புதிய மெர்சிடிஸ்-மேபேக் எஸ்-கிளாஸ் லக்சரி செடான் கார் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலையே ரூ.2.5 கோடி!
புத்தம் புதிய மெர்சிடிஸ்-மேபேக் எஸ்-கிளாஸ் லக்சரி செடான் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய மெர்சிடிஸ் காரை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2021ஆம் ஆண்டு மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்திற்கு சிறப்பான ஆண்டு என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் கடந்த ஆண்டில் புதியதாக மொத்தம் 13 கார்களை இந்த லக்சரி கார் தயாரிப்பு நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அதாவது 2021இல் ஒவ்வொரு மாதத்திலும் புதியதாக ஒரு மெர்சிடிஸ் கார்கள் நம் நாட்டில் களமிறக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான தொடர் புதிய அறிமுகங்கள் மூலமாக இந்தியாவில் நம்பர்.1 லக்சரி கார் பிராண்டாக மெர்சிடிஸ்-பென்ஸ் விளங்குகிறது. இந்த சூழலை அப்படியே இந்த வருடத்திலும் தொடர விரும்பும் மெர்சிடிஸ் நடப்பு 2022ஆம் ஆண்டு முடிவதற்குள் அடுத்ததாக 10 புதிய கார்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. இதில் ஒன்றாகவே தற்போது மெர்சிடிஸ்-மேபேக் எஸ்-கிளாஸ் லிமௌசைன் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

எஸ்580 மற்றும் எஸ்680 என்கிற இரு விதமான வேரியண்ட்களில் இந்த புதிய மேபேக் லக்சரி செடான் கார் நம் நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.2.5 கோடி மற்றும் ரூ.3.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த 2 வேரியண்ட்களில் எஸ்580 ஆனது இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.

அதுவே எஸ்680 வேரியண்ட் முழுவதும் வெளிநாட்டு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. இதனாலேயே இவை இரண்டின் எக்ஸ்-ஷோரூம் விலைக்கும் இடையே சுமார் 70 லட்ச ரூபாய் வரையில் வித்தியாசம் உள்ளது. மெர்சிடிஸ் தயாரிப்பதிலேயே விலையுயர்ந்த லக்சரி செடான் காராக விளங்கும் மேபேக் எஸ்-கிளாஸ் உலகளவில் கடந்த 2020ஆம் ஆண்டில் வெளியீடு செய்யப்பட்டது.

வழக்கமான மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-கிளாஸ் உடன் ஒப்பிடுகையில், இந்த மேபேக் வெர்சன் ஆனது 180மிமீ நீளமான வீல்பேஸை கொண்டதாக விளங்குகிறது. அதாவது காரின் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 180மிமீ வரையில் ஸ்டாண்டர்ட் எஸ்-கிளாஸ் செடான் மாடலை காட்டிலும் இதில் அதிகமாக உள்ளது. இது உட்புறத்தில் இடவசதியை அதிகரித்து, பயணிகளுக்கு சவுகரியமான பயணத்திற்கு வழிவகுக்கும்.

டிசைனை பொறுத்தவரையில், விற்பனையில் உள்ள மெர்சிடிஸ் எஸ்-கிளாஸ் செடான் காரையே புதிய மேபேக் மாடலும் ஒத்து காணப்படுகிறது. அதேநேரம் மேபேக் கார் என்பதை வெளிப்படுத்தும் விதமான சில அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த வகையில் செங்குத்தான க்ரோம் பின் ஸ்ட்ரிப்களுடன் சற்று வித்தியாசமான வடிவிலான ரேடியேட்டர் க்ரில், மெஷ்-வகை காற்று ஏற்பான்கள், புதிய டிசைனில் அலாய் சக்கரங்கள் மற்றும் C-பில்லரில் மேபேக் லோகோ உள்ளிட்டவற்றை புதிய மேபேக் எஸ்-கிளாஸ் செடான் கார் பெற்று வந்துள்ளது.

இவற்றுடன் இந்த காரின் டாப் எஸ்680 வேரியண்ட்டிற்கு மட்டும் பிரத்யேகமான இரட்டை-நிற பெயிண்ட் தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பெயிண்ட் தேர்வில் காரை இரண்டாக பிரிக்கும் விதத்தில் வழங்கப்பட உள்ள கோடு ஆனது மிஷின் இல்லாமல் கையால் பெயிண்ட் செய்யப்பட்டதாக இருக்கும் என்கிறது மெர்சிடிஸ். வெளிப்புறத்தை போல் புதிய மேபேக் எஸ்-கிளாஸின் கேபினின் ஸ்டைலும் ஸ்டாண்டர்ட் எஸ்-கிளாஸையே ஒத்து காணப்படுகிறது.

இருப்பினும் இந்த புதிய காரில் நப்பா லெதர் போன்ற காஸ்ட்லீயான பாகங்களுடன் கேபின் அலங்கரிக்கப்பட்டுள்ளது. புதிய மேபேக் எஸ்-கிளாஸில் வழங்கப்பட்டுள்ள 12.8 இன்ச் OLED தொடுத்திரை, 12.3 இன்ச் முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஹெட்-அப் திரை, எம்பக்ஸ் (MBUX) இடைமுகம், 11.6 இன்ச்சில் பின்பக்க பயணிகளுக்கு இரு பொழுதுப்போக்கு திரைகள், 10 வெவ்வேறான மஸாஜ் பிரோகிராம்களுடன் க்ளைமேட் கண்ட்ரோல் இருக்கைகள் உள்ளிட்டவை அப்படியே மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-கிளாஸ் மாடலில் இருந்து பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் பனோராமிக் சன்ரூஃப், இரைச்சல் தடுப்பு வசதி, சைகை கண்ட்ரோல், 4டி பர்ம்ஸ்டர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் அதிநவீன ஓட்டுனர் உதவி அமைப்புகளையும் புதிய மேபேக் எஸ்-கிளாஸ் கார் பெற்றுவந்துள்ளது. இந்த புதிய மேபேக் காரின் எஸ்580 வேரியண்ட்டிற்கு 4.0 லிட்டர் வி8 டர்போ-பெட்ரோல் என்ஜினும், எஸ்680 வேரியண்ட்டிற்கு 6.0 லிட்டர் வி12, இரட்டை-டர்போ பெட்ரோல் என்ஜினும் தேர்வாக வழங்கப்பட்டுள்ளன.

இதில் எஸ்580 வேரியண்ட்டின் 4.0 லிட்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 496 பிஎச்பி மற்றும் 700 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. 4மேட்டிக் அனைத்து-சக்கர-ட்ரைவ் அமைப்புடன் வழங்கப்படும் இந்த எஸ்580 வேரியண்ட்டில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 4.8 வினாடிகளில் எட்டிவிடலாம். எஸ்680 என்ஜின் அதிகப்பட்சமாக 603 பிஎச்பி மற்றும் 900 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த வேரியண்ட்டில் 100kmph வேகத்தை விரைவாக 4.5 வினாடிகளிலேயே எட்டிவிடலாம்.


Click it and Unblock the Notifications








