கார்ல இந்த பிரச்னைகள் மட்டும் வராம பாத்துக்கோங்க.. இவை மட்டும் வந்திருச்சு நரகத்துல இருக்க மாதிரி ஆகிரும்!
கார்களில் ஏற்படும் சில பிரச்னைகள் அதிக எரிச்சலை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கின்றன. அந்தவகையில், அதிக கடுப்பேற்றக் கூடிய குறிப்பிட்ட சில பிரச்னைகள் பற்றிய விபரத்தையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம்.

கார்கள்ல ஒரு சில பிரச்னைகள் மட்டும் வரவே கூடாதுங்க. அவை மட்டும் வந்திருச்சு அந்த ஒட்டுமொத்த பயணமும் நரக வேதனை தர மாதிரி ஆகிடும். அப்படியாப்பட்ட கார் கோளாறுகள் என்ன?, அவற்றிற்கான தீர்வை காண்பது எப்படி? என்கிற குறிப்பிட்ட சில முக்கிய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

பேட்டரி பிரச்னை:
இந்த பிரச்னை நம்முடைய எதிரிக்குகூட வரக் கூடாதுங்க. இந்த பிரச்னை மட்டும் ஒரு காருல வந்துடுச்சு வச்சுக்கோங்க. அதை ஸ்டார்ட் செய்யுறது ரொம்ப கஷ்டம். இதுக்காக வேறு வாகனத்தின் உதவியை நாட வேண்டியிருக்கும். ஆமாங்க, ஒரு பேட்டரி பிரச்னைக் கொடுக்க ஆரம்பிச்சிட்டா அந்த காரை ஸ்டார்ட் செய்யுறது பெருத்த சவாலாக மாறிவிடும். இந்த நிலை காரில் உள்ள இறக்கும் தருவாயிலேயே ஆகும்.

இந்த மாதிரியான சூழலில் ஜம்ப் ஸ்டார்ட் செய்வதை தவிர வேறு சுலபமான வழி இல்லை. அதேநேரத்தில் காரை தள்ளி ஸ்டார்ட் செய்யவும் முடியும். ஆனால், இது ஆபத்தானது. அதேநேரத்தில் ரெண்டு மூன்று பேர் இந்த செயலுக்கு தேவைப்படும். இந்த மாதிரியான சிக்கலில் சிக்குவதற்கு முன்னரே நம்முடைய பேட்டரியை கவனிப்பது நல்லது.

காரில் உள்ள பேட்டரி இறக்கும் தருவாயில் இருக்கிறது என்றால் ஹெட்லைட் டிம்மாக எரிதல், ஹாரன் அடிக்கும்போது குறைவான ஒலி எழுதல் போன்ற பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். இந்த நேரத்தில் பேட்டரிமீது உரிய நடவடிக்கை எடுத்தால் அவலநிலைகளை முற்றிலுமாகத் தவிர்த்துவிடலாம்.

வீல் அலைன்மென்ட்
கார் வீல் அலைன்மென்ட் சீராக இல்லை என்றால் கார் ஓட்டுவதையே வெறுத்துவிடும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள். ஸ்டியரிங் வீல் நேராகதான் இருப்பதை போல்தான் தெரியும். ஆனால், வீல் அலைன்மென்ட் சரியாக இல்லாத காரணத்தினால் கார் ஏதோ ஒரு பக்கம் வாங்குவதைப் போல் இருக்கும். இப்படி இருந்தால் விபத்துக்குகூட சாத்தியம். எனவே, உடனடியாக அலைன்மென்ட் சென்டரை அணுகுவது ரொம்ப நல்லது.

சிராய்ப்புகளும், பள்ளங்களும்:
சிராய்ப்புகள், பள்ளங்கள் இவையிரண்டும் அழையா விருந்தாளிகளாக நம் காரை வந்தடைகின்றன. என்னதான் புத்தம் புதிய காராக இருந்தாலும் இந்த இரு அழையா விருந்தாளிகள் நம் காரில் வந்துவிட்டால் பழைய வாகனத்தைப் போல் அவை தோற்றமளிக்க செய்துவிடும். எனவேதான், சிராய்ப்புகள் மற்றும் சொட்டை ஏற்படுவதில் இருந்து நம் வாகனத்தை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என்கின்றனர்.

ஆனால், நெருக்கம் மிகுந்த நகர்புற சாலைகளில் பயணிக்கும்போது இவை தவிர்க்க முடியாதவையாக இருக்கின்றன. அதேவேலையில், குறிப்பிட்ட சில வேக்ஸ் மற்றும் பாலிஷ் போன்றவற்றை பயன்படுத்தும்போது தூசி மற்றும் காய்ந்த மர இலை அல்லது கிளைகளால் ஏற்படும் சிறு சிறு சிராய்ப்புகளை தவிர்க் முடியும். இதேபோல், முறையான பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்துவதன் வாயிலாக கூடுதல் பாதுகாப்பை காருக்கு உறுதிப்படுத்த முடியும்.

ஏசி பிரச்னை:
இந்தியாவில் குளிர் காலங்களில்கூட பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலில் ஏசி இல்லாத பயணம், உண்மையில் நரக வேதனையை ஏற்படுத்தும். ஆகையால், கோடை காலத்திற்கு முன்னரே உங்கள் காரின் எஞ்ஜின் கூலிங் சிஸ்டம், ஏசி போன்றவற்றை செக் செய்துவிடுவது ரொம்ப நல்லது.

கரும்புகை வெளியேற்றம்:
பொதுவாகவே வாகனம் என்றாலே புகை மற்றும் பிற மாசு உமிழ்வுகளை வெளியேற்றுவது வழக்கம்தான். ஆனால், வழக்கத்திற்கு மாறாக கொசு மருந்து தெளிக்கும் வண்டியைப் போல் ஓர் கார் வெளியேற்றுமானால், நிச்சயம் ரோடு போறவங்க எல்லாருமே அந்த வாகன ஓட்டி வசைபாடாம இருக்க மாட்டாங்க. இதனால மானமே போய்ரும். அதிக புகை வெளியேற்றத்தின் எக்சாஸ்ட் சிஸ்டத்தில் மிகப் பெரிய பிரச்னை இருக்கிறது என்பதை உணர்ந்து, உடனடியா சர்வீஸ் மையத்தை அணுகுவதே நல்லது.

பிரேக்கிங்கின்போது தேவையற்ற கீச்சு சத்தம்:
டிரம் பிரேக் உள்ள வாகனங்களில் மழைக்காலங்களில் இந்த சத்தம் சாதாரணம்தான். ஆனால், இதை அவ்வளவு எளிதில் எடுத்துக் கொள்ளக் கூடாது. பிரேக் கட்டைகள் தேயந்திருப்பதனாலேயே இதுமாதிரியான கீச்சு சத்தங்கள் பிரேக்கிங்கின்போது ஏற்படும். எனவே, இந்த சத்தத்தை எளிதாக எடுத்துக் கொள்ளாமல் உடனடி நடவடிக்கை மேற்கொள்வதே சிறந்தது.

குறைவான மைலேஜ்:
அதிக எடை, அதிக வேகம், அதிக டிராஃபிக் இதுமாதிரியான காரணங்களினால் மைலேஜ் அடிவாங்குவது பொதுவானதே. ஆனால், இதில் எதுவுமே நடக்காமல் மைலேஜ் அடிவாங்குகிறது என்றால் வாகனத்தின் மைலேஜ் திறனில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருக்கின்றது என்று அர்த்தம். இந்த நிலை நிச்சயம் மிகுந்த கவலளையளிக்கக் கூடியாது. ஆகையால், இதில் உடனடி கவனத்தைச் செலுத்துவதே நல்லது.

எஞ்ஜின் ஓவர் ஹீட்:
எஞ்ஜின் தேவையில்லாமல் ஓவர் ஹீட் ஆகிறது என்றால், கூலிங் சிஸ்டத்தில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருக்கின்றது என்றே அர்த்தம். குறிப்பாக ரேடியேட்டர் சிஸ்டத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டிருந்தாலே எஞ்ஜின் சூடு கட்டுக்கடங்காமல் வெளியாகும். ஆகையால், உடனடியாக இந்த விஷயத்தில் நடவடிக்கையை மேற்கொண்டு, வாகனத்தில் வெளியேறும் அதிகப்படியான வெப்பத்தை குறைப்பது நல்லது. அதிக வெப்பத்தின் காரணமாக வாகனம் பிரேக் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இதற்கு வாய்ப்பளிக்காமல் முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பது சிறந்தது.


Click it and Unblock the Notifications








