என்னங்க இப்படி ஆயிருச்சு... வாடிக்கையாளர்கள் ஆதரவு அளித்தும் எம்ஜி கார்களின் விற்பனை சரிவு... ஏன் தெரியுமா?
இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் எம்ஜி மோட்டார் நிறுவன கார்களின் விற்பனை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2022ம் ஆண்டின் ஜூலை மாதம் முடிவடைந்து, ஆகஸ்ட் மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த நேரத்தில் கடந்த ஜூலை மாதத்திற்கான கார் நிறுவனங்கள் சேல்ஸ் ரிப்போர்ட்கள் தற்போது தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. இந்த வரிசையில் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஜூலை மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட்டும் நமக்கு கிடைத்துள்ளது.

இதன்படி எம்ஜி மோட்டார் நிறுவனம் நடப்பாண்டு ஜூலை மாதம் இந்திய சந்தையில் 4,013 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் 4,225 கார்களை விற்பனை செய்திருந்தது. இதன் காரணமாக எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் விற்பனை 5.02 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

வருடாந்திர ஒப்பீட்டில் மட்டுமல்லாது, மாதாந்திர ஒப்பீட்டிலும் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் கார் விற்பனை சரிவைதான் சந்தித்துள்ளது. எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் நடப்பாண்டு ஜூன் மாதம் 4,503 கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை அதன்பின் வந்த ஜூலை மாதம் 4,013 ஆக சரிந்துள்ளது.

அதாவது நடப்பாண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, ஜூலை மாதத்தில் எம்ஜி மோட்டார் நிறுவனம் சுமார் 500 கார்களை குறைவாக விற்பனை செய்துள்ளது. எனினும் ஒவ்வொரு மாதமும் இந்திய சந்தையில் சுமார் 4,000 கார்கள் விற்பனை என்ற எண்ணிக்கையை எம்ஜி மோட்டார் நிறுவனம் தொடர்ச்சியாக தக்க வைத்து கொண்டே வருகிறது.

எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் ஹெக்டர், ஹெக்டர் ப்ளஸ், இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி, க்ளோஸ்ட்டர் மற்றும் அஸ்டர் உள்ளிட்ட கார்களை விற்பனை செய்து வருகிறது. இவை அனைத்துமே எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்கள்தான். இந்த கார்கள் அனைத்திற்கும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

எனினும் எம்ஜி மோட்டார் நிறுவன கார்களின் விற்பனை வீழ்ச்சியடைந்திருப்பதற்கு காரணம் வேறு. அதாவது இந்தியா மட்டுமல்லாது, உலக அளவிலும் தற்போது செமி கண்டக்டர் சிப்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. இது கார்களுக்கு மிகவும் அவசியமான பாகங்களில் ஒன்றாகும். இதனை பெறுவதற்கு கார் உற்பத்தி நிறுவனங்கள் தற்போது முட்டி மோதி கொண்டுள்ளன.

செமி கண்டக்டர் சிப் சப்ளையில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாக தற்போது கார்களின் உற்பத்தி மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எம்ஜி மோட்டார் நிறுவனமும் விதிவிலக்கு அல்ல. உற்பத்தி குறைந்துள்ளதால், அதன் விளைவாக இந்திய சந்தையில் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் கார் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சப்ளையில் (செமி கண்டக்டர் சிப்கள்) ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள போதிலும், வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு விடாப்பிடியாக முயற்சி செய்து வருகிறோம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








