2022ஆம் ஆண்டிற்கான ஸ்கோடா கோடியாக் கார்கள் விற்று தீர்ந்தன!! வெறும் 20 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் காருக்கான இந்த ஆண்டிற்கான முன்பதிவுகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளன. இதுகுறித்தும், இந்த பிரீமியம் ஸ்கோடா எஸ்யூவி கார் குறித்து விரிவாக இனி தொடர்ந்து பார்ப்போம்.

ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் கடந்த ஜனவரி 10ஆம் தேதி அதன் புதிய எஸ்யூவி காராக கோடியாக்கின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை அறிமுகப்படுத்தியது. குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் கோடியாக்கின் புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடாக கொண்டுவரப்பட்டுள்ள இதனை 1,200 யூனிட்கள் மட்டுமே நடப்பு 2022ஆம் ஆண்டில் விற்பனை செய்யும் முடிவில் ஸ்கோடா இறங்கியது.

அதன்படி துவங்கப்பட்ட கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவுகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளன. அதாவது இந்த ஆண்டிற்காக நிர்ணயிக்கப்பட்ட ஸ்கோடா கோடியாக் கார்கள் அனைத்து விற்று தீர்ந்ததாக ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் ஸாக் ஹோலிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளார்.

இந்த ஃபேஸ்லிஃப்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் அறிவிக்கப்பட்டு வெறும் 20 நாட்களுக்குள் 1,200 கோடியாக் கார்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பாகங்களாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, இங்குள்ள ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் அவ்ரங்காபாத் தொழிற்சாலையில் முழு காராக உருவாக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் கார்கள் டெலிவிரி செய்யப்பட உள்ளன.

இந்த எஸ்யூவி கார்களை முன்பதிவு செய்தவர்கள் டெலிவிரிக்காக காத்திருக்க வேண்டிய கால அளவு அதிகப்பட்சமாக 4 மாதங்கள் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் கார்களின் இரண்டாம் தொகுப்பு இந்தியாவிற்கு எப்போது கொண்டுவரப்படும் என்பது தெரியவில்லை. முன்பதிவு செய்ய திட்டமிட்டு நழுவவிட்டீர்கள் என்றால், கவலை வேண்டாம்.

ஏனெனில் இப்போதும் சில டீலர்ஷிப்களில் ரத்து செய்தல் உள்ளிட்ட காரணங்களால் சில புதிய கோடியாக் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கலாம். ஏனெனில் இதேபோன்றுதான், ஸ்கோடா அதிகாரப்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட யூனிட்கள் அனைத்தும் விற்று தீர்ந்ததாக அறிவித்திருந்தாலும், சில டீலர்ஷிப்களில் ஆக்டேவியா ஆர்எஸ்245 மற்றும் கரோக் கார்கள் கிடைத்தன.

ஆதலால் எதற்கும் அருகில் உள்ள டீலர்ஷிப் மையத்தினை அணுகவும். முன்னதாக டுவிட்டரில், இதற்கு அடுத்துவரும் கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் காரின் தொகுப்புகள் சற்று அதிக விலையுடனே கொண்டுவரப்படும் என ஸாக் ஹோலிஸ் தெரிவித்திருந்தார். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இரண்டாவது தொகுப்பின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் 2-இல் இருந்து 4 சதவீதம் வரையில் அதிகமாக நிர்ணயிக்கப்படலாம்.

புதிய ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் காரின் அறிமுக ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.34.99 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. இந்தியாவில் ஸ்டைல், ஸ்போர்ட்லைன் மற்றும் லாரின் & கிளெமெண்ட் (L&K) என மூன்று விதமான வேரியண்ட்களில் புதிய கோடியாக் எஸ்யூவி கார் அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்டைல் வேரியண்ட் இறுதியாக கொண்டிருந்த விலை தான் ரூ.34.99 லட்சமாகும். மற்ற இரண்டும் ரூ.35.99 லட்சங்கள் மற்றும் ரூ.37.49 லட்சங்களை விலைகளாக கொண்டிருந்தன.

சமீபத்தில் முன்பதிவுகள் நிறுத்தப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் புதிய கோடியாக்கின் விலைகள் வருகிற ஏப்ரல் மாதத்தில் இருந்து தலா ரூ.1 லட்சம் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி இருந்தன. இந்த விலை ஏற்றதால் இந்த பிரீமியம் தர எஸ்யூவி காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.35.99 லட்சங்களாக அதிகரிக்க உள்ளது. அதேபோல் மற்றவை இரண்டின் விலைகள் ரூ.36.99 லட்சங்கள் மற்றும் ரூ.38.49 லட்சங்களாக உயர உள்ளது.

வருகிற ஏப்ரலில் இருந்து கோடியாக்கின் விலைகள் அதிகரிக்கப்பட உள்ளதாக இந்த அறிவிப்பு முன்பு வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது 2022ஆம் ஆண்டிற்கான கோடியாக் கார்கள் அனைத்தும் விற்று தீர்க்கப்பட்டுள்ளதாக ஸாக் ஹோலிஸ் தெரிவித்துள்ளார். ஆதலால், புதிய கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் காருக்கான இரண்டாவது தொகுப்பிற்கான விலை ஏற்றமாகவே இது இருக்க வேண்டும்.

கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் காரில் அதிகப்பட்சமாக 190 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜினை 7-ஸ்பீடு இரட்டை-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் ஸ்கோடா நிறுவனம் வழங்கியுள்ளது. விற்பனையில் இந்த ஸ்கோடா எஸ்யூவி காருக்கு ஃபோக்ஸ்வேகன் டிகுவான், எம்ஜி க்ளோஸ்டர், டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன.


Click it and Unblock the Notifications








