கழட்டி மாட்டும் கேப்ஸ்யூல் சிலிண்டர் கொண்ட கார் வெளியீடு! இது இயங்குவதற்கு ஹைட்ரஜன் ஒன்னு போதும்!!
நம்க்ஸ் எச்யூவி (NAMX HUV) கான்செப்ட் கார் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இக்காரில் பல சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அவை என்ன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ஸ்டார்ட்-அப் வாகன உற்பத்தி நிறுவனமான நம்க்ஸ் (NAMX) அதன் 'எச்யூவி' (HUV) எனும் புதுமுக கான்செப்ட் கார் மாடலை வெளியீடு செய்திருக்கின்றது. இது ஓர் மின்சார காராகும். நிறுவனம் உருவாக்கும் முதல் மின்சார கார் இது என்பது குறிப்பிடத்தகுந்தது. இது ஓர் வழக்கமான மின்சார கார் அல்ல என்பதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதாவது, ஹைட்ரஜனில் இருந்து மின்சாரத்தை தயாரித்து அதன் மூலம் இயங்கும் கார் இதுவாகும். இந்த பிரத்யேக தொழில்நுட்ப வசதிக் கொண்ட காரை நம்க்ஸ் நிறுவனம், பினின்ஃபரினா (Pininfarina) நிறுவனத்துடன் இணைந்தே உருவாக்கியிருக்கின்றது. இந்நிறுவனம் டிசைனிங் போன்ற முக்கிய பணிகளை மேற்கொண்டிருக்கின்றது.

ஹைட்ரஜனில் இயங்கும் மின்சார கார்களின் உற்பத்தி பணிகள் இன்னும் பல மடங்கு பின் தங்கியிருக்கின்றது. ஆகையால், இக்காரின் வருகை 2025ம் ஆண்டைத் தாண்டியும் போகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் வாயிலாக நம்க்ஸ் காரின் வருகையும் இன்னும் சில ஆண்டுகளுக்கு பின்னரே அரங்கேறும் என தெரிகின்றது. ஆனால், வெகு நாட்கள் எடுத்துக் கொள்ளாது என்கிற தகவலும் வெளிவர தொடங்கியிருக்கின்றன.

அதேவேலையில் இக்கார் இரு விதமான வேரியண்டுகளில் உருவாக்கப்பட்டு வருகின்றது. அதில், ஒன்று வழக்கமான வேரியண்டாகவும், மற்றொன்று உயர் திறனை வெளிப்படுத்தக் கூடியதாகவும் விற்பனைக்கு வரும். அதாவது, ஓர் தேர்வு பின் பக்க வீல் டிரைவ், 296 எச்பி திறன் வெளிப்பாட்டு வசதிகளுடனும், மற்றொன்று, நான்கு வீல் இயக்கம் மற்றும் 542 எச்பி திறன் வெளிப்பாட்டு வசதியுடனும் அது கிடைக்கும்.

இதில், முதல் ஒன்று அதிகபட்சமாக மணிக்கு 200 கிமீ வேகத்தில் ஓடும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி, 6.5 செகண்டுகளிலேயே 100 கிமீ வேகத்தை எட்டிவிடும். ஆனால், இரண்டாவது தேர்வு முந்தையதை விட அதிக பவரை வெளியேற்றக் கூடியதாகக் காட்சியளிக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிமீ ஆகும். இது வெறும் 4.5 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ வேகத்தைத் தொட்டுவிடும்.

முதலில் இக்கார் ஐரோப்பியாவிலேயே விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அங்கு 65 யூரோக்கள் தொடங்கி 95 ஆயிரம் யூரோக்கள் வரையில் விற்கப்பட இருக்கின்றது. இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக ரூ. 52 லட்சம் தொடங்கி 76 லட்சம் ஆகும். இத்தகைய அதிகபட்ச விலையிலேயே நம்க்ஸ் நிறுவனத்தின் எச்யூவி ஹைட்ரஜன் கார் விற்பனைக்கு வர இருக்கின்றது.

இதன் இந்திய வருகை பற்றிய எந்த விபரமும் வெளியிடப்படவில்லை. ஆகையால், இதன் வருகை சந்தேகமே. இந்த காரில் ஓர் நிலையாக பொருத்தப்பட்ட ஹைட்ரஜன் சிலிண்டரும், கூடுதலாக ஆறு ரிமூவபிள் ஹைட்ரஜான் கேப்ஸ்யூல் ரக சிலிண்டர்களும் எச்யூவி காரில் வழங்கப்பட்டிருக்கின்றது. இவற்றை முழுமையாக நிரப்புவதன் வாயிலாக 800 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இத்தகைய சூப்பரான வசதிக் கொண்ட காரையே பினின்ஃபரினா மற்றும் நம்க்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. இக்கார் எதிர்கால வாகன உலகில் நிச்சயம் புரட்சி செய்யும் என நிறுவனம் நம்பிக்கைத் தெரிவித்திருக்கின்றது.

அதேவேலையில், இக்காரை அதிக கவர்ச்சியான தோற்றம் கொண்ட காராகவும் நிறுவானம் உருவாக்க இருக்கின்றது. 50ஸ் மற்றும் 60ஸ் காலங்களில் உருவாக்கப்பட்டதைப் போன்ற கட்டுமஸ்தான காராக உருவாக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் தற்போது உள்ள மென்மையான கார்களைக் காட்டிலும் பல மடங்கு முரட்டுத்தனமான தோற்றத்தில் அக்கார் உருவாக்கப்பட்டு வருகின்றது.

பினின்ஃபரினா மட்டுமின்றி மத்ரா, ரெனால்ட் போன்ற முன்னணி நிறுவனங்களும் இந்த ஆரம்ப நிலை வாகன உற்பத்தியாளருக்கு உதவி வருகின்றன. நம்க்ஸ் நிறுவனம் இக்கார் உற்பத்தியை 2023ம் ஆண்டிற்கு பின்னர் தொடங்க இருக்கின்றது. இதன் அதிகாரப்பூர்வ வெளியீடு பாரிஸ் ஆட்டோ ஷோவில் அரங்கேற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








