இந்தியாவில் ஓங்கி ஒலிக்கும் டாடா நெக்ஸானின் குரல்... பாதுகாப்பான காருக்கு கிடைத்த புதிய அங்கீகாரம்!
இந்தியாவின் மிக அதிகம் விற்பனையாகும் காம்பேக்ட் எஸ்யூவி கார் என்ற மகுடத்தை டாடா நெக்ஸான் (Tata Nexon) சூடியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

இந்தியாவில் டாடா நெக்ஸானின் (Tata Nexon) குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றது. ஆமாங்க, இந்த காம்பேக்ட் எஸ்யூவி ரக காருக்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரேவற்புக் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றது. விலை குறைவான மற்றும் மைலேஜ் அதிகம் தரக் கூடிய கார் மாடல்களுக்கே இந்தியர்கள் நல்ல வரவேற்பை வழங்குவார்கள் என்கிற கருத்தை மாற்றும் வகையில், உச்சபட்ச பாதுகாப்பு வசதிகள் கொண்ட நெக்ஸானுக்கு மிக மிக சிறப்பான வரவேற்பை வழங்க ஆரம்பித்துள்ளனர்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு வழங்கும் அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட கார் மாடல்களில் நெக்ஸானும் ஒன்று. குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் இந்த கார் மிக சிறப்பாக செயலாற்றி ஐந்திற்கு ஐந்து ஸ்டார்கள் ரேட்டிங்கை பெற்று நிறுவனத்திற்கு பெருமை சேர்த்தது.

இந்த சம்பவத்தை நிகழ்த்தியதில் இருந்தே இக்காருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இதன் விளைவாக தற்போது இந்தியாவின் மிக சிறப்பாக விற்பனையாகும் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் என்ற மகுடத்தை நெக்ஸான் சூடியிருக்கின்றது. கடந்த 2022 ஏப்ரல் மாதத்தில் 94 சதவீதம் விற்பனை வளர்ச்சியை பெற்றதன் வாயிலாகவே இந்த இடத்தை நெக்ஸானால் பிடிக்க முடிந்துள்ளது.

இந்த சூப்பரான டிமாண்டை முன் வைத்தே இக்காரின் குரல் நாட்டில் ஓங்கி ஒலிக்க தொடங்கியிருப்பதாக நாங்கள் குறிப்பிட்டுள்ளோம். ஒற்றை கார் மாடல் 94 சதவீதம் விற்பனை வளர்ச்சியை பெறுவது என்பது மிகுந்த ஆச்சரியமளிக்கும் விஷயம் ஆகும். இதனை யாராலும் மறுக்க முடியாது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த தயாரிப்பிற்கு (நெக்ஸானுக்கு) மட்டுமில்லைங்க, அதன் பிற தயாரிப்புகளுக்கும் நல்ல டிமாண்ட் ஏற்பட தொடங்கியுள்ளது. இதன் விளைவாக அதிகம் விற்பனையாகும் கார் நிறுவனங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கின்றது, டாடா.

முதல் இடத்தில் மாருதி சுஸுகியும், இரண்டாவது இடத்தில் ஹூண்டாயும், இதற்கு அடுத்ததாக 41,590 யூனிட்டுகள் விற்பனையுடன் மூன்றாவது இடத்தை டாடா மோட்டார்ஸும் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 65.7 சதவீதம் அதிக விற்பனை ஆகும்.

இந்த உச்சபட்ச வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக நெக்ஸான் இருக்கின்றது. அதாவது, நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவிக்கு கிடைத்த அமோக வரவேற்பின் காரணத்தினாலயே டாடா மோட்டார்ஸ் மூன்றாவது இடத்தில் அமர்ந்துள்ளது. ஒட்டுமொத்த டாடா கார்கள் விற்பனையில் நெக்ஸான் தனித்து நின்று 13,471 யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கின்றது.

டாடா நிறுவனம், நெக்ஸான் உடன் சேர்த்து டியாகோ, டிகோர், பஞ்ச், ஹாரியர், சஃபாரி, டிகோர் இவி மற்றும் நெக்ஸான் இவி உள்ளிட்ட கார் மாடல்களை நாட்டில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இவற்றில் நெக்ஸான் மற்றும் நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் ஆகிய இரண்டிற்கும் தரமான டிமாண்ட் நிலவி வருகின்றது. இதனையே 2022 ஏப்ரல் மாத விற்பனை நிலவரம் நமக்கு தெரியப்படுத்தியுள்ளது.

டாடா மோட்டார்ஸ் விரைவில் நெக்ஸான் இவி-யின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. அது நெக்ஸான் இவி மேக்ஸ் () எனும் புதிய பெயரில் இந்திய மின்வாகன சந்தையைக் களம் காண இருக்கின்றது. அதிக ரேஞ்ஜ் மற்றும் கூடுதல் திறன் வெளிப்பாடு ஆகிய சிறப்பு வசதிகளுடன் நெக்ஸான் இவி மேக்ஸ் காரை டாடா மோட்டார்ஸ் உருவாக்கியிருக்கின்றது.

அதாவது, 400க்கும் அதிகமான கிமீ ரேஞ்ஜ் திறன் கொண்ட பெரிய பேட்டரி பேக் போன்ற கூடுதல் சிறப்பு வசதிகளுடன் நெக்ஸான் இவி மேக்ஸை டாடா உருவாக்கியுள்ளது. இந்த மாதிரியான வசதிகளுடனேயே இன்னும் ஒரு சில தினங்களில் எலெக்ட்ரிக் கார் வெளியீட்டை பெற இருக்கின்றது.

இந்திய சந்தையில் டாடா நெக்ஸானின் எரிபொருள் வெர்ஷன் ரூ. 7.54 லட்சம் தொடங்கி ரூ. 13.90 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான தேர்வுகளிலும் அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதேபோல் மின்சார வெர்ஷனிலும் இக்கார் விற்பனைக்கு கிடைக்கின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 14.79 லட்சம் ஆகும். உச்ச நிலை தேர்வின் விலை ரூ. 17.40 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.


Click it and Unblock the Notifications