டோட்டலா மாறி வரப்போகுது... புதிய தலைமுறை மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காருக்கு முன்பதிவு தொடக்கம்!
புதிய தலைமுறை மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் ஒன்று மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா. இதன் புதிய தலைமுறை மாடல் வெகு விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அனேகமாக அடுத்த மாதமே மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவின் புதிய தலைமுறை மாடல் விற்பனைக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு முன்னதாக இந்தியா முழுவதும் உள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஒரு சில அரேனா டீலர்ஷிப்களில், புதிய தலைமுறை விட்டாரா பிரெஸ்ஸா காருக்கு தற்போது முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 5,000 ரூபாய் என்ற முன்தொகையுடன், முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இது அதிகாரப்பூர்வமானது கிடையாது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவின் புதிய தலைமுறை மாடல், 'விட்டாரா' என்பதை இழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது வெறும் 'பிரெஸ்ஸா' என்ற பெயரில்தான் இந்த எஸ்யூவி அழைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் முன் பகுதியில் முற்றிலும் புதிய க்ரில், ஸ்போர்ட்டியான அலாய் வீல்கள், ரீ-டிசைன் செய்யப்பட்ட பம்பர்கள் ஆகியவை இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் காரை சுற்றிலும் வழங்கப்பட்டுள்ள கருப்பு நிற பிளாஸ்டிக் க்ளாடிங், முன்பை விட தடிமனாக இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிப்புறத்தை போலவே, உட்புறத்திலும் முற்றிலும் புதிய டிசைனை 2022 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதன்படி புதிய டேஷ்போர்டு, பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், தட்டையான அடிப்பாகம் கொண்ட மல்டி-ஃபங்ஷன் ஸ்டியரிங் வீல், புதிய அப்ஹோல்ஸ்ட்ரி ஆகியவை வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

அத்துடன் பழைய மாடலுடன் ஒப்பிடுகையில், புதிய மாடலில் பல்வேறு புதிய வசதிகளும் வழங்கப்படவுள்ளன. புதிய தலைமுறை மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரில், எலெக்ட்ரிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், முன் பகுதியில் வென்டிலேட்டட் இருக்கைகள், பேடில் ஷிஃப்டர்கள், 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி பார்க்கிங் கேமரா, சுஸுகி கனெக்ட் (கனெக்டட் கார் தொழில்நுட்பம்), டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற வசதிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் 2022 பிரெஸ்ஸா காரில் மாருதி சுஸுகி நிறுவனம், புதிய K15C இன்ஜினை வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்டேட் செய்யப்பட்டு சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட 2022 மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் 2022 மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 ஆகிய கார்களிலும் இதே இன்ஜின்தான் வழங்கப்பட்டுள்ளது.

இந்த 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 103 பிஎஸ் பவரையும், 136.8 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் புதிய 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படலாம். ஒட்டுமொத்தத்தில் பழைய மாடலை காட்டிலும், புதிய மாடல் முற்றிலும் மேம்படுத்தப்பட்டிருக்கும்.

இதன் காரணமாக தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் மாடலை காட்டிலும், புதிய தலைமுறை மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் விலை அதிகமாக இருக்கலாம். இந்திய சந்தையில், டொயோட்டா அர்பன் க்ரூஸர், டாடா நெக்ஸான், கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, மஹிந்திரா எக்ஸ்யூவி300, ரெனால்ட் கைகர் மற்றும் நிஸான் மேக்னைட் போன்ற கார்களுடன், புதிய தலைமுறை மாருதி சுஸுகி பிரெஸ்ஸா தொடர்ந்து போட்டியிடும்.

புதிய தலைமுறை மாருதி சுஸுகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஒரு சில வாரங்களில், டொயோட்டா அர்பன் க்ரூஸர் காரின் புதிய தலைமுறை மாடலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட மாடல்தான் டொயோட்டா அர்பன் க்ரூஸர் என்பது இங்கே குறிப்பிடத்தகுந்த விஷயம் ஆகும்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








