மாருதி டிசைர் Vs டாடா டிகோர் Vs ஹூண்டாய் அவ்ரா!! சிஎன்ஜி தேர்வில் எதை வாங்குவது சிறந்தது? முழு விபரம்
அதிகரித்துவரும் எரிபொருள் விலைகளை கருத்தில் கொண்டு தனது கார்களில் சிஎன்ஜி தேர்வை வழங்குவதில் மாருதி சுஸுகி நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது. இதன் வெளிப்பாடாக சமீபத்தில் டிசைர் சிஎன்ஜி செடான் கார் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய டிசைர் சிஎன்ஜி காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.14 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது மாருதி டிசைர் பெட்ரோல் வேரியண்ட்களின் விலைகளை காட்டிலும் ஏறக்குறைய ரூ.95,000 அளவில் அதிகமாகும். டிசைர் மட்டுமின்றி தற்சமயம் சப்-காம்பெக்ட் செடான் கார்கள் பிரிவில் மற்ற பிராண்ட்களின் வேறு சில மாடல்களும் சிஎன்ஜி தேர்வை பெறுகின்றன. அவற்றிற்கும், புதிய மாருதி டிசைர் சிஎன்ஜி காருக்கும் இடையேயுள்ள ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

வேரியண்ட்கள் & விலைகள்
புதிய டிசைர் சிஎன்ஜி கார் விஎக்ஸ்ஐ மற்றும் இசட்எக்ஸ்ஐ என இரு விதமான வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் இதற்கு விற்பனையில் போட்டியாக உள்ள டாடா டிகோர் சிஎன்ஜி காரும் இரு வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஆனால் ஹூண்டாய் அவ்ரா ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. விலைகளை பொறுத்தவரையில் மற்ற இரண்டை காட்டிலும் புதிய டிசைர் சிஎன்ஜி ஆனது விலைமிக்கதாக உள்ளது.
| Maruti Dzire | Tata Tigor | Hyundai Aura |
| VXI - ₹8.14 Lakh | XZ - ₹7.69 Lakh | S - ₹7.74 Lakh |
| ZXI - ₹8.82 Lakh | XZ Plus - ₹8.29 Lakh | - |

குறைந்தப்பட்சமாக, டாடா டிகோர் சிஎன்ஜி கார் ரூ.7.69 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கிறது. விலை குறைவானதாக இருப்பினும் ஆரம்ப நிலை டிகோர் சிஎன்ஜி காரில் ஆட்டோமேட்டிக் பிரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், மழை வருவதை உணர்ந்து செயல்படும் வைபர்கள் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா என மற்ற இரண்டை காட்டிலும் ஏகப்பட்ட தொழிற்நுட்ப வசதிகள் வழங்கப்படுகின்றன.

என்ஜின் அம்சங்கள்
தொழிற்நுட்ப அம்சங்களில் டாடா மோட்டார்ஸின் கை ஓங்கி இருந்தாலும், என்ஜின் ஆற்றல் விஷயத்தில் மாருதி சுஸுகி முன்னிலை வகிக்கிறது. புதிய டிசைர் சிஎன்ஜி காரில் வழங்கப்பட்டுள்ள என்ஜின் அதிகப்பட்சமாக 77 பிஎஸ் மற்றும் 98.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதில் குறிப்பாக, டார்க் திறனில் பிரிவில் முதன்மையானதாக மாருதி டிசைர் சிஎன்ஜி விளங்குகிறது.
| Specs | Maruti Dzire | Tata Tigor | Hyundai Aura |
| Engine | 1.2-litre petrol | 1.2-litre petrol | 1.2-litre petrol |
| Power | 77 PS | 73.4 PS | 69 PS |
| Torque | 98.5 Nm | 95 Nm | 95.2 Nm |
| Transmission | 5-speed MT | 5-speed MT | 5-speed MT |
| Capacity | - | 60 litres | 65 litres |

இந்த 3 சிஎன்ஜி சப்-காம்பெக்ட் செடான் கார்களிலும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினே வழங்கப்படுகிறது. ஆனால் டிகோர் சிஎன்ஜி மாடலை தவிர்த்து, மற்ற இரண்டின் என்ஜின் அமைப்பிலும் 4 சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் டிகோர் சிஎன்ஜியின் என்ஜின் அமைப்பில் 3 சிலிண்டர்கள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன. புதிய டிசைர் சிஎன்ஜி காரின் பெட்ரோல் டேங்கின் கொள்ளளவு எவ்வளவு என்பது இன்னும் வெளியிடப்படவில்லை.

எரிபொருள் திறன்
பொதுவாக என்ஜினில் இருந்து அதிக இயக்க ஆற்றல் கிடைத்தால் வாகனத்தின் மைலேஜ் குறைவது வழக்கம். ஆனால் மைலேஜ் அளவுகளிலும் மாருதி சுஸுகியின் டிசைர் சிஎன்ஜி கார் நம்மை ஆச்சிரியப்படுத்துகிறது. ஏனெனில் இந்த சிஎன்ஜி காரில் சுமார் 31.12km/kg மைலேஜை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

| Maruti Dzire | Tata Tigor | Hyundai Aura |
| 31.12 km/kg | 26.49 km/kg | 28 km/kg |
இதனை காட்டிலும் டாடா டிகோர் சிஎன்ஜி காரின் மைலேஜ் 4.5km/kg -உம், ஹூண்டாய் அவ்ரா சிஎன்ஜி காரின் மைலேஜ் ஏறக்குறைய 3km/kg -உம் குறைவாகும். இந்தியாவில் சிஎன்ஜி கார்கள் பெரும்பாலும் மைலேஜ் அளவை பொறுத்தே வாங்கப்படுகின்றன. ஆதலால் அதிகப்படியான மைலேஜ் உடன் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாருதி சுஸுகி டிசைர் சிஎன்ஜி காரின் அறிமுகம் மற்ற சப்-4 மீ சிஎன்ஜி செடான் கார்களுக்கு தலைவலியாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications








