புதிய ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் காரை புக் செய்துள்ளீர்களா? மகிழ்ச்சியான விஷயம்தான்... டெலிவிரி ஸ்டார்ட்!!
புதிய ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் காரின் முதல் தொகுப்பு அதன் உரிமையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

இந்தியாவில் ஹோண்டா கார்ஸ் நிறுவனம் நடப்பு 2022 மே மாத துவக்கத்தில் அதன் புதிய காராக சிட்டி செடானின் ஹைப்ரிட் வெர்சனை சிட்டி இ:எச்இவி என்கிற பெயரில் அறிமுகப்படுத்தியது. வழக்கமான சிட்டி காரின் இசட்.எக்ஸ் வேரியண்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஹைப்ரிட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.19.15 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிட்டி இ:எச்இவி காருக்கான டெலிவிரி பணிகள் தற்போது அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளன. காரை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ டெலிவிரி செய்துள்ளார். ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் உள்ள ஐந்தாம்-தலைமுறை சிட்டி செடானை அடிப்படையாக கொண்டே புதிய ஹைப்ரிட் வெர்சன் தயாரிக்கப்பட்டது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம்.

இதனால் தோற்றத்தை பொறுத்தவரையில், வழக்கமான சிட்டி செடான் காரையே இ:எச்இவி வெர்சன் ஒத்து காணப்படுகிறது. இருப்பினும் தனித்து தெரிய வேண்டுமென்பதற்காக நீல நிறத்தில் ஹோண்டா லோகோக்கள், இ:எச்இவி முத்திரை, புதிய ஃபாக் விளக்கு அவுட்லைன், பின்பக்கத்தில் ஸ்பாய்லர் மற்றும் பின் பம்பரில் புதிய டிஃப்யூஸர் டிசைன் என சில புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக அதிநவீன ஓட்டுனர் உதவி அமைப்புகள் (ADAS) உடன் புதிய சிட்டி இ:எச்இவி கார் கொண்டுவரப்பட்டுள்ளது. ஹோண்டா உணர் தொகுப்பு என அழைக்கப்படும் ADAS மூலம் தானியங்கி அவசரகால பிரேக், தகவமைத்து கொள்ளக்கூடிய க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஒரே பாதையை தொடர்வதற்கான உதவி உள்ளிட்டவற்றை பெறலாம்.

இந்தியாவில் 4ஆம் தலைமுறை மற்றும் 5ஆம் தலைமுறையில் சிட்டி செடான் மாடல் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இவை இரண்டை விடவும் புதிய இ:எச்இவி ஆனது டார்க் திறன் மிக்கதாக விளங்குகிறது. இத்தகைய டார்க் திறனை சமாளிக்கும் வகையில் இந்த ஹைப்ரிட் காரின் பின் சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக்கையும் இது கொண்டுள்ளது.

புதிய ஹோண்டா சிட்டி இ;எச்இவி காரில் அட்கின்சன் சைக்கிள் 1.5 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 126 எச்பி மற்றும் 253 என்எம் டார்க்கை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் முதல் மோட்டார் ஆனது பேட்டரியை சார்ஜ் ஏற்றும்.

இதன் மூலம் கிடைக்க பெறும் ஆற்றல் இரண்டாவது மோட்டாருக்கு அனுப்பப்பட்டு, சக்கரங்கள் இயக்கத்தை பெறுகின்றன. இந்த ஹைப்ரிட் காரில் எந்தவொரு கியர்பாக்ஸும் கிடையாது. அதிவேகத்தில் இயங்கும்போது, என்ஜினிற்கும், சக்கரங்களுக்கும் இடையே லாக்-அப் க்ளட்ச் முக்கிய பணியாற்றும். நேரடியாக என்ஜினில் இருந்து சக்கரங்களுக்கு ஆற்றல் சென்றாலும், இந்த காரில் ஆற்றல் இழப்பானது கிடையாது.

இதன் காரணமாக காரின் எரிபொருள் திறன் சிறப்பானதாக கிடைக்கும். ஹோண்டா தெரிவித்துள்ள தகவலின்படி, சிட்டி இ:எச்இவி காரை அதிகப்பட்சமாக லிட்டருக்கு 26.5கிமீ தொலைவிற்கு இயக்கலாம். அடிக்கடி நின்று நின்று செல்ல வேண்டிய போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் என்ஜின் தன்னிச்சையாக அணைக்கப்பட்டு, உந்துதல் பணியை மோட்டார்-பேட்டரி கவனித்து கொள்ளுமாம்.

இதனாலேயே அதிகளவிலான பெட்ரோல் மிச்சப்படுத்த முடியும் என்கிறது ஹோண்டா. பின்னர் ஓர் குறிப்பிட்ட வேகத்தை தாண்டிய பின்னரே என்ஜின் ஸ்டார்ட் ஆகும். என்ஜின் ஸ்டார்ட் ஆகுவதினால் கார் இயங்குவது மட்டுமின்றி, பேட்டரியும் சார்ஜாகி கொள்ளும். இ:எச்இவி -இன் ஒரே குறை என்னவென்றால், பேட்டரி தொகுப்பு உள்ளிட்ட சில காரணிகளினால் காரின் எடை 110 கிலோ வரையில் அதிகரித்துள்ளது.

மேலும் பேட்டரி தொகுப்பின் காரணமாக பின்பக்கத்தில் பொருட்களை வைக்கும் பகுதியின் அளவும் கணிசமாக குறைந்துள்ளது. இதன் காரணமாகவே, உதிரி சக்கரத்தினை அளவில் சிறியதாக ஹோண்டா வழங்கியுள்ளது. இந்த புதிய ஹைப்ரிட் வேரியண்ட்டின் பூட் ஸ்பேஸ் கொள்ளளவு 410 லிட்டர்களாகும். விற்பனையில் சிட்டி இ:எச்இவி -க்கு போட்டியளிக்கும் விதமாக ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடான் மாடல்கள் ஹைப்ரிட் வெர்சனை கொண்டுள்ளன.


Click it and Unblock the Notifications








