புதிய கியா கேரன்ஸின் விலைகள் ஏற்கக்கூடியவை தானா? போட்டி மாடல்களின் விலைகள் எந்த அளவில் உள்ளன?
மிக பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் புதிய கேரன்ஸ் 3-வரிசை எம்பிவி காரை கியா நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. விற்பனையில் இந்த கியா எம்பிவி காருக்கு போட்டியாக உள்ளவற்றுடனான ஒப்பீடுகையை பற்றி இனி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

இந்தியாவில் குடும்பத்திற்கான புதிய காராக கியா கேரன்ஸ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக ரூ.8.99 லட்சத்தில் இருந்து ரூ.16.99 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இது அறிமுக விலை தானே தவிர, விரைவில் இந்த காரின் விலைகள் உயர்த்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

நமக்கு தெரிந்தவரையில், கேரன்ஸ் எம்பிவியின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.13 லட்சங்களில் இருந்து ரூ.20 லட்சங்கள் வரையில் நிர்ணயிக்கப்படலாம். ஆதலால் கேரன்ஸை வாங்க நினைப்போர் இப்போதே முன்பதிவு செய்வதுதான் புத்திசாலித்தனமானது. இதனாலேயே கியா கேரன்ஸிற்கு தற்சமயம் முன்பதிவுகள் குவிந்து வருகின்றன.

கடந்த ஜனவரி மாத இறுதியில் இருந்தே சில டீலர்ஷிப்களில் துவங்கிய இந்த எம்பிவி காருக்கான முன்பதிவுகள் தற்போதைக்கு 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இத்தனைக்கும், இந்த காருக்கான எக்ஸ்-ஷோரூம் விலைகள் இன்று(பிப்.15) தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. கேரன்ஸின் எக்ஸ்-ஷோரூம் விலையினை ரூ.17 லட்சத்திற்குள் கியா நிர்ணயித்துள்ளது உண்மையில் நாம் அனைவரும் எதிர்பார்க்காத ஒன்றுதான் என சொல்ல வேண்டும்.

இந்த விலைகளில் கேரன்ஸிற்கு மாருதி சுஸுகி எர்டிகா & எக்ஸ்.எல்6 மற்றும் மஹிந்திரா மராஸ்ஸோ மாடல்கள் நேரெதிர் போட்டியாக விளங்குகின்றன. இதில் மாருதி சுஸுகியின் மாடல்கள் பெட்ரோல் என்ஜின் தேர்வில் மட்டுமே தற்போதைக்கு கிடைக்கின்றன. அதேநேரம் மராஸ்ஸோவை டீசல் என்ஜின் உடன் மட்டுமே மஹிந்திரா விற்பனை செய்து வருகிறது.

ஆனால் கேரன்ஸில் பெட்ரோல் & டீசல் என இரு விதமான என்ஜின் தேர்வுகளையும் கியா வழங்கியுள்ளது. கியா கேரன்ஸில் 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ-டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என 3 என்ஜின் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன். இவற்றுடன் 6-ஸ்பீடு மேனுவல் & ஆட்டோமேட்டிக் மற்றும் 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் ட்ரிம் நிலையை பொறுத்து வழங்கப்படுகின்றன.

கியா கேரன்ஸ் எம்பிவி மாடலானது பிரீமியம், பிரெஸ்டிஜ், பிரெஸ்டிஜ்+, லக்சரி மற்றும் லக்சரி+ (6/7 இருக்கை தேர்வு) என்கிற ஐந்து விதமான ட்ரிம் நிலைகளில் இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் விலை குறைவான பிரீமியம் மற்றும் பிரெஸ்டிஜ் ட்ரிம் நிலைகளை மட்டுமே மேற்கூறப்பட்ட 3 என்ஜின் தேர்வுகளிலும் பெற முடியும். இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.8.99 லட்சங்களில் இருந்து ரூ.11.99 லட்சங்கள் வரையில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

இவை தவிர்த்த மற்ற 3 ட்ரிம் நிலைகளையும் நேச்சுரலி-அஸ்பிரேட் பெட்ரோல் என்ஜின் இல்லாமல், டர்போ-பெட்ரோல் & டீசல் என்ஜின் தேர்வில் மட்டுமே வாங்க முடியும். டர்போ பெட்ரோல் என்ஜின் உடனான மேனுவல் கேரன்ஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10.99 லட்சங்களில் இருந்து ரூ.16.19 லட்சங்கள் வரையில் உள்ளன. அதுவே ஆட்டோமேட்டிக் தேர்வில் கேரன்ஸ் டர்போ-பெட்ரோல் காரின் விலைகள் ரூ.14.59 லட்சம் மற்றும் ரூ.16.99 லட்சமாகும்.

மறுப்பக்கம் டீசல் என்ஜின் உடனான கேரன்ஸ் மேனுவல் காரின் விலைகள் ரூ.10.99 லட்சத்தில் ரூ.16.19 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. டீசல் என்ஜின் உடனான கேரன்ஸ் ஆட்டோமேட்டிக் காரின் விலை தற்சமயம் ரூ.16.99 லட்சங்களாகும். டீசல் என்ஜின் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் கேரன்ஸின் டாப் லக்சரி+ ட்ரிம் நிலை மட்டுமே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
| Model | Petrol Price | Diesel Price |
| Kia Carens | ₹8.99 Lakh - ₹16.99 Lakh | ₹10.99 Lakh - ₹16.99 Lakh |
| Maruti Ertiga | ₹8.12 Lakh - ₹10.85 Lakh | NA |
| Maruti XL6 | ₹10.14 Lakh - ₹12.02 Lakh | NA |
| Mahindra Marazzo | NA | ₹12.80 Lakh - ₹14.92 Lakh |

மேலுள்ள அட்டவணையின் மூலம் கியா கேரன்ஸின் போட்டி மாடல்களின் விலைகள் எந்த அளவில் உள்ளன என்பதை அறியலாம். இந்தியாவின் நம்பர்.01 எம்பிவி மாடலாக விளங்கும் மாருதி எர்டிகாவின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.8.12 லட்சங்களில் இருந்தே துவங்குகின்றன. இதன் பிரீமியம் வெர்சனாக விளங்கும் எக்ஸ்.எல்6 -இன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10.14 லட்சங்களில் இருந்து துவங்குகின்றன. டீசல் என்ஜின் உடன் மட்டுமே கிடைக்கும் மஹிந்திரா மராஸ்ஸோவின் ஆரம்ப விலை ரூ.12.80 லட்சங்களாகும்.


Click it and Unblock the Notifications








