இப்போ தானே அறிமுகமாச்சு!! ஸ்கோடா கோடியாக்கின் விலைகள் ரூ.1 லட்சம் வரையில் அதிகரிப்பு!
ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1 லட்சம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்தும், இந்த ஸ்கோடா கார் குறித்தும் முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் பிரீமியம் தரத்திலான ஸ்கோடா எஸ்யூவி காராக கோடியாக் விளங்குகிறது. ஸ்டைல், ஸ்போர்ட்லைன் மற்றும் லாரின் & கிளெமெண்ட் என்கிற 3 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் கோடியாக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.34.99 லட்சங்களில் இருந்து ஆரம்பிக்கின்றன.

இது கோடியாக்கின் ஸ்டைல் வேரியண்ட்டின் விலையாகும். மற்ற இரண்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.35.99 லட்சங்கள் மற்றும் ரூ.37.49 லட்சங்களாக உள்ளன. கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் காரின் இந்த எக்ஸ்-ஷோரூம் விலைகள் வருகிற மார்ச் மாதம் வரையில் மட்டுமே அமலில் இருக்கும் என தற்போது ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

| Kodiaq | Price (Upto March) | New Price (Effective From April) | Difference |
| Style | ₹34.99 Lakh | ₹35.99 Lakh | +₹1 Lakh |
| Sportline | ₹35.99 Lakh | ₹36.99 Lakh | +₹1 Lakh |
| Laurin & Klement | ₹37.49 Lakh | ₹38.49 Lakh | +₹1 Lakh |
இந்த விலைகளில் தான் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அதிகரிப்பு கொண்டுவரப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கோடியாக்கின் 3 வேரியண்ட்களின் விலைகளும் தலா ரூ.1 லட்சம் அதிகரிக்கப்பட உள்ளதாம். இதனால் இந்த ஸ்கோடா பிரீமியம் எஸ்யூவி காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.35.99 லட்சங்களுக்கு அதிகரிக்கப்பட உள்ளது மட்டுமின்றி, மற்ற இரண்டின் விலைகளும் ரூ.36.99 லட்சம் மற்றும் ரூ.38.49 லட்சம் என உயர உள்ளது.

எங்களுக்கு தெரிந்த வரையில், இந்த புதிய விலைகள் இரண்டாம் தொகுப்பு கோடியாக் கார்களுக்கு பொருந்தும். கடந்த ஜன.10ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் காரின் முதல் தொகுப்பிற்கான முன்பதிவுகள் துவங்கப்பட்ட 24 மணிநேரத்திற்குள் நிறைவு பெற்றது. புக்கிங் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய கால அளவு 5 மாதங்கள் வரையில் தற்சமயம் உள்ளது.

புதிய கோடியாக்கில் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இதே என்ஜினை தான் சூப்பர்ப் & ஆக்டேவியா செடான் கார்களிலும் ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் வழங்குகிறது. அதிகப்பட்சமாக 190 பிஎஸ் மற்றும் 320 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 7-ஸ்பீடு இரட்டை-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. இது என்ஜினின் ஆற்றலை காரின் நான்கு சக்கரங்களுக்கும் வழங்குகிறது.

0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 7.8 வினாடிகளில் எட்டிவிடக்கூடியதாக கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் விளங்குகிறது. ஸ்கோடாவின் முழு-அளவு எஸ்யூவி காராக விளங்கும் கோடியாக்கிற்கு டொயோட்டா ஃபார்ச்சூனர், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 மற்றும் எம்ஜி க்ளோஸ்டர் உள்ளிட்டவை போட்டியாக உள்ளன. மேலும், ஜீப்பின் புதிய 3-வரிசை எஸ்யூவி மாடலும் போட்டியாக விளங்கவுள்ளது.

முந்தைய கோடியாக் உடன் ஒப்பிடுகையில் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஏகப்பட்ட காஸ்மெட்டிக் மாற்றங்களை பெற்றுள்ளது. இந்த வகையில் சுற்றிலும் க்ரோம் தொடுதல்கள் உடன் புதிய டிசைனில் அறுகோண வடிவ க்ரில், காரின் உடல் நிறத்தில் பம்பர் மற்றும் கிரிஸ்டைலைன் எல்இடி ஹெட்லைட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

பின்பக்கத்தில் 'SKODA' என்கிற வார்த்தைகளுடன் டர்ன் இண்டிகேட்டர்களை கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் பெற்றுள்ளது. அத்துடன் புதிய தொகுப்பில் இரட்டை-நிற அலாய் சக்கரங்கள் மற்றும் செயல்பாடுகளை கொண்ட சில்வர் நிற மேற்கூரை தண்டவாள கம்பிகள் போன்றவற்றையும் புதிய கோடியாக் மாடல் ஏற்று வந்துள்ளது. இந்த ஃபேஸ்லிஃப்ட் காரின் உட்புற கேபின் ஆனது கருப்பு மற்றும் பழுப்பு நிறங்களில் வடிவமைக்கப்படுகிறது.

இதன் கேபினில் சொந்த நிறுவன நாவிகேஷன் மற்றும் வயர் இல்லா இணைப்பு உடன் 8-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 3-நிலை ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் கதவுகளில் 12-ஸ்பீக்கர் கார்பன் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

இவற்றுடன் கோடியாக் ஃபேஸ்லிஃப்ட்டின் கேபினில் குளிர்விப்பான் & ஹீட்டிங் செயல்பாட்டுடன் மடக்கும் வசதி கொண்ட முன் இருக்கைகள், சுற்றிலும் விளக்குகள் மற்றும் எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பனோராமிக் சன்ரூஃப் போன்றவற்றையும் ஸ்கோடா வழங்குகிறது. இந்தியாவில் கோடியாக் எஸ்யூவி காரினை கிட்டத்தட்ட 2 வருடங்களாக ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் நிறுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








