இந்தியர்கள் காத்து கிடக்கும் காரின் உற்பத்தி தொடக்கம்! டாடா கழுத்தையே நெரிக்கற அளவுக்கு ரெடி பண்ணியிருக்காங்க!
இந்திய சந்தையில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று எம்ஜி மோட்டார் (MG Motor). இது இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் ஆகும். ஆனால் சீனாவை சேர்ந்த செயிக் மோட்டார் (SAIC Motor) நிறுவனம்தான், எம்ஜி மோட்டாரின் தாய் நிறுவனமாக உள்ளது.
செயிக் மோட்டார் குழுமத்தின் ஒரு அங்கமாகதான், எம்ஜி மோட்டார் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் இந்திய சந்தையில் முதன் முதலில் அறிமுகப்படுத்திய கார் எம்ஜி ஹெக்டர் (MG Hector). இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் கடந்த 2019ம் ஆண்டுதான், எம்ஜி ஹெக்டர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சூழலில், ஹெக்டர் காரின் உற்பத்தியில் புதிய மைல்கல் ஒன்றை எம்ஜி மோட்டார் நிறுவனம் தற்போது கடந்துள்ளது.

இந்தியாவில் 1 லட்சம் ஹெக்டர் கார்கள் உற்பத்தி என்பதுதான் அந்த புதிய மைல்கல் ஆகும். குஜராத் மாநிலம் ஹலோல் பகுதியில், எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்குதான் 1 லட்சமாவது எம்ஜி ஹெக்டர் கார் தற்போது உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் டாடா ஹாரியர் (Tata Harrier) கார்தான், எம்ஜி ஹெக்டர் காரின் மிக முக்கியமான போட்டி மாடல் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டாடா ஹாரியர் காரின் விற்பனையில் எம்ஜி ஹெக்டர் கார் ஏற்கனவே கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில், வரும் நாட்களில் டாடா ஹாரியர் காருக்கு 'செக்' வைக்கும் வகையில், அதிரடியான காரியம் ஒன்றையும் எம்ஜி மோட்டார் நிறுவனம் செய்யவுள்ளது. எம்ஜி ஹெக்டர் காரின் மேம்படுத்தப்பட்ட புதிய ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், இந்திய சந்தையில் இன்னும் சில நாட்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
பொங்கல் மற்றும் மஹர சங்கராந்தி பண்டிகைகளை முன்னிட்டு, வரும் ஜனவரி 5ம் தேதி, எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய மாடலின் வருகைக்கு பின், எம்ஜி ஹெக்டர் காரின் விற்பனை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே டாடா ஹாரியர் காருக்கு நெருக்கடி இன்னும் அதிகமாகும். எம்ஜி மோட்டார் நிறுவனம் புதிய ஹெக்டர் காரின் உற்பத்தியையும் தற்போது தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
புதிய எம்ஜி ஹெக்டர் காரின் முன் பகுதியில், ரீ-டிசைன் செய்யப்பட்ட க்ரோம் க்ரில் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் மெல்லிய எல்இடி பகல் நேர விளக்குகளையும் நாம் எதிர்பார்க்கலாம். உட்புறத்தை பொறுத்தவரையில், 14 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் 3 ஸ்போக் ஸ்டியரிங் வீல் ஆகியவை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக 2023 எம்ஜி ஹெக்டர் காரில் அடாஸ் (ADAS) வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advanced Driver Assistance Systems என்பதன் சுருக்கம்தான் ADAS. இந்த வசதியுடன் வரும் கார்களுக்கு, இந்திய வாடிக்கையாளர்கள் தற்போது அமோக வரவேற்பை வழங்கி வருகின்றனர். அடாஸ் வசதி உள்ள கார்களில் பயணம் செய்பவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும் என்பதுதான் இதற்கு காரணம். எனவே 2023 ஹெக்டர் காரில் எம்ஜி மோட்டார் நிறுவனம் அடாஸ் வசதியையும் வழங்கும் என தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஆனால் தற்போது விற்பனையில் உள்ள எம்ஜி ஹெக்டர் காரில் வழங்கப்பட்டுள்ள அதே இன்ஜின் ஆப்ஷன்கள்தான், புதிய மாடலிலும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 2.0 லிட்டர் டீசல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் என தற்போது உள்ள இன்ஜின் ஆப்ஷன்களுடன்தான் புதிய எம்ஜி ஹெக்டர் காரும் விற்பனை செய்யப்படும். எனினும் கூடுதல் வசதிகள் வழங்கப்படுவதாலும், டிசைனில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுவதாலும், வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இருப்பதாலும் புதிய எம்ஜி ஹெக்டர் விற்பனையில் சாதிக்கலாம்.


Click it and Unblock the Notifications








