தார் எஸ்யூவிக்கு ஆப்பு ரெடி! இந்தியாவில் ஜிம்னி காரை அறிமுகம் செய்வதற்கு மாருதி சுஸுகி தலைமை நிர்வாகம் அனுமதி!
ஜிம்னி (Maruti Suzuki Jimny) காரின் இந்திய வருகைக்கு மாருதி சுஸுகி தலைமை நிர்வாகம் அனுமதி வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகையால், அந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பது உறுதியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் இந்தியாவில் அதன் ஜிம்னி (Jimny) எஸ்யூவி ரக காரை மஹிந்திரா தார் (Mahindra Thar) எஸ்யூவிக்கு போட்டியாக வெகு விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. சமீபத்திய தகவல்கள், ஜிம்னியின் இந்திய வருகைக்கு நிறுவனத்தின் தலைமை அதிகார வட்டாரம் அனுமதி வழங்கியிருப்பதாக தெரிவிக்கின்றன.

ஆகையால், சுஸுகி ஜிம்னியின் இந்திய வருகை தற்போது உறுதியாகியுள்ளது. இந்த காரை முதல் முறையாக 2020 ஆட்டோ எக்ஸ்போவிலேயே மாருதி சுஸுகி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து இதன் வருகை வெகுவிரைவில் அரங்கேறிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கோவிட் 19 வைரஸ் பரவல், சிப் பற்றாக்குறை ஜிம்னியின் வருகையை தள்ளிப்போக செய்தது.

இந்த மாதிரியான சூழ்நிலையில் நிறுவனத்தின் உயர்மட்டக் குழு இக்காரின் இந்திய வருகைக்கு ஒப்புதல் வழங்கியிருக்கின்றது. ஐந்து கதவுகள் கொண்ட ஜிம்னியே இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் 3 கதவுகள் கொண்ட ஜிம்னியின் உற்பத்தி ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனால், அவை பிரத்யேகமாக வெளிநாட்டு சந்தைகளுக்காக மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்தியர்கள் பொதுவாகவே அதிக இட வசதி, அதிக மைலேஜ் மற்றும் அதிக இருக்கைகள் வசதியை விரும்புபவர்களாக இருக்கின்றனர். இத்தகையோருக்கு ஏற்ற வாகனமாக ஐந்து கதவுகள் மற்றும் 7 பேர் வரை அமர்ந்து பயணிக்கும் வகையில் மூன்று வரிசை இருக்கைகள் அமைப்புடனேயே மாருதி சுஸுகி ஜிம்னி இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றது.

2023ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்குள் இக்காரின் வருகை அமைய இருப்பதாக கூடுதல் மகிழ்ச்சியளிக்கும் தகவலும் தற்போது வெளியாகியிருக்கின்றது. மேலும் 2022 மே மாதத்தில் இந்த காரின் உற்பத்தி பணிகள் ப்ரீ-ட்ரையலாக மேற்கொள்ளப்பட இருக்கின்றது. தற்போது உலகளவில் சிப் ஷார்டேஜ் நிலவி கொண்டிருப்பதனால் இந்த பணிகள் தள்ளி போகவும் வாய்ப்பிருக்கின்றது.

மாருதி சுஸுகியின் இந்த கார் 1.5 லிட்டர் பெட்ரோ மற்றும் புதிய 1.5 லிட்டர் கே15சி மோட்டார் தேர்விலேயே விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இத்துடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு தானியங்கி டிரான்ஸ்மிஷன் தேர்வுகளும் இக்காரில் எதிர்பார்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி, 4X4 தொழில்நுட்ப வசதியுடன் ஜிம்னி எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுமட்டுமின்றி இன்னும் பல ஏராளமான சிறப்பு வசதிகளும் ஜிம்னியில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. குறிப்பாக, அதிக மைலேஜ் திறன், சொகுசான பயண அனுபவத்தை வழங்கக் கூடிய இருக்கைகள், பிரீமியம் சிறப்பு வசதிகள் மற்றும் நவீன கால தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவற்றாலும் புதிய ஜிம்னி அலங்கரிக்கப்பட இருக்கின்றது.

ஆகையால், இக்காரின் வருகையை எதிர்நோக்கில் பலர் இப்போதே காத்திருக்க தொடங்கியிருக்கின்றனர். குறிப்பாக, ஆஃப்-ரோடு பயணத்தை விரும்புவோர்கள் மத்தியில் இக்காரின் வருகை பெருத்தை ஆவலை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆனால், மாருதி நிறுவனம் முதலில் 75 யூனிட் ஜிம்னியை மட்டுமே தயாரிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொருத்த அடுத்தடுத்து தயாரிப்பின் எண்ணிக்கையை உயர்த்த அது திட்டமிட்டுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் இந்த காரை மட்டுமின்றி இன்னும் சில தயாரிப்புகளையும் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது.

Source: auto.economictimes
அந்தவகையில், புதிய ஆல்டோ, 2022 விட்டாரா ப்ரெஸ்ஸா, கியா செல்டோஸ் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா கார்களுக்கு போட்டியாக புதுமுக எஸ்யூவி மாடல் ஒன்றையும் மாருதி சுஸுகி விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications