எம்ஜியின் விலை குறைவான எலக்ட்ரிக் கார் - இந்தியாவில் சோதனை ஓட்டங்கள் ஆரம்பிச்சாச்சு!!
எம்ஜி மோட்டாரின் அளவில்-சிறிய காம்பெக்ட் எலக்ட்ரிக் கார் இந்தியாவில் முதல்முறையாக சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து நமக்கு கிடைக்க பெற்றுள்ள ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

எம்ஜி மோட்டார் நிறுவனம் உலகளவில் தனது எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையை மிகவும் முனைப்புடன் விரிவுப்படுத்தி வருகிறது. அதேநேரம் இந்தியாவிலும் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் வரும் காலங்களில் பல இவி அறிமுகங்களுக்கு திட்டமிட்டுள்ளது.

பிரிட்டிஷ் கார் பிராண்டான எம்ஜி-இல் இருந்து ஏற்கனவே இசட்.எஸ் இவி என்ற எலக்ட்ரிக் எஸ்யூவி கார் விற்பனையில் உள்ளது. சமீபத்தில்கூட இந்த மாடல் ஃபேஸ்லிஃப்ட்டிற்கு அப்டேட் செய்யப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆனால் 2020இல் இருந்து விற்பனையில் இருந்தாலும், எம்ஜி இசட்.எஸ் இவி நம் இந்தியர்கள் பலரை பெரிதாக கவரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இதற்கு முக்கிய காரணம் அதன் அதிகப்படியான விலை. எலக்ட்ரிக் கார்களுக்கு பொதுவாகவே அதிக விலை இருக்கும் என்றாலும், இசட்.எஸ் மாடலில் (குறிப்பாக சமீபத்திய ஃபேஸ்லிஃப்ட் மாடலில்) அதிகளவில் பிரீமியம் தர அம்சங்கள் இடம்பெற்றுள்ளதால், அதன் விலையினை சற்று அதிகமாகவே எம்ஜி நிர்ணயித்துள்ளது.

இதனாலேயே நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்ற வகையிலான காம்பெக்ட் இவி-ஐ இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரும் முடிவில் எம்ஜி உள்ளது. இதன் ஒரு பகுதியாக எம்ஜியின் இந்த விலை குறைவான எலக்ட்ரிக் கார் இந்திய சாலைகளில் சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்படும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஆட்டோகார் இந்தியா செய்திதளம் மூலமாக கிடைக்க பெற்றுள்ள படத்தினை தான் கீழே காண்கிறீர்கள்.

Source: Autocar India
இந்த ஸ்பை படங்களில் கார் முழுவதுமாக மறைக்கப்பட்டுள்ளது. மேலும், காரின் பின்பக்கத்தில் 'இது வலது கை ட்ரைவிங்கை கொண்ட வாகனம்' என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இருந்து இந்த சோதனை மாதிரி இந்தியாவில் தயாரிக்கப்படவில்லை என்பதும், சோதனை பணிகளுக்காக வெளிநாட்டில் இருந்து முழுவதுமாக தயாரிக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்பதும் தெரிய வருகிறது.

இதனால், இதன் பின்னரே இந்த காம்பெக்ட் எலக்ட்ரிக் காரை இந்தியாவில் தயாரிக்க எம்ஜி மோட்டார் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்ஜியின் இந்த புதிய மினி எலக்ட்ரிக் கார் ஆனது சீனா மற்றும் இந்தோனிஷிய சந்தைகளில் விற்பனையில் உள்ள வுலிங் ஏர் இவி-யின் அடிப்படையிலானதாக இருக்கும் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. வுலிங் ஏர் இவி-யின் நீளம் 2,974மிமீ, அகலம் 1,505மிமீ மற்றும் உயரம் 1,631மிமீ ஆகும்.

இந்த அளவில்-சிறிய எலக்ட்ரிக் காரின் வீல்பேஸ், அதாவது முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் வெறும் 2,010மிமீ ஆக உள்ளது. 3 கதவுகளை கொண்ட உயரமான ஹேட்ச்பேக் காரான இது விற்பனையில் உள்ள சந்தைகளில் 2-இருக்கை மற்றும் 4-இருக்கை வெர்சன்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஆனால் இந்தியாவில் வாடிக்கையாளர்களின் எண்ணத்திற்கேற்ப 4-இருக்கை வெர்சனில் மட்டுமே தனது முதல் காம்பெக்ட் எலக்ட்ரிக் காரை எம்ஜி களமிறக்க வாய்ப்புள்ளது.

தற்போது இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள இந்த சோதனை மாதிரியும் 4-இருக்கை மாடல் போன்றே தெரிகிறது. இதனை விட முக்கியமாக இந்த சோதனை ஓட்ட கார் பின்பக்கத்தில் கூடுதல் சக்கரத்தை கொண்டுள்ளது. வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் வுலிங் ஏர் இவி இவ்வாறான கூடுதல் சக்கரத்தை கொண்டில்லை. இந்திய சந்தையில் தனது தயாரிப்பை வேறுப்படுத்தி காட்ட இவ்வாறான மாற்றத்தை எம்ஜி கொண்டுவந்திருக்கலாம்.

இதை தவிர்த்து, இந்தியாவில் களமிறங்கும் வுலிங் ஏர் இவி-இன் எம்ஜி வெர்சனில் பெரியதாக மாற்றம் இருக்காது என்றே கூறப்படுகிறது. இந்த சோதனை மாதிரி முற்றிலுமாக மறைக்கப்பட்டுள்ளதால், தோற்றத்தில் மாற்றங்கள் ஏதேனும் கொண்டுவரப்பட்டுள்ளதா என்பதை தற்போதைக்கு உறுதியாக கூற முடியவில்லை. ஆனால், போதுமான அம்சங்களை கொண்ட எலக்ட்ரிக் காராக இது இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

இந்த வகையில், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு உள்ளிட்ட தொழிற்நுட்ப அம்சங்களை புதிய எம்ஜி காம்பெக்ட் இவி-இல் எதிர்பார்க்கிறோம். இதன் டாப் வேரியண்ட்கள் கேபினில் மரத்துண்டுகள் மற்றும் ஃபாக்ஸ் அலுமினியத்திலான உள்ளீடுகளையும், பிரீமியம் தர உணர்விற்காக மென்மையான உள்ளமைவையும் கொண்டிருக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








