டீசல் என்ஜினில் மஹிந்திரா எக்ஸ்யூவி700-ஐ வாங்கவே நிறைய பேர் விரும்புறாங்க போல!! வெயிட்டிங் பிரீயட் தான் அதிகம்
மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை பெரும்பாலானோர் டீசல் என்ஜின் உடன் வாங்கவே விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

முன்பு விற்பனையில் இருந்த எக்ஸ்யூவி500-இன் புதிய தலைமுறை வெர்சனாக எக்ஸ்யூவி700 கடந்த அக்டோபர் மாதத்தில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 'பலத்த எதிர்பார்ப்பு' என்கிற வார்த்தையை மறந்துவிட வேண்டாம்.

ஏனெனில் அறிமுகத்தில் இருந்து தற்போது வரையில் மட்டுமே ஏறக்குறைய சுமார் 1 லட்ச வாடிக்கையாளர்கள் எக்ஸ்யூவி700 காரை முன்பதிவு செய்துள்ளனர். இதில் கிட்டத்தட்ட 65 சதவீத வாடிக்கையாளர்கள் டீசல் என்ஜின் உடன் எக்ஸ்யூவி700 காரை வாங்கவே விரும்புவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. மீதி 35 சதவீதத்தினர் மட்டுமே பெட்ரோல் என்ஜின் உடன் எக்ஸ்யூவி700-ஐ வாங்க விரும்புகின்றனராம்.

அதேபோல் தற்போது வரையில் கிடைத்துள்ள மொத்த வாடிக்கையாளர்களில் கிட்டத்தட்ட 60% பேர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் தனக்கான எக்ஸ்யூவி700 காரை தேர்வு செய்துள்ளனராம். முன்பதிவுகள் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கினாலும், மஹிந்திரா இதுவரையில் டெலிவிரி செய்துள்ள எக்ஸ்யூவி700 கார்களின் எண்ணிக்கை என்று பார்த்தால், 14,000 தான்.

குறைக்கடத்திகளின் பற்றாக்குறையால் இந்த 5-இருக்கை எஸ்யூவி காரை போதிய அளவில் தயாரிக்க முடியாமல் மஹிந்திரா சவால்களை சந்தித்து வருவதை பற்றி ஏற்கனவே நமது செய்திதளத்தில் பார்த்திருந்தோம். இதன்படி சிப்-கள் அதிகம் தேவைப்படும் பாகங்களை நீக்கி எக்ஸ்யூவி700 கார்களை விற்பனை செய்யவும் மஹிந்திரா திட்டமிட்டு வருவதாக அப்போது கூறியிருந்தோம்.

தயாரிப்பு பணிகளில் ஏற்படும் இத்தகைய தடைகளினால், வாடிக்கையாளர்கள் எக்ஸ்யூவி700 காரை முன்பதிவு செய்து காத்திருக்க வேண்டிய கால அளவு பல மாதங்களுக்கு தற்சமயம் உள்ளது. இதன் ஒரு சில வேரியண்ட்களுக்கான காத்திருப்பு காலம் கிட்டத்தட்ட 1 வருடத்திற்கும் அதிகமாக கூட உள்ளது. அதாவது எக்ஸ்யூவி700-இன் ஆரம்ப நிலை வேரியண்ட்டான எம்.எக்ஸ் -க்கான காத்திருப்பு காலம் 7 மாதங்களாக உள்ள நிலையில், டாப் ஏஎக்ஸ்7 எல் ட்ரிம்-மிற்கு 1.8 வருடங்கள் வரையில் உள்ளது.

5-இருக்கை மட்டுமின்றி, 7-இருக்கை தேர்விலும் விற்பனைக்கு கிடைக்கும் எக்ஸ்யூவி700-இன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்போதைக்கு ரூ.12.95 லட்சங்களில் இருந்து ரூ.23.79 லட்சங்கள் வரையில் உள்ளன. இந்த எஸ்யூவி காருக்கான முன்பதிவுகள் கடந்த 2021 அக்.7ஆம் தேதி துவங்கிய நிலையில், இதன் பெட்ரோல் வேரியண்ட்களின் டெலிவிர்கள் அதே அக்டோபர் மாத இறுதியில் ஆரம்பித்தது.

டீசல் வேரியண்ட்களின் டெலிவிரிகள் அதன்பின் அடுத்த நவம்பர் மாத இறுதியில் துவங்கியது. இந்த மாடர்ன் மஹிந்திரா காருக்கு ஆரம்பத்தில் இருந்தே முன்பதிவுகள் குவிய துவங்கின. எந்த அளவிற்கு என்றால், அக்.7இல் துவங்கிய புக்கிங் அடுத்த வெறும் 57 நிமிடங்களில் 25,000 -ஐ எளிதாக கடந்தது. அதன்பின் முன்பதிவுகள் சற்று குறைந்தாலும், அடுத்த 2 வாரங்களில் எக்ஸ்யூவி700-ஐ முன்பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 65,000 கடந்தது.

ஏற்கனவே கூறியதுதான், வாடிக்கையாளர்களின் அதிகப்படியான காத்திருப்பு காலத்திற்கு சிப்-களின் உலகளாவிய தேவை முக்கிய காரணமாக உள்ளது. இதனாலேயே சிப்-கள் மூலம் செயல்படும் அட்ரேனாக்ஸ் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை பெறும் ஏ.எக்ஸ்3, ஏ.எக்ஸ்5 மற்றும் ஏஎக்ஸ்.7 வேரியண்ட்களுக்கு காத்திருப்பு காலம் அதிகப்பட்சமாக 1 வருடம் 8 மாதங்கள் வரையில் உள்ளது.

எக்ஸ்யூவி700 காரில் 2.0 லிட்டர் எம்ஸ்டாலியோன் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என இரு விதமான என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இவை இரண்டுடனும் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படுகிறது. அத்துடன் டீசல் மாடலில் கூடுதல் தேர்வாக அனைத்து-சக்கர-ட்ரைவ் வேரியண்ட்டும் கொடுக்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக மஹிந்திரா பிராண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை தாரின் விற்பனையும் மறுப்பக்கம் குவிந்து வருகிறது. எந்த அளவிற்கு என்றால், 2020ஆம் ஆண்டை காட்டிலும் கடந்த 2021ஆம் ஆண்டில் இந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனத்தின் விற்பனை சுமார் 561% அதிகரித்துள்ளது. புதிய தலைமுறை தார் 2020 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








