மஸெராட்டி பூமராங் காருக்கு வயது 50!! உலகளவில் பிரபலமான இத்தாலிய ஸ்போர்ட்ஸ் கார்
மஸெராட்டி பூமராங் (Maserati Boomerang) ஸ்போர்ட்ஸ் கார் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு 50 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்த பிரபலமான மஸெராட்டி காரை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

1972ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி வடக்கு இத்தாலியன் நகரமான டுரினில் நடைபெற்ற மோட்டார் கண்காட்சியில் முதன்முதலாக காட்சிப்படுத்தப்பட்ட மஸெராட்டி ஸ்போர்ட்ஸ் கார் தான் பூமராங் ஆகும். இதே இத்தாலியன் மோட்டார் கண்காட்சியில்தான் லம்போர்கினி உராக்கோ போன்ற பிரபலமான ஸ்போர்ட்ஸ் கார்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.
இந்த கண்காட்சியில் மஸெராட்டி பூமராங் இரு இருக்கைகள் உடன் ஸ்போர்ட்ஸ் கூபே காராக மிகவும் எதிர்காலத்திற்கான டிசைனை கொண்டிருந்தது. இதனால் அப்போது பார்வையாளர்கள் பலரை வெகுவாக கவர்ந்திருந்த பூமராங் காருக்கு இப்போதும் ரசிகர்கள் ஏகப்பட்டோர் உலகளவில் உள்ளனர். இத்தனைக்கும் இந்த மஸெராட்டி கார் முதல் வெளியீட்டிற்கு பிறகு அதிக யூனிட்களில் தயாரிக்கப்படவில்லை.
தயாரிப்பு பணிகளில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தால், நீண்ட வழித்தோன்றலுக்கு மஸெராட்டி பூமராங் அடிப்படையாக இருந்திருக்கும் என்பது எங்களது கருத்து. ஏனெனில் இத்தாலியன் ஆட்டோமொபைல் வடிவமைப்பாளரான ஜியோர்கெட்டோ ஜியுகியாரோவின் சிறந்த மறக்க முடியாத தயாரிப்புகளுள் இது ஒன்றாகும். முற்றிலுமாக இதே வடிவத்தில் பூமராங் கார் உருவாக்கப்படவில்லை என்றாலும், இதன் ஸ்டைலிங் தொடுதல்களுடன் பல்வேறு மஸெராட்டி கார்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் கடந்த காலங்களில் விற்பனைக்கு வந்துள்ளன.

மஸெராட்டி பூமராங் காரில் பந்தய களத்திற்கு ஏற்ற 4.7 லிட்டர் வி8 என்ஜின் பொருத்தப்பட்டது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 310 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக விளங்கியது. இது தற்போதைய மாடர்ன் ஸ்போர்ட்ஸ் கார்களுடன் ஒப்பிடுகையில் குறைவு என்றாலும், கார் வெளியீடு செய்யப்பட்ட சமயத்தில் அதிகமாகவே பார்க்கப்பட்டது. பூமராங் காரின் டாப் ஸ்பீடு 300kmph ஆகும்.
குறிப்பாக இந்த டாப்-ஸ்பீடு அந்த சமயத்தில் பல கார் பிராண்ட்களை திரும்பி பார்க்க வைத்தது. 1970களில் பாரிஸ், லண்டன் மற்றும் பார்சிலோனா உள்ளிட்ட நகரங்களில் இந்த மஸெராட்டி ஸ்போர்ட்ஸ் காரின் ஆற்றல் மற்றும் செயல்படுதிறன் பார்வையாளர்கள் பலரை வெகுவாக கவர்ந்திருந்தது. இந்த காரில் வழங்கப்பட்ட சேசிஸ் மற்றும் மொத்த இயந்திர பாகங்களும் மஸெராட்டி போராவில் இருந்து பெறப்பட்டு இருந்தன.
மஸெராட்டி போராவிலும் 4,719சிசி 8-சிலிண்டர் என்ஜினே பொருத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. போராவில் இந்த என்ஜின் பின்பக்கத்தில் 90 டிகிரியில் பொருத்தப்பட்டது. இந்த படங்களில் காரின் தோற்றத்தை பார்க்கும்போதே தெரிந்திருக்கும், இது எத்தகைய புரட்சிக்கர டிசைனில் வடிவமைக்கப்பட்டு உள்ளது என்பது. பூமராங் காரை மொத்தமாக பார்க்கும்போது ஆப்பு போன்றதான வடிவமைப்பு புலப்படுகிறது.

கூர்மையான லைன்கள் காரை சுற்றிலும் செல்கின்றன. இந்த காரினை ஒரு கிடைமட்ட கோட்டினை அடிப்படையாக கொண்டு வடிவமைத்ததாக வெளியீட்டின்போது தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த கிடைமட்ட கோட்டினை காரின் மத்தியில், காரினை இரண்டாக பிரிக்கும் வகையில் காணலாம். மஸெராட்டி பூமராங் காரில் ஒரு சாய்வான விண்ட்ஸ்க்ரீன் மற்றும் பனோராமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டு இருந்தன.
முன்பக்கத்தில் உள்ள உள்ளிழுக்கும் சதுர ஹெட்லைட்கள் காரின் மற்றொரு தனித்துவமான அம்சமாகும். பட்டு துணியால் அலங்கரிப்பட்ட கேபின் மற்றும் தாழ்வான இருக்கை அமைப்பு உள்ளிட்டவை 1970களின் துவக்கத்தில் எந்தவொரு நாட்டிலும் மிகவும் அட்வான்ஸாகவே பார்க்கப்பட்டது. தயாரிக்கப்பட்ட ஒரே ஒரு பூமராங் கார் பல்வேறு சர்வதேச கண்காட்சி போட்டிகளில் ஈடுப்படுத்தப்பட்டது.
உலகம் முழுவதும் பிரபலமாகிவரும் நேரத்தில், அவாண்ட்-கார்ட் ஆட்டோமொபைல் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஒரு பிராண்டாக மஸெராட்டியின் நிலையை பூமராங்கின் வடிவமைப்பு மற்றும் பொறியியல் உயர்த்தியது என்றுதான் சொல்ல வேண்டும். தற்போதைய காலத்தில் மஸெராட்டி பிராண்டின் அடையாளங்களாக எம்சி20 சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார்கள், நிட்டுனோ என்ஜின் மற்றும் புதிய கிரேகேல் எஸ்யூவி காரினை சொல்லலாம்.
இத்தகைய நிலையை ஆட்டோமொபைல் துறையில் அடைவதற்கு மஸெராட்டி நிறுவனம் இத்தனை வருடங்களில் பல்வேறு புதிய முயற்சிகளையும், கண்டுப்பிடிப்பு & ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டுள்ளது. ஸ்போர்ட்ஸ் கார்கள் உலகில் இத்தாலி நாட்டின் பங்கு இண்றியமையாதது. ஏனெனில் மஸராட்டி மட்டுமின்றி, லம்போர்கினி, ஃபெராரி மற்றும் அல்ஃபா ரோமியோ உள்ளிட்ட ஸ்போர்ட்ஸ் கார் பிராண்ட்களும் இத்தாலியை சேர்ந்தவையே ஆகும்.


Click it and Unblock the Notifications








