போது வெளியாகி, வாடிக்கையாளர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளன.
2022 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார், பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் என 2 பிரிவினருக்குமான பாதுகாப்பிலும் வெறும் 1 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை மட்டுமே வாங்கியுள்ளது. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 34க்கு வெறும் 19.19 புள்ளிகளை மட்டுமே இம்முறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் ஸ்கோர் செய்துள்ளது. மறுபக்கம் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49க்கு வெறும் 16.68 புள்ளிகளை மட்டும்தான் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரால் பெற முடிந்துள்ளது.
அத்துடன் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் உடற்கூடு நிலையற்றது எனவும் குளோபல் என்சிஏபி மதிப்பிட்டுள்ளது. தற்போது சோதனை செய்யப்பட்ட மாடல், இந்திய வாடிக்கையாளர்களுக்காக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது ஆகும். முன் பகுதியில் 2 ஏர்பேக்குகள், சீட் பெல்ட் ரிமைண்டர்கள் மற்றும் இபிடி உடன் ஏபிஎஸ் உள்ளிட்ட வசதிகள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் மோதல் சோதனைகளில் மிகவும் குறைவான பாதுகாப்பு ரேட்டிங்கைதான் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் பெற்றுள்ளது.
இங்கே குறிப்பிடத்தக்க மற்றொரு விஷயம் என்னவென்றால், இந்த முடிவுகள் மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) காருக்கும் பொருந்தும். ஏனெனில் இந்த 2 கார்களும் ஒரே பிளாட்பார்ம் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 2 கார்களும் உடன்பிறப்புகள் ஆகும். எனவே மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் மட்டுமல்லாது, மாருதி சுஸுகி டிசையர் காரின் வாடிக்கையாளர்களையும் இந்த மோதல் சோதனை முடிவுகள் அதிர்ச்சியடைய வைத்துள்ளன.
இதற்கிடையே இந்திய சந்தையில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரும் (Mahindra Scorpio-N), குளோபல் என்சிஏபி அமைப்பின் அப்டேட் செய்யப்பட்ட புதிய விதிமுறைகளின்படி, மோதல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன் முடிவுகளும் தற்போது வெளியாகியுள்ளன. மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் சொதப்பிய நிலையில், மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் அட்டகாசமாக செயல்பட்டு, இந்தியாவிற்கு பெருமை தேடி தந்துள்ளது என்பது நமக்கு ஆறுதலான ஒரு விஷயம் ஆகும்.
குளோபல் என்சிஏபி அமைப்பு, மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காருக்கு முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை வழங்கியுள்ளது. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் 34க்கு 29.25 புள்ளிகளை ஸ்கோர் செய்துள்ளது. அதே நேரத்தில் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49க்கு 28.93 புள்ளிகளை மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் ஸ்கோர் செய்துள்ளது. முன்னதாக மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) ஆகிய கார்களும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை வாங்கியுள்ளன.
அதேபோல் டாடா நெக்ஸான் (Tata Nexon), டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) மற்றும் டாடா பன்ச் (Tata Punch) ஆகிய கார்களும் குளோபல் என்சிஏபி அமைப்பிடம் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்களின் சில கார்கள், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கையும் பெற்று, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. இதன் காரணமாக இந்த 2 நிறுவனங்களின் கார் விற்பனையும் சமீப காலமாக அதிகரித்து கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








