தொடர் சோதனை ஓட்டங்களில் 2022 மஹிந்திரா ஸ்கார்பியோ!! மிக விரைவில் அறிமுகத்தை எதிர்நோக்கி..!
மஹிந்திராவின் பிரபலமான கார்களுள் ஒன்று என்றால், அதில் நிச்சயம் ஸ்கார்பியோவை சேர்க்கலாம். பெரிய அளவில் எந்தவொரு அப்கிரேடையும் பெறாத போதும், கிட்டத்தட்ட கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இந்திய சந்தையில் அதிகளவில் விற்பனையாகும் கார்களுள் ஒன்றாக விளங்கி வருகிறது.

இருப்பினும் இதன் விற்பனையை மேலும் அதிகரிக்கும் விதமாக மஹிந்திரா நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட 2022 ஸ்கார்பியோவை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இதற்கிடையில் புதிய ஸ்கார்பியோ மாடலின் சோதனை மாதிரிகள் கடந்த 1 வருடமாக தொடர்ந்து பொது சாலைகளில் சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட எக்ஸ்யூவி700 மாடல் உடனும் கூட புதிய ஸ்கார்பியோ சோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் எக்ஸ்யூவி700 அறிமுகமாகிவிட்டது, ஆனால் புதிய ஸ்கார்பியோ அறிமுகமாகவில்லை. இதனாலேயே இதன் அறிமுகத்தை மிக விரைவில் எதிர்பார்க்கிறோம். இந்த நிலையில் தற்போது மீண்டும் முழு மறைப்புகளுடன் 2022 ஸ்கார்பியோ மாடல் பொது சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சோதனை ஓட்டம் தொடர்பான படங்களில் ஒன்றினைதான் மேலே காண்கிறீர்கள். இந்த படங்களில் சோதனை கார் முற்றிலுமாக மறைப்புகளால் மறைக்கப்பட்டுள்ளதை காண முடிகிறது. இவ்வளவு ஏன், காரின் அலாய் சக்கரங்களின் டிசைன் கூட மறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஸ்கார்பியோவின் இந்த சோதனை மாதிரி வழக்கத்தை காட்டிலும் கூடுதல் விறைப்பானதாக காட்சியளிக்கிறது. இதில் இருந்து 2022 ஸ்கார்பியோ தனது இறுதிக்கட்ட சோதனைகளில் உள்ளதை அறிய முடிகிறது.

தற்சமயம் விற்பனையில் உள்ள ஸ்கார்பியோ உடன் ஒப்பிடுகையில், புதிய ஸ்கார்பியோவிலும் நிமிர்ந்த முன்பக்கம், பெட்டகம் வடிவிலான இரட்டை-பேட் ஹெட்லேம்ப்கள் மற்றும் செங்குத்தான டெயில்லேம்ப்கள் உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கிறோம். ஒரே காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளதால், எக்ஸ்யூவி700 மாடலில் இருந்து ஏகப்பட்ட இயந்திர மற்றும் தொழிற்நுட்ப பாகங்களையே புதிய ஸ்கார்பியோவும் பெற்றுவரலாம்.

அத்துடன் உட்புற கேபினின் அலங்கரிப்பையும் எக்ஸ்யூவி700 உடன் ஸ்கார்பியோ பகிர்ந்து கொள்ளலாம். பாடி-ஆன்-ஃப்ரேமில் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய ஸ்கார்பியோவில் பிராண்டின் புதிய 2.2 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் மற்றும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் இந்த என்ஜின் தேர்வுகள் தான் மஹிந்திராவின் சமீபத்திய முக்கிய அறிமுகங்களான புதிய தலைமுறை தார் மற்றும் எக்ஸ்யூவி700 கார்களில் வழங்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும், இவை இரண்டுடன் ஒப்பிடுகையில் புதிய ஸ்கார்பியோவிற்கான இயக்க ஆற்றல் குறைந்ததாக வழங்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன. எக்ஸ்யூவி700 -ஐ போல் 2022 ஸ்கார்பியோவிலும் 6-ஸ்பீடு மேனுவல் & 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படலாம். இவற்றை தவிர்த்து, புதிய ஸ்கார்பியோவின் டாப் வேரியண்ட் 'பறக்கும்போது கியர் மாற்று' என்ற 4-சக்கர-ட்ரைவ் அமைப்பினையும் பெற்றுவரலாம்.

ஏற்கனவே கூறியதுதான், புதிய ஸ்கார்பியோவின் உட்புறம் பெரும்பான்மையாக எக்ஸ்யூவி700 காரையே ஒத்து காணப்படும். இந்த வகையில் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் பெரிய அளவிலான தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர் இல்லா சார்ஜிங் பேட், கூல்டு க்ளோவ் பாக்ஸ், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவற்றை 2022 ஸ்கார்பியோ காரிலும் எதிர்பார்க்கிறோம்.

மற்றப்படி, அதிநவீன ஓட்டுனர் உதவி அம்சங்களுடன் புதிய ஸ்கார்பியோவை மஹிந்திரா அறிமுகப்படுத்துமா என்பது தற்போதைக்கு உறுதியாக தெரியவில்லை. எக்ஸ்யூவி700 காரில் இந்த அதிநவீன ஓட்டுனர் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை வழங்கினால் காரின் விலையினை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் மஹிந்திரா ஏற்படும். ஆனால் ஸ்கார்பியோ அனைத்து விதமான பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுவதால், இந்த எஸ்யூவி காரின் விலையினை பெரியதாக அதிகரிக்க மஹிந்திரா விரும்பாது.

முற்றிலும் புதிய ஸ்கார்பியோவின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையினை கிட்டத்தட்ட ரூ.12 லட்சங்களில் எதிர்பார்க்கிறோம். இத்தனை வருடங்களில் ஸ்கார்பியோவில் மிக முக்கியமான அப்கிரேட்களை மஹிந்திரா கொண்டுவரவில்லை, சிறு சிறு அப்டேட்களை மட்டுமே வழங்கி வந்துள்ளதாக ஏற்கனவே கூறிவிட்டோம். இதனாலேயே புதிய தலைமுறை ஸ்கார்பியோவின் அறிமுகம் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.

இதனால் அறிமுகத்திற்கு பிறகு இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் எஸ்யூவி கார்களில் ஸ்கார்பியோ முதலிடத்தை பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தற்சமயம் ஸ்கார்பியோ எஸ்யூவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.13.18 லட்சங்களில் இருந்து ரூ.18.15 லட்சங்கள் வரையில் உள்ளன. இருப்பினும் அதிக வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஸ்கார்பியோவின் ஆரம்ப விலையினை ரூ.12 லட்சங்கள் என்ற அளவில் மஹிந்திரா நிறுவனம் கொண்டுவரலாம்.


Click it and Unblock the Notifications








