லட்ச கணக்கில் குவியும் புக்கிங்! இந்த கார்களின் விலை, சிறப்பு வசதிகள் பற்றி தெரிஞ்சா நீங்களும் புக் பண்ணுவீங்க
மாருதியின் இரு புதுமுக எஸ்யூவி கார்களுக்கு டிமாண்ட் அதிகரித்துக் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மாருதி சுஸுகி நிறுவனம் தனது எஸ்யூவி கார் பிரிவை வலுவூட்டும் பணியில் மிக தீவிரமாகக் களமிறங்கியிருக்கின்றது. இதன் அடிப்படையில் நிறுவனம் ஏற்கனவே இரு எஸ்யூவி கார்களை நாட்டில் அறிமுகப்படுத்தியிருக்கின்றது. புதிய தலைமுறை பிரெஸ்ஸா மற்றும் கிராண்ட் விட்டாரா ஆகிய இரு கார் மாடல்களையே நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது.

இந்த இரு கார்களுக்கே இந்தியர்கள் மத்தியில் மிக சூப்பரான டிமாண்ட் இந்தியர்கள் மத்தியில் கிடைக்கத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு கார்களும் இணைந்து 1 லட்சத்திற்கும் அதிகமான புக்கிங்குகளைத் தற்போது குவித்திருக்கின்றது.

மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் கிராண்ட் விட்டாரா காருக்கு 26 ஆயிரம் புக்கிங்குகளும், பிரெஸ்ஸா கார் மாடலுக்கு அதிகபட்சமாக 75 ஆயிரம் புக்கிங்குகளும் குவிந்துள்ளன. இதில், கிராண்ட் விட்டாரா காரின் விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே மிக அதிகபட்ச புக்கிங்கை அது குவித்துக் கொண்டிருக்கின்றது.

இருகார்களுக்கும் அதிகளவில் புக்கிங் கிடைத்துக் கொண்டிருப்பதை நிறுவனத்தின் மூத்த நிர்வாக இயக்குநரான ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா அண்மையில் ஈடி ஆட்டோவிற்கு அளித்த பேட்டியின்போது உறுதிப்படுத்தியிருக்கின்றார். அவர், "தங்களது நிறுவனத்தின் இரு தயாரிப்புகளுக்கும் அமோக வரவேற்பு கிடைத்துக் கொண்டிருப்பதாக" கூறினார்.

இதில் மாருதி சுஸுகியின் புதுமுக காராக காட்சியளிக்கும் கிராண்ட் விட்டாரா, டோயோட்டா நிறுவனத்துடனான கூட்டு முயற்சியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வாகனமாகும். இந்த வாகனம் மைல்டு ஹைபிரிட் மற்றும் ஸ்ட்ராங் ஹைபிரிட் என இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இரு தேர்வுகளும் அதிக மைலேஜ் தரக் கூடியவை என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி இந்த கார் ரூ. 9.5 லட்சம் என்கிற மிகக் குறைவான ஆரம்ப விலையில் விற்பனைக்குக் களமிறங்க இருப்பது தெரிய வந்திருக்கின்றது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் நிறுவனம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த விலை ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு மிக கடுமையான சவாலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. விரைவில் வரும் பண்டிகைக் காலத்தை சிறப்பிக்கும் பொருட்டு மாருதி சுஸுகி நிறுவனம் புதிய கிராண்ட் விட்டாரை அறிமுகம் செய்ய இருக்கின்றது. ஆகையால், இதன் வருகை வரும் செப்டம்பருக்குள் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மைல்டு மற்றும் ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் சேர்த்து பன்முக சிறப்பு தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட காராகவும் கிராண்ட் விட்டாரா உருவாக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், ஸ்மார்ட் பிளே ப்ரோ பிளஸ் தொழில்நுட்ப வசதிக் கொண்ட 9.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் திரை, ஹெட்ஸ்-அப் திரை, ஒயர்லெஸ் சார்ஜர், கார் இணைப்பு தொழில்நுட்பம், க்ரூஸ் கன்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட், புஷ் பட்டன் ஸ்டார்ட் / ஸ்டாப் வசதி, சாவியில்லாமல் காருக்குள் நுழைதல் மற்றும் தானாகவே மடக்கிக் கொள்ளும் ஓஆர்விஎம் உள்ளிட்ட அம்சங்கள் கிராண்ட் விட்டாராவில் இடம் பெற்றிருக்கும்.

இதேபோல் அதிக சிறப்பு வசதிகள் கொண்ட காராகவே புதிய தலைமுறை பிரெஸ்ஸா உருவாக்கப்பட்டிருக்கின்றது. இது ரூ. 7.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த குறைந்த விலையின் காரணமாகவே 75 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங்குகளை இக்கார் தற்போது பெற்றிருக்கின்றது.

ஒட்டுமொத்தமாக ஆறு விதமான ட்ரிம்களில் புதிய ப்ரெஸ்ஸா விற்பனைக்குக் கிடைக்கும். எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ, இசட்எக்ஸ்ஐ, இசட்எக்ஸ்ஐ ட்யூவல் டோன், இசட்எக்ஸ்ஐ பிளஸ் மற்றும் இசட்எக்ஸ்ஐ பிளஸ் ட்யூவல் டோன் ஆகியவை அவை ஆகும். இக்காரில் சிறப்பு மற்றும் புதிய அம்சங்கள் பல வழங்கப்பட்டுள்ளன.

பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 9.0 அங்குல ஸ்மார்ட் ப்ளே ப்ரோ பிளஸ் தொழில்நுட்பம் கொண்ட தொடுதிரை, ஆர்கேமிஸ் சவுண்ட் சிஸ்டம், ஒயர்லெஸ் சார்ஜர், பின்பக்கத்திற்கு ஏசி வெண்ட், குரல் கட்டளை சப்போர்ட், கார் இணைப்பு தொழில்நுட்பம், ஹெட்ஸ்-அப் திரை, க்ரூஸ் கன்ட்ரோல், தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல், ஆம்பியன்ட் மின் விளக்கு, டைப் சி ரக சார்ஜர் போர்ட், அலெக்ஸா மற்றும் சன்ரூஃப் உள்ளிட்ட வசதிகளே வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த அம்சங்களின் காரணத்தினாலேயே மக்கள் அமோக ஆதரவை பிரெஸ்ஸாவிற்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








