1 மாதத்திற்கு உள்ளாக 1,500 புதிய இசட்.எஸ் எலக்ட்ரிக் கார்கள் புக்கிங் ஆயிடுச்சு!! செம்ம குஷியில் எம்ஜி!
சமீபத்திய அறிமுகமான இசட்.எஸ் இவி-க்கு ஒரு மாதத்திற்கு உள்ளாகவே 1,500க்கும் அதிகமான முன்பதிவுகள் கிடைத்துள்ளதாக எம்ஜி மோட்டார் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தும், இந்த எலக்ட்ரிக் கார் குறித்தும் முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனமான எம்ஜி மோட்டார் இந்திய சந்தையில் ஹெக்டர் எஸ்யூவியின் மூலம் கடந்த 2019இல் நுழைந்தது. அதனை தொடர்ந்து இந்த நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் காராக இசட்.எஸ் இவி 2020இன் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன பயன்பாடு அதிகரித்து வருவதற்கு காரணங்களுள் ஒன்றாக விளங்கும் எம்ஜி இசட்.எஸ் கடந்த மார்ச் மாத துவக்கத்தில் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடினை பெற்றது. மாடர்ன் எம்ஜி எஸ்யூவி காரான ஆஸ்டருக்கு இணையாக கூடுதல் லைன்களுடன் மெருக்கேற்றப்பட்ட தோற்றத்தை பெற்றுள்ள இசட்.எஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் பேட்டரி தொகுப்பும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட அப்டேட் செய்யப்பட்ட எலக்ட்ரிக் எஸ்யூவி காருக்கான முன்பதிவுகள் 1 மாதம் முழுவதுமாக நிறைவடைவதற்கு உள்ளாகவே 1,500 என்கிற மைல்கல்லை கடந்துள்ளது. இசட்.எஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகப்படுத்தப்பட்ட மார்ச் மாதம் உள்பட 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டு எம்ஜி நிறுவனத்திற்கு இந்தியாவில் பயணிகள் கார்கள் விற்பனையில் நல்லப்படியான காலமாக இருந்தது என்றே சொல்ல வேண்டும்.

ஏனெனில் 2021ஆம் ஆண்டின் கடைசி காலாண்டை (அக்டோபர்- டிசம்பர்) காட்டிலும் கடந்த காலாண்டில் எம்ஜி மோட்டாரின் விற்பனை 69% அதிகரித்துள்ளது. கடந்த 2022 மார்ச் மாதத்தில் மட்டும் 4,721 கார்களை எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. சரி மீண்டும் 2022 இசட்.எஸ் இவி ஃபேஸ்லிஃப்ட் காருக்கு வருவோம். இந்த எலக்ட்ரிக் காருக்கு 2022ஆம் ஆண்டிற்கான முக்கிய அப்கிரேடாக அளவில் பெரிய 50.3kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது முந்தைய தலைமுறை இசட்.எஸ் இவி மாடல் கொண்டிருந்ததை காட்டிலும் கிட்டத்தட்ட 5.7kWh திறன் அதிகம் கொண்டதாக விளங்குகிறது. பேட்டரியின் திறன் அதிகரித்திருப்பதால், காரின் ரேஞ்ச்சும் அதிகரித்துள்ளது. 2022 எம்ஜி இசட்.எஸ் இவி ஃபேஸ்லிஃப்ட் காரை ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் நிரப்பிக்கொண்டு அதிகப்பட்சமாக 461கிமீ தொலைவிற்கு பயணிக்கலாமாம். இது முந்தைய தலைமுறையின் ரேஞ்சை காட்டிலும் 42கிமீ அதிகமாகும்.

2022 எம்ஜி இசட்.எஸ் இவி-யில் வழங்கப்பட்டுள்ள ஒற்றை பேட்டரி தொகுப்பு அதிகப்பட்சமாக 173.6 பிஎச்பி மற்றும் 280 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி கார் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 8.5 வினாடிகளில் எட்டிவிடக்கூடியதாக உள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், இசட்.எஸ் இவி எஸ்யூவி மாடலின் தோற்றத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை எம்ஜி மோட்டார் கொண்டுவந்துள்ளது.

இந்த பிரிட்டிஷ் கார் பிராண்டில் இருந்து கடைசியாக ஆஸ்டர் எஸ்யூவி கார் அறிமுகப்படுத்தப்பட்டது. இசட்.எஸ் இவி-யின் பெட்ரோல் வெர்சன் தான் ஆஸ்டர் ஆகும். இதனாலேயே ஆஸ்டரின் தோற்றத்திற்கு இணையாக இசட்.எஸ் இவி எலக்ட்ரிக் காரின் தோற்றமும் மெருக்கேற்றப்பட்டுள்ளது. நேர்த்தியான எல்இடி ஹெட்லைட்கள் உள்பட பெரும்பான்மையான பாகங்களை ஆஸ்டரில் இருந்தே இசட்.எஸ் இவி பகிர்ந்து கொண்டுள்ளது.

ஆனால் 2022 இசட்.எஸ் இவி-யில் முன்பக்க க்ரில் அமைப்பு எலக்ட்ரிக் கார் என்பதை வெளிக்காட்டும் விதமாக மூடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த பகுதியில் வழக்கம்போல் எம்ஜி முத்திரை பொருத்தப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் மோட்டார் அமைப்பை குளிர்விப்பதற்காக இந்த காரின் முன்பக்க பம்பர் பெரிய அளவிலான காற்று துளைகளை கொண்டுள்ளது. காரின் பக்கவாட்டில் பெரியதாக மாற்றம் இல்லை.

என்றாலும், அலாய் சக்கரங்களின் டிசைன் மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் காரின் பின்பகுதியும் புதிய ஆண்டிற்காக அப்டேட் செய்யப்பட்டுள்ளது. 2022 இசட்.எஸ் இவி காரின் பின்பக்கத்தில் புதிய எல்இடி டெயில்லைட்கள் மற்றும் அப்டேட்டான பம்பர் வழங்கப்பட்டுள்ளன. வெளிப்புறத்திற்கு ஏற்ப இந்த எம்ஜி எலக்ட்ரிக் காரின் உட்புற கேபினும் குறிப்பிடத்தக்க அப்டேட்களை பெற்றுள்ளது.

மிக முக்கிய அப்டேட்டாக புதிய 10.1 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு 2022 இசட்.எஸ் இவி-யின் டேஸ்போர்டில் வழங்கப்பட்டுள்ளது. ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோவை ஏற்கக்கூடியதாக உள்ள இந்த இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்புடன் ஸ்டேரிங் சக்கரத்திற்கு பின்னால் 7 இன்ச்சில் புதிய ஓட்டுனர் உதவி திரை கொடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








