உள்ளே இருந்தப்படி காரை சுற்றிலும் காணலாம்!! 360-கோண கேமிரா உடன் 2022 மாருதி சுஸுகி பலேனோ ஃபேஸ்லிஃப்ட்!
முக்கிய சிறப்பம்சமாக 360-கோண கேமிரா உடன் மாருதி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் கார் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து மிக விரைவில் 2022 பலேனோ ஃபேஸ்லிஃப்ட் கார் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கிடையில் இந்த ஃபேஸ்லிஃப்ட் ஹேட்ச்பேக் காரின் சிறப்பம்சங்களை வெளிக்காட்டும் விதத்திலான வீடியோக்கள் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வெளியிடப்பட்ட வண்ணம் உள்ளன.

இந்த வகையிலேயே தற்போது அப்டேட் செய்யப்பட்ட பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரின் 360-கோண கேமிராவை வெளிக்காட்டும் விதத்திலான டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொழிற்நுட்பத்தின் மூலமாக 360-டிகிரிக்கு காரை சுற்றிலும் உள்ள பகுதிகளை காணலாம். இதுதொடர்பாக மாருதி சுஸுகியின் அதிகாரப்பூர்வ யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ இதோ...
காருக்கான மற்றும் பாதசாரிகளுக்கான பாதுகாப்பு அம்சமாக 360-கோண கேமிரா தற்போதைய மாடர்ன் கார்களில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக காரை சுற்றிலும் உள்ள பொருட்கள், விலங்குகள் மற்றும் பாதசாரிகளை அடையாள காணுவது மட்டுமின்றி, எதிர்பாராத விபத்துகளையும், உராய்வுகளை தவிர்க்கலாம். ஆகையால் இது உண்மையில் அட்டகாசமான அம்சமாகும்.

சுற்றிலும் பொருத்தப்பட உள்ள கேமிராக்களின் மூலம் காட்டப்படும் காட்சிகள் 2022 பலேனோ காரின் உட்புற டேஸ்போர்டில் வழங்கப்பட உள்ள அளவில் பெரிய 9-இன்ச் ஸ்மார்ட்ப்ளே ப்ரோ+ தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தில் ஒருங்கிணைக்கப்பட உள்ளன. சுஸுகி & டொயோட்டாவின் கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆனது ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோவை ஏற்கக்கூடியதாக இருக்கும்.

இவ்வாறு பல்வேறு புதிய அம்சங்களை கொண்டதாக புதிய பலேனோ ஃபேஸ்லிஃப்ட் விளங்கவுள்ளது. மாருதி சுஸுகி பிரீமியம் ரக ஹேட்ச்பேக் காராக விளங்கும் பலேனோ இந்த புதிய அவதாரத்தில் எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் நேர்த்தியான க்ரில் அமைப்புடன் முற்றிலும் புதுமையான முன்பக்கத்தினை பெற்றுவரவுள்ளது. அதேபோல் பின்பக்கத்தையும் புத்துணர்ச்சியான தோற்றத்தில் எதிர்பார்க்கிறோம்.

இதுவரையில் நமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி, ‘நியூ ஏஜ் பலேனோ' என்கிற பெயரில் அறிமுகப்படுத்தபட உள்ள புதிய பலேனோ ஃபேஸ்லிஃப்ட் சிக்மா, டெல்டா, ஜீட்டா மற்றும் ஆல்ஃபா என்கிற 4 விதமான வேரியண்ட்களில் சந்தைப்பட உள்ளது. இதில் சிக்மா வேரியண்ட்டை தவிர்த்து மற்ற மூன்றையும் மேனுவல் & ஆட்டோமேட்டிக் தேர்வில் வாங்கலாம்.

ஆரம்ப நிலை சிக்மா வேரியண்ட்டை மேனுவல் தேர்வில் மட்டுமே பெற முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பேர்ல் ஆர்டிக் வெள்ளை, ஸ்ப்லெண்டிட் சில்வர், கிராண்டியர் க்ரே, செலஸ்டியல் நீலம், உமிழும் நெருப்பின் சிவப்பு மற்றும் லக்ஸ் பழுப்பு என்கிற 6 விதமான நிறத்தேர்வுகள் புதிய பலேனோ காருக்கு வழங்கப்பட உள்ளன. இவை அனைத்தும் மெட்டாலிக் ஷேடில் பெயிண்ட் செய்யப்பட உள்ளன.

ரூ.11,000 என்கிற டோக்கன் தொகையுடன் முன்பதிவுகள் புதிய பலேனோவின் மீது நடைபெற்று வருகின்றன. அறிமுகத்திற்கு முன்னதாக மாருதியின் இந்த புதிய மாடலை பலமுறை சோதனை ஓட்டங்களின்போது பொது சாலைகளில் அடையாளம் கண்டுள்ளோம். அப்போது கிடைக்க பெற்றிருந்த ஸ்பை படங்களை வைத்தே பலேனோ ஃபேஸ்லிஃப்ட் கார் எத்தகைய தோற்றத்தில் இருக்கும் என்பதை யூகித்து வைத்துள்ளோம்.

பலேனோ மாடலின் பக்கவாட்டில் பெரியதாக எந்த மாற்றமும் கொண்டுவரப்பட போவதில்லை என்றாலும், முன் & பின்பக்கத்தில் வழங்கப்படும் அப்டேட்களினால் புதிய பலேனோ இந்திய வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து இழுக்கும் என மாருதி சுஸுகி நம்பிக்கையாக உள்ளது. தற்போதைக்கு இந்தியாவில் ஒவ்வொரு மாதத்திலும் அதிகளவில் விற்பனையாகக்கூடிய கார்களில் மாருதி சுஸுகி பலேனோவும் ஒன்று ஆகும்.

கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு மாதத்திலும் சராசரியாக 10 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் பலேனோ ஹேட்ச்பேக் கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இத்தகைய காரில் புதியதாக ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் கொண்டுவரப்படுவதினால் தான் மாருதி சுஸுகி சற்று பரபரப்பாக உள்ளது. சற்று விரைப்பான ஹார்டெக் ப்ளாட்ஃபாரத்தில் உருவாக்கப்படுவதும் புதிய பலேனோ ஃபேஸ்லிஃப்ட்டிற்கு கூடுதல் பலமாக அமையும்.


Click it and Unblock the Notifications








