புதுமுக கார்களை களமிறக்க தயார்நிலையில் முன்னணி நிறுவனங்கள்! வருஷம் முடியபோதுனுகூட பாக்கல! நிறைய அறிமுகமாகபோது!
முன்னணி நிறுவனங்கள் சில நடப்பு நவம்பர் மாதத்தில் புதுமுக கார்களைக் களமிறக்க இருக்கின்றன. அவைகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

நடப்பு 2022 ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் 9க்கும் குறைவான வாரங்களே உள்ளன. இதற்குள்ளாக தாங்கள் திட்டமிட்டபடி புதிய கார் மாடல்களை இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர வேண்டும் என்பதில் சில நிறுவனங்கள் மிக உறுதியாக இருக்கின்றன. இதன் அடிப்படையில் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் நடப்பு நவம்பர் மாதத்திலேயே தங்களுடைய புதுமுக மற்றும் அப்டேட் செய்யப்பட்ட வாகனங்களை அறிமுகம் செய்துவிட வேண்டும் என்பதில் திட்டவட்டமாக உள்ளன.

அந்தவகையில் இந்திய சந்தையை விரைவில் வந்தடைய இருக்கும் கார் மாடல்கள் பற்றிய சிலவற்றை பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி, இந்திய சந்தையில் இந்த 2022 நவம்பரில் ஜீப் கிராண்ட செரோக்கி, பிஒய்டி அட்டோ 3, டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ், பிரவைக் எக்ஸ்டிங்க்சன் எம்கே1 எலெக்ட்ரிக் கார் மற்றும் ஐந்து கதவுகள் கொண்ட ஃபோர்ஸ் கூர்கா ஆகிய கார்கள் அறிமுகமாக இருக்கின்றன இந்த கார்கள் பற்றிய முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஜீப் கிராண்ட் செரோக்கி (Jeep Grand Cherokee)
ஜீப் நிறுவனம் அதன் கிராண்ட் செரோக்கி கார் மாடலை இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. மேலும், இதன் வருகையை மேற்கொள்ள இருக்கும் நாளையும் அது ஏற்கனவே உறுதி செய்துவிட்டது. இந்த மாதம் 11ம் தேதி அன்றே ஜீப் கிராண்ட் செரோக்கியின் மறுகை அமைய இருக்கின்றது.

இந்த சொகுசு காரை ஜீப் நிறுவனம் சிகேடி வாயிலாக விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. முந்தைய வெர்ஷனைக் காட்டிலும் இது குறைவான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கணிசமான காஸ்மெட்டிக் மாற்றம் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்ப்பு ஆகியவற்றுடன் கிராண்ட் செரோக்கி எதிர்பார்க்கப்படுகின்றது.

பிஒய்டி அட்டோ 3 (BYD Atto 3)
சீனாவைச் சேர்ந்த நிறுவனம் பிஒய்டி. இந்நிறுவனம் மின் வாகன உற்பத்தியை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றது. ஏற்கனவே இ6 எனும் எலெக்ட்ரிக் கார் மாடலை இந்நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதனுடன் சேர்த்து இரண்டாவது கார் மாடலாக அட்டோ 3-யையும் நிறுவனம் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.

இது ஓர் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் காராகும். ரூ. 20 முதல் ரூ. 25 லட்சம் வரையிலான விலையில் இக்கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதிகபட்ச ரேஞ்ஜை வழங்குவதற்காக இந்த எலெக்ட்ரிக் காரில் பிஒய்டி நிறுவனம் 60.48 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கை பயன்படுத்த இருக்கின்றது. இத்துடன், 201 பிஎச்பி பவர் மற்றும் 310 என்எம் டார்க்கை வழங்கும் மின் மோட்டாரையும் இந்த வாகனத்தில் நிறுவனம் பயன்படுத்த இருக்கின்றது. இதன் அறிமுகம் நவம்பர் 16 அன்று அரங்கேற இருக்கின்றது.

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் (Toyota Innova Hycross)
டொயோட்டா நிறுவனத்தின் புகழ்மிக்க கார் மாடல்களில் இன்னோவாவும் ஒன்று. இந்த கார் மாடலிலேயே புதிய தேர்வை வழங்க இருக்கின்றது, டொயோட்டா. இன்னோவா ஹைகிராஸ் எனும் மாடலையே நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இது அறிமுகத்தைக் காணவிருக்கும் நாள் வரும் 21ம் தேதி ஆகும். இந்த நாளில் இந்தோனேசியாவிலேயே அறிமுகம் காண இருக்கின்றது.

இதைத்தொடர்ந்து இந்தியாவில் வரும் 25ம் தேதி இன்னோவா ஹைகிராஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பனோரமிக் சன்ரூஃப், ஹைபிரிட் தொழில்நுட்பம் என எக்கசக்க அம்சங்களுடன் இந்த வாகனம் எதிர்பார்க்கப்படுகின்றது. 2.4 லிட்டர் டீசல் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் ஆகிய இரு மோட்டார் தேர்வுகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும். இதில் பெட்ரோல் மோட்டாரிலேயே ஹைபிரிட் வசதி வழங்கப்பட இருக்கின்றது.

பிரவைக் எக்ஸ்டிங்க்சன் எம்கே1 (Pravaig Extinction MK1)
பெங்களுரூவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனமே பிரவைக். இந்நிறுவனம் மின் வாகன உற்பத்தியில் களமிறங்கிய பின்னர் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கும் முதல் எலெக்ட்ரிக் காரே இந்த எக்ஸ்டிங்க்சன் எம்கே1 ஆகும். இதனை இந்தியாவின் டெஸ்லா மின்வாகன பிரியர்கள் செல்லமாக அழைக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

அதிக சொகுசு அம்சங்கள் கொண்ட இந்த எலெக்ட்ரிக் காரை பிரவைக் டைனமிக்ஸ் வரும் 25ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கின்றது. ஆம், டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் அறிமுகம் செய்யப்பட இருக்கின்ற அதே நாளிலேயே இந்த காரும் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் வாகனம் ஓர் சிங்கிள் சார்ஜில் 504 கிமீ ரேஞ்ஜை வழங்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஃபோர்ஸ் கூர்கா (Force Gurkha five-door)
ஃபோர்ஸ் நிறுவனம் இந்தியாவில் மஹிந்திரா தார் காருக்கு போட்டியாக கூர்கா எஸ்யூவி காரை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஆஃப்-ரோடு பயணத்தை விரும்புவோர்கள் மத்தியில் இந்த காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த கார் மாடலின் ஐந்து கதவுகள் கொண்ட வெர்ஷனையே ஃபோர்ஸ் நிறுவனம் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதன் அறிமுகம் இந்த மாதத்தின் இறுதிக்குள் அரங்கேறிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலே பார்த்த இந்த கார் மாடல்களே 2022 நவம்பரை அலங்கரிக்கும் வகையில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கின்றது. கார் மாடல்கள் மட்டுமின்றி சில புதுமுக இருசக்கர வாகனங்களும் இந்த மாதத்தில் அறிமுகமாக இருக்கின்றன. ஆகையால், நடப்பு நவம்பர் மாதம் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன பிரியர்களுக்கு விருந்தளிக்கும் மாதமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
குறிப்பு: படங்கள் சில உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications








