விரைவில் உலகளவில் விற்பனைக்கு வருகிறது MaseratiGrecale! பெட்ரோல்-மின்சாரம் என பல மோட்டார் தேர்வில் கிடைக்கும்!
விரைவில் மஸராட்டி நிறுவனத்தின் கிரேகேல் (Maserati Grecale) சொகுசு கார் மாடல் உலகத்தில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதன் வருகையை முன்னிட்டு தற்போது மஸராட்டி நிறுவனம் அக்காரை வெளியீடு செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இத்தாலி நாட்டை மையமாகக் கொண்டு சொகுசு வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனம் மஸராட்டி. இந்நிறுவனம் வெகு விரைவில் ஓர் புதிய வாகனத்தை உலகளவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. கிரேகேல் எனும் பெயர் கொண்ட புதுமுக காரையே மஸராட்டி விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த வாகனம் எலெக்ட்ரிக் மற்றும் எரிபொருள் என பல விதமான மோட்டார் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது கூடுதல் சுவாரஷ்யமான தகவல் ஆகும். இந்த மாதிரியான ஓர் காரையே மஸராட்டி நிறுவனம் தற்போது வெளியீடு செய்திருக்கின்றது. விரைவில் விற்பனைக்கு வர இருப்பதை முன்னிட்டு தற்போது வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் விற்பனைக்கான அறிமுகம் வரும் 2023ம் ஆண்டிற்குள் அரங்கேறிவிடும் என தகவல்கல் தெரிவிக்கின்றன. மஸராட்டி நிறுவனம் கிரேகேல் கார் மாடலுக்கு புதுவிதமான வடிவமைப்பைக் கொடுத்துள்ளது. ஆகையால், இதற்கு முன்னதாக மஸராட்டி தயாரித்த எந்தவொரு காரையும் பிரதிபலிக்காத ஓர் புதுமுக வாகனமாக கிரேகேல் காட்சியளிக்கின்றது.

முகப்பு பகுதியில் புதிய கிரில், பின் பக்கத்தில் பூமராங் வடிவம் கொண்ட டெயில் லைட் உள்ளிட்ட அம்சங்கள் கிரேகேல் காரில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்துடன், கூபே மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களைப் போன்ற உள் மற்றும் வெளிப்புற தோற்றமும் இக்காருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

என்னதான் இக்காருக்கு வெளிப்புற தோற்றம் புதியதாகக் கொடுக்கப்பட்டிருந்தாலும் உட்புறம் நிறுவனத்தின் முந்தைய தயாரிப்புகளை நினைவுப்படுத்தும் வகையில் உள்ளன. அந்தவகையில், நான்கு ஸ்கிரீன் செட்-அப், மிக சிறந்த டிஜிட்டல் அனுபவத்தை வழங்கும் விதமாக கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், யூஸர் ஃப்ரெண்ட்லி அனுபவத்தை கொடுக்கக் கூடிய ஸ்விட்ச் கியர்கள் உள்ளிட்டவையும் கிரேகேல் காரில் இடம் பெற்றிருக்கின்றன.

12.3 இன்ச் அளவுள்ள சென்ட்ரல் ஸ்கிரீன் (மஸராட்டி வழங்கியதிலேயே மிக பெரிய திரை இதுவாகும்), சிறப்பம்சங்களைக் கட்டுப்படுத்துவதற்காக 8.8 இன்ச் அளவுள்ள திரை, இன்ஃபோடெயின்மென்ட் திரை மற்றும் பின் பக்க இருக்கையாளர்களுக்கான திரை ஆகிய நான்கு திரைகளே கிரேகேல் காரில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, இன்டெலிஜன்ட் அசிஸ்டண்ட் வசதிக் கொண்ட மல்டிமீடிய சிஸ்டம் கன்ட்ரோலும் மிக சிறப்பான பயண அனுபவத்தை வழங்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இட வசதியிலும் இக்கார் மிக தாராளமானதாக இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

மஸராட்டி கிரேகேல் 4,846 மிமீ நீளம், 1,670 மிமீ உயரம் மற்றும் 2,163 மிமீ அகலத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இத்துடன், 2901 மிமீ அளவில் வீல் பேஸையும் அது கொண்டுள்ளது. இதன் சேஸிஸ் அமைப்பானது ஆல்ஃபா ரோமியா ஜியோர்ஜியோவிடம் இருந்து பகிரப்பட்டுள்ளது.

ஜிடி, மாடனா மற்றும் ட்ரோஃபியோ ஆகிய மூன்று வெவ்வேறு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் கிரேகேல் சொகுசு எஸ்யூவி கார் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. ஜிடி தேர்வில் 300 எச்பி பவரை வெளியேற்றக் கூடிய 4 சிலிண்டர் மைல்டு ஹைபிரிட் மோட்டாரும், மாடனா தேர்வில் 330 எச்பி திறனை வெளியேற்றக் கூடிய 4 சிலிண்டர் மைல்டு ஹைபிரிட் மோட்டாரும், ட்ரோஃபியோ வேரியண்டில் வி6 3.0 லிட்டர் பெட்ரோல் மோட்டாரும் இடம் பெற்றிருக்கும்.


Click it and Unblock the Notifications








