எல்லாமே நல்ல கார் ஆச்சே... எம்ஜி நிறுவனத்திற்கு இப்படி ஒரு மோசமான நிலைமையா! உண்மையான காரணம் என்னனு தெரியுமா?
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் கார்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், அந்த நிறுவனம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆகஸ்ட் மாதம் முடிவடைந்து செப்டம்பர் மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த சமயத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கான கார் நிறுவனங்களின் சேல்ஸ் ரிப்போர்ட் வரிசையாக வெளியாகி வருகிறது. இதன்படி எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் ஆகஸ்ட் மாத சேல்ஸ் ரிப்போர்ட்டும் தற்போது நமக்கு கிடைத்துள்ளது.

எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் மொத்தம் 3,823 கார்களை விற்பனை செய்துள்ளதாக தனது சேல்ஸ் ரிப்போர்ட்டில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் 4,315 கார்களை விற்பனை செய்திருந்தது. இதன் காரணமாக எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் விற்பனையில் 11.40 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

வருடாந்திர அளவிலான ஒப்பீட்டில் மட்டுமல்லாது, மாதாந்திர அளவிலான ஒப்பீட்டிலும் எம்ஜி மோட்டார் நிறுவனம் வீழ்ச்சியைதான் சந்தித்துள்ளது. எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் நடப்பாண்டு ஜூலை மாதம் 4,013 கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் அதன்பின் வந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்த எண்ணிக்கை 3,823 ஆக குறைந்துள்ளது. இது 4.73 சதவீத வீழ்ச்சியாகும்.

எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்தாலும் ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட 4,000 கார்கள் விற்பனை என்ற அளவில் நிலையாக சென்று கொண்டுள்ளது. வரும் மாதங்களில் எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் இந்த சரிவில் இருந்து மீண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தற்போதைய வீழ்ச்சிக்கு செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறையும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது.

செமி கண்டக்டர் சிப்கள் கார்கள் உற்பத்திக்கு தேவைப்படும் மிக முக்கியமான ஒன்றாகும். எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் மட்டுமல்லாது தற்போது பல்வேறு முன்னணி நிறுவனங்களும் செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறை பிரச்னையால் மிக கடுமையாக திணறி வருகின்றன. இந்த பிரச்னை காரணமாக கார்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி குறைவு எதிரொலியால் கார்களின் விற்பனை எண்ணிக்கையும் சரிவடைந்து வருகிறது. இந்த செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறை பிரச்னை கார் நிறுவனங்களுக்கு மட்டுமல்லாது, வாடிக்கையாளர்களுக்கும் சேர்த்தே பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த பிரச்னை காரணமாக கார்களின் உற்பத்தி குறைந்துள்ளதால் டெலிவரி பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே கார்களின் காத்திருப்பு காலம் அதிகரித்து கொண்டுள்ளது. இதன் காரணமாக கார்களை முன்பதிவு செய்துள்ள பலரும் டெலிவரிக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஆனால் வரும் மாதங்களில் இந்த பிரச்னை சரியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரச்னைக்கு மத்தியிலும் புதிய மாடல்களை விற்பனைக்கு கொண்டு வருவதில் எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக அப்டேட் செய்யப்பட்ட 2022 க்ளோஸ்ட்டர் காரை எம்ஜி மோட்டார் நிறுவனம் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இது ஃபுல்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். டொயோட்டா ஃபார்ச்சூனர் உள்ளிட்ட கார்களுடன் எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி கார் இந்திய சந்தையில் விற்பனையில் போட்டியிட்டு வருகிறது.

தற்போது க்ளோஸ்ட்டர் காரை அப்டேட் செய்திருப்பதன் மூலம் அதன் விற்பனை எண்ணிக்கை உயரும் என எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் எதிர்பார்க்கிறது. இந்த புதிய மாடலின் ஆரம்ப விலை 31.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். இதை தொடர்ந்து ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலைஎம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

அனேகமாக நடப்பாண்டு இறுதிக்குள்ளாக எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். ஹெக்டர் எஸ்யூவிதான் இந்திய சந்தையில் எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் கார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

ஹெக்டர், க்ளோஸ்ட்டர் தவிர, ஹெக்டர் ப்ளஸ், இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் அஸ்டர் உள்ளிட்ட கார்களையும் எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த கார்கள் அனைத்திற்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தாலும் கூட, செமி கண்டக்டர் சிப்களுக்கான பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் எம்ஜி மோட்டார் நிறுவனம் தடுமாறி வருகிறது.


Click it and Unblock the Notifications








